Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 26, 2016

‘ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை வெளியிட வேண்டும்’ மத்திய அரசுக்கு முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி வலியுறுத்தல்


பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் விருப்பம்

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் அந்த நாட்டிடம் இருந்து 36 அதிநவீன ரபேல் ரக போர் விமானங்கள் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ் நீண்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தன.

பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணம் முடிந்து 16 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் ராணுவ மந்திரி ஜீயன் யுவெஸ் லீ டிரியன், 22–ந் தேதி டெல்லி வந்தார். அவருடன் ரபேல் விமானங்களை தயாரித்து வழங்கும் தசால்வ்த் விமான நிறுவன அதிகாரிகளும் வந்தனர்.

ஒப்பந்தம்

மத்திய ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கரை, பிரான்ஸ் ராணுவ மந்திரி ஜீயன் யுவெஸ் லீ டிரியன் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டு, இருவரும் கையெழுத்திட்டனர். இந்த விமானங்களின் விலை மதிப்பு 7.87 பில்லியன் யூரோ (சுமார் ரூ.59 ஆயிரம் கோடி) ஆகும். இது தொடர்பாக முறையாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

‘இந்த விமானங்கள் போதாது’

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான ஏ.கே. அந்தோணி, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரியுடன் டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்தார்.

அப்போது ஏ.கே. அந்தோணி கூறும்போது, ‘‘ 36 ரபேல் ரக விமானங்கள் வாங்குவது பாதுகாப்பு படைகளுக்கு போதுமானது அல்ல’’ என்றார். அத்துடன், ‘‘வெறும் 36 விமானங்களை வாங்கி, சீனா, பாகிஸ்தானுடன் ஏற்படுகிற இடைவெளியை இந்தியா நிரப்பப்போவது எப்படி?’’ என வியப்பு தெரிவித்தார்.

மத்திய அரசின் திட்டம் என்ன?

மேலும் அவர் கூறும்போது, ‘‘ காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் நாட்டின் பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு இந்திய விமானப்படையை பலப்படுத்தும் விதத்தில் 126 விமானங்களை வாங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டோம். அப்படி இருக்கும்போது, இப்போது எதற்காக 36 விமானங்களை மட்டுமே வாங்குகின்றனர்?’’ என்று கேட்டார்.

‘‘42 படைப்பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படையின் செயல்பாட்டு தேவைகளுக்கு இந்த விமானங்கள் போதுமா? தற்போது 32 படைப்பிரிவுகள்தான் இருக்கின்றனவா?’’ எனவும் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி, ‘‘உண்மையிலேயே விமானப்படை தற்போது மேலும் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. அப்படி இருக்கிறபோது எப்படி இந்திய விமான படைக்கு கூடுதல் விமானங்களை வழங்கப்போகிறீர்கள்? மத்திய அரசின் திட்டம்தான் என்ன?’’ எனவும் ஏ.கே. அந்தோணி கேட்டார்.

அரசு வெளியிட வேண்டும்

தொடர்ந்து ஏ.கே. அந்தோணி நிருபர்களிடம் பேசும்போது, ‘‘சரியான தகவல்களை தெரிந்துகொள்ளாமல், விமானங்களின் விலை விவரம் பற்றி தற்போது கருத்து தெரிவிக்க மாட்டேன். இறுதி ஒப்பந்தம் பற்றிய முழுமையான தகவல்களை அரசு வெளியிட வேண்டும். கடினமான பேச்சுவார்த்தைகள் நடத்தி பெரிய அளவில் பணத்தை சேமித்துள்ளதாக தற்போதைய அரசு கூறியதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில் உண்மை இல்லை. ரபேல் விமான விலை பேரத்தில், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தையும், தற்போதைய ஆட்சிக்காலத்தையும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்’’ எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.