Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 8, 2016

' 1,700 கோடியும் ஆட்டைய போடத்தானா?' -சுகாதாரத்துறையைச் சுற்றும் வில்லங்கம்


அரசு மருத்துவமனை கட்டடங்களைக் கட்டும் பணியை பொதுப்பணித் துறைக்கு அளிக்காமல், சுகாதாரத்துறையே கட்டும் முடிவுக்கு வந்துவிட்டது. ' அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் வேண்டப்பட்ட தனியார் கம்பெனிக்காகவே விதிகளைத் தளர்த்தியிருக்கிறார்கள்' எனக் கொந்தளிக்கின்றனர் ஒப்பந்ததாரர்கள்.

தமிழக சுகாதாரத்துறையின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, உலக வங்கி நிதியில் இருந்து 1,700  கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து புதிய கட்டடம், பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடக்க இருக்கின்றன. " அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகளுக்குப் புதிய கட்டடம் கட்டுவது முதல் உயிர் காக்கும் கருவிகள் கொள்முதல் செய்யப்படுவது வரையில் இவற்றின் பணி மிக முக்கியமானது. ஆனால், எப்போதும் இல்லாத வகையில், தனியார் கம்பெனிகள் சிலவற்றிற்காக விதிமுறைகளைத் திருத்தம் செய்கின்றனர் அதிகாரிகள்" எனக் கொந்தளித்தார் சுகாதாரத்துறை ஒப்பந்ததாரர் ஒருவர்.

அவர் நம்மிடம், " உலக வங்கி நிதியில் இருந்து மருத்துவமனை கட்டடப் பணிகளுக்காக 1,418 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பொதுப்பணித் துறை மூலம் செய்யாமல், ' மருத்துவப் பணிகள் கழகம் மூலமே கட்டுவது' என பத்து நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் முடிவு செய்துவிட்டனர். மருத்துவமனைகளின் சேவையை தரம் உயர்த்தும் வேலையில் ஈடுபடாமல், கட்டடப் பணிகளில் கவனம் செலுத்துகின்றனர். இந்தப் பணிகள் அனைத்தும், நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றிற்கே அளிக்கப்பட இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் அமைச்சரும் அதிகாரிகளும் தீவிர அக்கறை செலுத்துகின்றனர். இவர்களின் சிண்டிகேட்டால், அரசை நம்பிப் பிழைப்பு நடத்தும் எளிய ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கரை சந்திக்கச் சென்றாலும், அனுமதி கிடைப்பதில்லை. செயலரின் கவனத்திற்கும் விஷயத்தைக் கொண்டு சென்றிருக்கிறோம்.



இது ஒருபுறம் இருந்தாலும், மருத்துவப் பணிகள் கழகம் மூலம் உயிர் காக்கும் கருவிகள் வாங்குவதற்கான 600 ஒப்பந்தங்களைக் கிடப்பில் போட்டுவிட்டனர். இந்த ஒப்பந்தங்களை கிளியர் செய்வதற்காக, முன்பைவிட அதிகளவில் கமிஷன் கேட்கின்றனர். கருவியின் விலை அளவுக்குக் கமிஷன் கேட்டால், நாங்கள் எங்கே செல்வது? இதனால், அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய கருவிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். பல மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதற்கான காரணம் குறித்தெல்லாம் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் கவலையில்லை. இவர்களின் கமிஷன் தொல்லையால், பல ஒப்பந்தாரர்கள் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். சுகாதாரத்துறையின் சீர்கேட்டுக்கு முதல்வர் சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார் வேதனையோடு.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக அதிகாரி ஒருவரிடம் பேசினோம். " பொதுப் பணித்துறை மூலம் கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அவர்களுக்காக நாங்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கட்டடப் பணிகளைச் செய்து முடிப்பதில் தாமதம்; பராமரிப்பு பணிகளில் சுணக்கம் காட்டுவது என காலவிரயம்தான் ஏற்படுகிறது. மத்திய அமைச்சராக அன்புமணி இருந்த சமயத்தில், சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைக் கொண்டு வந்தார். கடந்த வாரம் அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. அவசர சிகிச்சைப் பிரிவுக்கே இதுதான் நிலை. நாங்களே கட்டடப் பணிகளை எடுத்துக் கொண்டு செய்யும்போது, மருத்துவமனையின் கட்டமைப்புக்கு ஏற்றார்போல, மாற்றிக் கொள்ள முடியும். பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். தகுதியான நிறுவனத்தைத் தேர்வு செய்வது முதல் பணிகள் நிறைவடையும் வரையில், விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அனைத்தும் நடக்கிறது. மற்றபடி, எவ்வித முறைகேட்டுக்கும் நாங்கள் இடம் கொடுப்பது இல்லை" என்றார் விரிவாக. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.