Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

September 19, 2016

‘நம்ம பயலுக’ தூத்துக்குடி #TNPL சாம்பியன்


அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் மிரட்ட,  முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து கணேசமூர்த்தி பவுலிங்கில் அசத்த, சேப்பாக்கம் அணியை வீழ்த்தி, #tnpl சாம்பியன் பட்டத்தை வென்றது  தூத்துக்குடி அணி.

ஒரு மாதமாக நெல்லை, நத்தம் மற்றும் சென்னையில் நடந்த, தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரின் ஃபைனல் சேப்பாக்கத்தில் 22,000 ரசிகர்கள் முன்னிலையில்  நடந்தது. எட்டு அணிகள் பங்கேற்ற டிஎன்பிஎல் தொடரின் முதல் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் ஃபைனலில், சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் - டூட்டி (தூத்துக்குடி) பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.  தூத்துக்குடி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

 ஆரம்பமே அமர்க்களம்:
கவுசிக் காந்தி, அபினவ் முகுந்த் ஓபனிங் இறங்கினர். சதீஷ் வீசிய முதல் ஓவரில் கவுசிக் காந்தி ஸ்ட்ரெய்ட் டிரைவ் மூலமும், அபினவ் முகுந்த் கவர் டிரைவ் மூலமும் பவுண்டரி அடித்தனர். அலெக்ஸாண்டர் வீசிய மூன்றாவது ஓவரி்ல் முதல் சிக்ஸரை பறக்க விட்டார் கவுசிக்.அஷ்வத் முகுந்தன்  ஓவரில் அபினவ் முகுந்த் 4 பவுண்டரி விரட்டி ‘வச்சு’ செஞ்சார்.

இந்த ஜோடியை பிரிக்க நினைத்து,  யோ மகேஷ் கையில் பந்தைக் கொடுத்தார் கேப்டன் சதீஷ். ஆனால் அந்த ஓவரில் கவுசிக் அட்டகாசமாக தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். அதேபோல ஆன்டனி தாஸ் பந்தில் அபினவ் தன் பங்குக்கு 2 பவுண்டரி விளாசினார். இதற்கிடையே கவுசிக் இந்த தொடரில் தன் மூன்றாவது அரை சதத்தையும்,  அபினவ் தன் இரண்டாவது  அரைசதத்தையும் பதிவு செய்தனர்.

அரைசதம் அடித்த பின் இருவரும் அதிரடிக்கு மாறினர். அலெக்சாண்டர் வீசிய 13வது ஓவரில் லாங் ஆனில் சிக்ஸர் பறக்க விட்ட அபினவ் முகுந்த், சாய் கிஷோர் பந்தில் இரண்டு பவுண்டரி விரட்ட சேப்பாக்கம் வீரர்கள் சோர்வடைந்தனர். ஒரு வழியாக 59 ரன்கள் எடுத்திருந்தபோது  கவுசிக் காந்தி ஆட்டமிழக்க, சேப்பாக்கம் வீரர்கள் ‘அப்பாடா’ என திருப்தி அடைந்தனர். கவுசிக்- அபினவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 132 (84) ரன்கள் எடுத்திருந்தது.

கிளாசிக்  தினேஷ் கார்த்திக்:
அடுத்து அபினவ் முகுந்த் உடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், ஆன்டனி தாஸ் பந்தில்  கவர் டிரைவ் பவுண்டரி, அடுத்து ஒரு சிக்ஸர் விளாச அரங்கம் ஆர்ப்பரித்தது. அந்த உற்சாகத்துடன்  தொடர்ந்து தன் பிரத்யேக ஷாட்களால் கவர்ந்தார் தினேஷ் கார்த்திக். அதிலும் அஷ்வத் முகுந்தன் பந்தில் ஸ்ட்ரெய்ட் திசையில் பறக்க விட்ட சிக்ஸர், ஆன்டனி தாஸ் பந்தில் ஃபைன் லெக் திசையில் அடித்த சிக்ஸர் எல்லாம் அடடா ரகம்.

கண்டம் தப்பிய அபினவ்:
நீண்ட இடைவெளிக்குப் பின் பந்துவீச வந்தார் ‘வள்ளல்’ அஷ்வத் முகுந்தன். முதல் பந்தையே அபினவ் தூக்கி அடிக்க, அந்த ஈஸி கேட்ச்சை நழுவ விட்டார் அஷ்வத். அப்போது அபினவ் 76 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல யோ மகேஷ் வீசிய கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் கொடுத்த கேட்ச்சை தலைவன் சற்குணம் நழுவ விட, அடுத்த பந்தை சிக்ஸர் பறக்க விட்டு அரைசதம் கடந்தார் தினேஷ் கார்த்திக்.இருப்பினும் தினேஷ் கார்த்திக் 55 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். 20 ஓவர் முடிவில் தூத்துக்குடி  215/ 2 ரன்கள் எடுத்தது.

கணேச மூர்த்தி  ஹாட்ரிக்:
சவாலான இலக்கை நோக்கி களம்புகுந்த சேப்பாக்கம் அணி, கணேசமூர்த்தி வீசிய முதல் ஓவரிலேயே  ஆட்டத்தை முடித்துக் கொண்டது. ஆம். சேப்பாக்கம் ரன் கணக்கை ஆரம்பிக்கும் முன்பே தலைவன் சற்குணம், கேப்டன் சதீஷ், கோபிநாத், சசிதேவ் அடுத்தடுத்து வெளியேறினர். ஹாட்ரிக் விக்கெட் எடுத்து நாயகனாக ஜோலித்தார் கணேசமூர்த்தி.

அடுத்து வந்த யோ மகேஷ் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஏழு ஓவர் முடிந்தபோது மழை குறுக்கிட்டது. பின் ஆட்டம் தொடங்கியதும் கவ்ஜித் சுபாஷ் 8 ரன்னில் திருப்தி அடைந்தார். வசந்த் சரவணன் மட்டும் 30 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். முடிவில் தூத்துக்குடி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாயகன்களுக்கு பாராட்டு:
1986ல் சென்னையில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி டை ஆனது. வரலாற்று சிறப்புமிக்க் அந்த டெஸ்ட் நடந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை நினைவுபடுத்தும் வகையில் அந்த போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர், டீன் ஜோன்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி, ஸ்ரீகாந்த் ஆகியோர் இடைவேளையின்போது கவுரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.