Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 31, 2016

'வெள்ளிப் பதக்கம் வேண்டாம்!' யோகேஷ்வர் தத் ஏன் மறுத்தார்?


ரியோ ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத்தால் பதக்கம் வெல்ல முடியவில்லை.  ஏமாற்றத்துடன்தான் தாயகம் திரும்பினார். தாயகம் திரும்பிய அவருக்கு வேறு வடிவில் சந்தோஷச் செய்தி காத்திருந்தது. கடந்த .2012-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில், 60 கிலோ எடைப் பிரிவில் யோகேஷ்வர் தத் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். லண்டன் ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்  ரஷ்ய வீரரான பெசிக் குடுகோவிடம் யோகேஷ்வர் தோல்வியடைந்திருந்தார்.

வழக்கமாக காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஒரு வீரரை தோற்கடித்த வீரர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றால், அவரிடம் தோல்வியடைந்த வீரருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். இறுதிச்சுற்றுக்கு பெசிக் குடுகோவ் முன்னேறி விட,  அந்த வகையில், யோகேஷ்வர் தத்துக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. 'ரீபேஜ் ரவுண்டு ' என்று அழைக்கப்படும் இதில் புத்ரோ ரிகோ நாட்டின் பிராங்க்ளின் கோமஸ் ஈரான் வீரர் மசூத் மற்றும் வடகொரியாவின்  ஜாங் மியாங் ஆகியோரை  வீழ்த்தி யோகேஷ்வர் தத் வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

பொதுவாக ஒலிம்பிக்கில் வெற்றி  பெற்ற வீரர்களின் ரத்த, சிறுநீர் மாதிரிகள் 10 ஆண்டு காலம் வரை வைத்திருந்து மீண்டும் மீண்டும் பரிசோதனைக்குள்ளாக்கி பார்க்கப்படும். அப்படிதான்  குடுகோவின் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அதில் அவர், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது.வழக்கமாக வெற்றி பெற்ற வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டால், அவரிடம் இருந்து பதக்கம் பறிக்கப்பட்டு, தோல்வியடைந்த வீரருக்கு வழங்கப்படும். அந்த வகையில், குடுகோவின் வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டு, யோகேஷ்வர் தத்திடம் வழங்கப்படுவது நடைமுறை. இதற்கிடையே, குடுகோவ், கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கி இறந்தும் போய் விட்டார்.





ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது தெரிய வந்திருப்பதால்,  குடுகோவின் பதக்கம் பறிக்கப்பட்டு, யோகேஷ்வர் தத்திடம் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.  இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் ஐ.ஒ.சி வெளியிடப்படவில்லை. இதற்கிடையே குடுகோவும் இறந்து விட்ட நிலையில், அவரது குடும்பத்தினரிடம் இருந்து பதக்கத்தை பறிக்கப்படுவதை யோகேஷ்வர் தத் விரும்பவில்லை. அதனால், ரியோவில் இருந்து திரும்பிய பிறகு அது குறித்து யோகேஷ்வர் தத் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். நேற்று ட்விட்டரில் 'இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி, அந்தப் பதக்கத்தை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்' என மட்டும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், அந்த வெள்ளிப்பதக்கத்தை பெசிக் குடும்பத்தினரிடம் இருந்து பறிக்க வேண்டாம் என்றும் அவர்களே அதனை வைத்துக் கொள்ளட்டும் என யோகேஷ்வர் தத் கூறியுள்ளார். இது குறித்து யோகேஷ்வர் தத் கூறுகையில் , '' பெசிக் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. தற்போது அவர் உயிருடனும் இல்லை. இந்த சூழலில் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பதக்கத்தை பறிப்பது நல்லதொரு விஷயமாக எனக்குத் தெரியவில்லை. அவரது குடும்பத்தினரிடமே அந்த பதக்கம் இருக்கட்டும். பெசிக் மிகச் சிறந்த மல்யுத்த வீரர். இப்போதும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது'' என்றார்.

யோகேஷ்வர் தத், வெள்ளிப்பதக்கத்தை பெற மறுத்தாலும் ஐ.ஒ.சி அனுமதிக்குமா எனத் தெரியவில்லை!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.