Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 27, 2016

பீகாரில் இது வரை 12,154 பேர் கைது... ஏன்?


மிகவும் பின்தங்கிய மாநிலமாகக் கருதப்படும் பீகாரில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் செயல்படுத்துவதுபோல படிப்படியாக அல்ல... ஒரே கையெழுத்தில் பீகாரில் இருந்த அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிட்டார் முதல்வர் நிதீஷ்குமார். அதற்கு தேசிய அளவில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. 6,000 கடைகள், பார்கள் என அனைத்தையும் மூடுவதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்கிற கணக்கை எல்லாம் நிதீஷ் ‘ஜஸ்ட் லைக் தட்’ எனத் தள்ளி வைத்துவிட்டார்.

மாநிலம் முழுவதும் மொத்தமாக மது தயாரிப்பு, விற்பனை, மது உட்கொள்ளுதல் என அனைத்தும் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டது. தற்போது பீகார் அரசின் கலால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மதுவிலக்குக் கொண்டு வரப்பட்டதில் இருந்து இதுவரை 12,154 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மது உட்கொண்டவர்கள், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தவர்கள், பதுக்கிவைத்தவர்கள் என அனைவரும் கைதுசெய்யப்பட்டு உள்ளனர். குறைந்தது 4 மாதங்களில் இருந்து 5 வருடங்கள்வரை இதற்கான தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

எல்லை தாண்டும் மதுப்பிரியர்கள்!


ஏப்ரல் 1-ம் தேதி மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொடர்ந்து குடித்துவந்த குடிமகன்கள் பாதிக்கப்பட்டார்கள். இருந்தும் பக்கத்து மாநிலங்களுக்கும், எல்லையைத் தாண்டி நேபாள நாட்டில் இருக்கும் கிராமங்களுக்கும் சென்று குடித்துவந்தார்கள். இந்தநிலையில் பீகார் அரசு, கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், மது கடத்துபவர்கள் என எல்லையில் இருக்கும் செக்-போஸ்ட்களில் போலீஸார் கவனம் செலுத்தினர். இதன்மூலம் ஏப்ரல் மாதத்தில் 1,293 பேரும், மே மாதத்தில் 2,379 பேரும், ஜூன் மாதத்தில் 2,669 பேரும், ஜூலையில் 3,324 பேரும் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆகஸ்ட் 20-ம் தேதிவரை 2,527 பேர் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த மாதம் முடிவடைவதற்குள் இந்த எண்ணிக்கை 3,000-த்தைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சொல்லி அதிரவைத்திருக்கிறது பீகார் காவல் துறை.

புகார் கூறும் பெண்கள்!

கலால் துறையின் அறிக்கையில், ‘‘இதுவரை 78,000 ரெய்டுகள் நடத்தப்பட்டு 2.63 லட்சம் லிட்டர் மது கைப்பற்றப்பட்டு இருக்கிறது. அதில் நாட்டுச் சாராயம் 85,577 லிட்டரும், எரிசாராயம் 25,790 லிட்டரும், வெளிநாட்டு மது  94,475 லிட்டரும், பீர் 9,763 லிட்டரும் கைப்பற்றி அழிக்கப்பட்டு இருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காகவே சிறப்புப் பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்களை வைத்து, மது வைத்திருப்பவர்களைக் கைதுசெய்து வருகிறார்கள். தினமும் 100 என்கிற எண்ணிக்கையில் அழைப்புகள் வருகிறதாம். இதுவரை மொத்தம் 7,600 அழைப்புகள் வந்திருக்கின்றன. இதில், பாதி அழைப்புகள் தன் கணவர் குடிப்பதாகவும், மதுவைத்திருப்பதாகவும் பெண்களே புகார் கூறியவை. இவர்கள் அனைவரும், ‘தங்கள் கணவர் குடிப்பதால் குடும்பம் பாதிக்கப்படுகிறது. ஆகையால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என காவல் துறையைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.



ஜி.பி.எஸ் கண்காணிப்பில் ‘சரக்கு’ லாரிகள்!

பீகார் அரசு மதுவிலக்கில் தீவிரமாக இருக்கிறது. கண்காணிப்புப் பணிக்குக் காவலர்கள் போகாததால், 538 முன்னாள் ராணுவ வீரர்களைப் பணியில் அமர்த்தி இருக்கிறது பீகார் காவல் துறை. இதுபோக புதிதாக 2,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு, இயங்கிவந்த 12 மது ஆலைகளில் இரண்டு மூடப்பட்டுவிட்டது. மற்ற கம்பெனிகள் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருக்கின்றன. கம்பெனிகளில் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் ‘சரக்கு’ லாரிகளும் தீவிர ஜி.பி.எஸ் கண்காணிப்பில் இருக்கின்றன. அதை மூடித் திறப்பதற்குக்கூட டிஜிட்டல் லாக்கர்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வேறு எங்கும் அதை நிறுத்தித் திறந்து சரக்கை எடுப்பது முடியாத காரியம். இதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி இருக்கிறார் முதல்வர் நிதீஷ்குமார். இவருக்கு பலதரப்பட்ட சமூக ஆர்வலர்கள், பெண்கள் ஆதரவு அதிகரித்து இருக்கிறது.

அதோடு இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்கள். இதுவரை செய்யப்பட்ட கைது நடவடிக்கையால் சிறைச்சாலைகள் வேகமாக நிரம்பிவருகிறதாம். இப்படியே போனால், அடுத்த 2020-ல் சட்டமன்றத் தேர்தல் வரும்போது 1,65,000 குடிமகன்கள் சிறைச்சாலைகளில் இருந்துதான் ஓட்டுபோட முடியுமாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.