Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 30, 2016

சரித்திரம் பேசுமா ரகுராம் ராஜனின் சாதனைகளை!?


"என்னுடைய 3 ஆண்டுக்கால கவர்னர் பதவிக்காலம் அருமையானது; எனது பணியின் உடன்பாடான விளைவுகள் 5 அல்லது 6 ஆண்டுகளில் வெளிப்படையாகத் தெரியவரும்; எனது பணிக்காலத்தில் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து பணியாற்றினேன் “ என சொல்லியிருக்கிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன். இவரின் பதவிக்காலம் வரும் செப். 4ம் தேதியுடன் நிறைவடைகிறது.

நிதி அமைச்சகத்துடன் மோதல்!

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி பதவி காலத்தில் ரகுராம் ராஜன் செய்த முக்கிய சாதனைகள் என்ன என்பது குறித்து சென்னை பல்கலைக் கழகப் பொருளாதாரப் பிரிவு பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் கேட்டோம்.

"ரிசர்வ் வங்கி என்பது தன்னிச்சையாக கொள்கைகளை உருவாக்கக்கூடிய அமைப்பு. ஆனால், இந்தியாவில் ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக இயங்குவதே இல்லை. எப்பொழுதுமே நிதி அமைச்சகத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் வரும்.  ரிசர்வ் வங்கியிடம் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால், ரிசர்வ் வங்கி எளிதாக வட்டி விகிதத்தை குறைக்க முடியாது.

ஏனெனில் விலைவாசி உயர்ந்தது என்றால் வட்டி விகிதத்தை எளிதாக குறைக்க முடியாது. விலைவாசியை குறைக்க அப்பொழுது வட்டி விகிதத்தை மீண்டும் அதிகரிக்கத்தான் வேண்டும். அதேசமயம் ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகத்திடம் நிதிப் பற்றாக்குறையை குறையுங்கள் என வலியுறுத்துவார்கள். இதுபோன்ற மோதல்கள் எப்பொழுதுமே இரண்டு அமைப்புகளிடமும் இருக்கும்.

WPI vs CPI

ஆனால், அண்மைக் காலங்களில் நிதி அமைச்சகத்தின் தலையீடு இருந்தால்கூட அதையெல்லாம் தாண்டி ரிசர்வ் வங்கியின் தன்னிச்சையான அமைப்பை தூக்கி நிறுத்தியவர் ரகுராம் ராஜன்தான். இதுமட்டுமின்றி ரிசர்வ் வங்கியில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளார். முக்கியமாக இதற்கு முன் விலைவாசி உயர்வை அளவிட மொத்தவிலை பணவீக்கத்தை (WPI) மட்டுமே பின்பற்றி வந்தோம். ஆனால், ரகுராம் ராஜன் CPI என்று சொல்லி சில்லறை விலை பணவீக்கத்தை கொண்டுவந்தார். ஏனெனில் மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் 70% வித்தியாசம் உள்ளது. இப்பொழுது கவர்னராக அறிவிக்கப்பட்டுள்ள உர்ஜித் பட்டேல்தான் இந்த ஆய்வறிக்கையை பரிந்துரைத்தார். இதை அமலாக்கியது ரகுராம் ராஜன்.

வாராக் கடன் நடவடிக்கையில் வங்கிகள் ஒழுங்காக கணக்கு வழக்குகளை சமர்பிக்க வேண்டும் என்று சொன்னது ரகுராம் ராஜன்தான்.  வங்கிகள் வாராக்கடன் விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருந்தனர். இதுவெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்பதுபோல் வங்கிகள் இருந்தன. ஆனால், வாராக்கடன் விஷயத்தில், வங்கிகள் அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக வலியுறுத்தி வந்தவர் ரகுராம் ராஜன் மட்டுமே. இந்த வாராக் கடனில்கூட பெரும் முதலாளிகள் தங்களுடைய நிறுவனங்களுக்காக வாங்கி திரும்ப செலுத்தாமல் இருக்கும் பணமே அதிகமாக உள்ளது.

 உதாரணத்திற்கு விஜய் மல்லையா கடன் வாங்கி இருந்தால், அவருடைய மது ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பது போல் இருந்தது. ஆனால், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, வங்கிகளில் பணம் வாங்கி வேண்டுமென்றி பணத்தை திருப்பி அளிக்காமல் இருக்கும் wilful defaulters எனும் புதிய வகுப்பை உருவாக்கியது ரகுராம் ராஜன்தான். ரகுராம் ராஜன் வாராக் கடனை முற்றிலுமாக வசூலிக்கவில்லை; ஆனால், ரகுராம் ராஜனுக்கு பிறகு யாராக இருந்தாலும் வாராக் கடனை வசூலிக்கும் நடவடிக்கை என்பது எளிதாக இருக்கும். இதைப்போல forensic auditல் நிறுவனங்களின் தணிக்கையின் போது ஏதாவது தவறு நேர்ந்தால் அந்த ஆடிட் செய்த நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என்பதைக் கொண்டுவந்தார்" என்றார் பேராசிரியர் ஜோதி

தமிழ்நாட்டை சேர்ந்த பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன் தனது பணிக் காலத்தில் பல்வேறு புதிய முயற்சிகள் எடுத்தது பாராட்டுக்குரியதே. எனினும் இவர் கூறியதுபோல இதன் விளைவுகள் அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில்தான் தெரியவரும். அதுவரை என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.