Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 29, 2016

'அம்மா ஆட்சியில் தான் ஸ்டாலினால் தைரியமாக மதுரைக்கு வர முடிகிறது!' - செல்லூர் ராஜு காட்டம்


மதுரை: 'அம்மா ஆட்சியில் தான் ஸ்டாலினால் தைரியமாக மதுரைக்கு வர முடிகிறது' என்று மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக பேசினார்.

சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து, முக்கிய நகரங்களில் 'ஜனநாயகம் படும் பாடு' எனும் தலைப்பில் திமுகவினர் கண்டன பொதுக்கூட்டஙக்ளை நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் கடந்த 25-ம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்தும், கிண்டலடித்தும் பேசினார்.



அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் களமிறங்கிய அ.தி.மு.க.வினர், அதே இடத்தில் பொதுக்கூட்டத்தை நேற்று நடத்தினார்கள். கூட்டத்தின் தலைப்பு, 'சட்டப்பேரவையில் அ.தி.மு.க.வை கண்டு தெரித்து ஓடும் சண்டிக்குதிரைகள்' என்பதாகும்.

பழங்காநத்தம் பகுதியே தினறும் அளவுக்கு அரசுப்பேரூந்துகளில் கிராமப்புற மக்களை ஏற்றி வந்து கூட்டத்தை கூட்டிவிட்டார்கள் அ.தி.மு.க.வினர். தி.மு.க.வுக்கு பதிலடி கொடுக்கும் கூட்டம் என்பதால், என்னதான் பேசப்போகிறார்கள் என்பதை கவனிக்க பொது மக்கள் கூட்டமும் பெருமளவில் திரண்டு வந்திருந்தது.



கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் பேசும்போது, "சட்டசபை மரபுகளை மதிக்காத தி.மு.க.வினர், வெளியில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். சபாநாயகரை இழிவுபடுத்தும் இவர்கள், தாங்கள் செய்யும் தவறுகளை மறைத்துவிட்டு வெளியில் நடிக்கிறார்கள். சட்டம் ஒழுங்கை பற்றி தமிழகத்தில் யார் பேசினாலும் அதை ஏற்று கொள்ளலாம். ஆனால் அதை ஸ்டாலின் பேசலாமா? சட்டசபையிலிருந்து அவர்களை தூக்கி வீசிவிட்டதாக ஸ்டாலின் சொல்கிறார்.

உங்களை தமிழகத்திலிருந்தே தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள். ஐந்து முறை தமிழகத்தை ஆட்சி புரிந்த கருணாநிதி செய்த குறைபாடுகளை, தவறுகளை செம்மைபடுத்தி தமிழக மக்களின் நலனுக்காக வளர்ச்சி திட்டங்கள், வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி வரும் அம்மாவின் ஆட்சி நடத்தும் அழகைப் பார்த்து தாங்கி கொள்ளாத தி.மு.க.வினர் பொறாமையால் சட்டமன்றத்தில் ரகளையில் ஈடுபடுகின்றனர். சபாநாயகரை கேலி செய்கின்றனர்" என்றார்.



அமைச்சர் செல்லூர் ராஜுவோ, ''தி.மு.க. ஆட்சியில், ஸ்டாலினால் மதுரைக்கு தைரியமாக வந்து செல்ல முடிந்ததா... அம்மா ஆட்சியினால்தான் வர முடிகிறது. இது தெரிந்தும் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசலாமா... சட்டசபையில் எப்போதும் அம்மா, அம்மா என்று அமைச்சர்கள் சொல்வதாக தி.மு.க.வினர் பேசுகிறார்கள். எங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்த அம்மா பெயரை சொல்லாமல் வேறு யார் பெயரை நாங்கள் சொல்வது. அப்படித்தான் சொல்லுவோம்" என பேசினார்.

நாஞ்சில் சம்பத்தோ, "பல தலைவர்கள் அமர்ந்த சபாநாயகர் ஆசனத்திற்கு ஒரு வரலாறு உண்டு. இங்கிலாந்தில் செய்யப்பட்டது அது. அவ்வளவு உயர்ந்த ஆசனத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனபாலுக்கு அம்மா வழங்கி கவுரவித்திருக்கிறார். அதை பொறுக்க முடியாத தி.மு.க.வினர், சபாநாயகரை இழிவாக பேசுகின்றனர். அவர் அழகாக இல்லை என்கின்றனர். அவர் அழகில்லை என்று கவலைப்பட வேண்டியது அவர் மனைவி, இவர்களுக்கு ஏன் அந்த கவலை. சட்டசபை மாண்பு பற்றி ஸ்டாலினுக்குத்தான் தெரியவில்லை. பலமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த துரைமுருகனுக்குமா அது தெரியாது.



சட்டம் ஒழுங்கைப்பற்றி தி.மு.க.வினர் பேசலாமா..?" என்றவர், அப்படியே தி.மு.க. ஆட்சியில் தனக்கு நேர்ந்த போலீஸ் கொடுமைகளை நீண்ட நேரம் பட்டியலிட்டு பேச ஆரம்பித்து விட்டார். இரவு பதினொரு மணிவரை நடந்த இந்தக் கூட்டத்தில், கடைசி வரையில் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு யாருமே பதில் சொல்லவே இல்லை. மேலும், ஸ்டாலின் பேச்சுக்கு சரியான பதிலடி கிடைக்கும் என்ற ஆவலில் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்களும், அ.தி.மு.க.வினரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.