Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 30, 2016

' வறுமையால் திறமை முடங்கிவிடக் கூடாது'! -வீராங்கனைக்கு சம்பளத்தை கொடுத்த கமிஷனர்


சர்வதேச போட்டியில் பங்கேற்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த கோவை மாணவிக்கு, ஒரு மாத சம்பளத்தையே கொடுத்து உதவியிருக்கிறார் கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயன். ' வெற்றி பெற்ற கையோடு என்னை வந்து சந்தித்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்' என வாழ்த்தியிருக்கிறார் அவர்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன்-ஜெயந்தி தம்பதியின் மகள் தமிழ்கனி. எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்தே வாள்வீச்சு போட்டியில் கலக்கி வந்திருக்கிறார். தற்போது கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு மெக்கானிக்கல் பொறியியல் படித்து வருகிறார். இந்நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் 16-ம் தேதி தாய்லாந்தில் நடக்க இருக்கும் சர்வதேச வாள்வீச்சு சாம்பியின்ஷிப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறார் தமிழ்கனி. ஆனால், குடும்பத்தின் வறுமைச் சூழல் தாய்லாந்து பயணத்திற்கு வழி சொல்லவில்லை. இதைக் கேள்விப்பட்ட கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், மாணவியை நேரில் வரவழைத்து தன்னுடைய ஒரு மாத சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தந்து உதவியிருக்கிறார்.

தமிழ்கனியிடம் பேசினோம். " பத்து வருடமாக வாள்வீச்சு போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். நாமக்கல்லில் செல்வம் மேல்நிலைப்பள்ளியில் படித்தபோது, மாநில விளையாட்டுத் துறை சார்பில் வாள்வீச்சு பயிற்சி அளிப்பார்கள். அப்படித்தான் வாள்வீச்சின் மீது ஆர்வம் வந்தது. இதுவரையில், தேசிய அளவில் மூன்று தங்கப் பதக்கமும் 2 வெள்ளிப் பதக்கமும் 2 வெண்கலப் பதக்கமும் வாங்கியிருக்கிறேன். பள்ளி நாட்களில் இருந்து கணக்கெடுத்தால் இதுவரையில் 50 பதக்கங்களுக்கு மேல் வாங்கியிருக்கிறேன். அதனால் விளையாட்டுப் பிரிவில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த நேரத்தில்தான் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தேர்வான தகவல் கிடைத்தது. என்னைப் போலவே, சென்னை, சேலம், மதுரையில் இருந்து மொத்தம் ஐந்து பேர் தேர்வாகியிருக்கிறோம்" என்றவர்,

"பாங்காக்கில் ஐந்து நாட்கள் போட்டி நடைபெற இருக்கிறது. தேசிய அளவில் விளையாடச் சென்றால், அரசின் உதவி கிடைக்கும். ஆனால், ' சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு உதவி செய்யும் வழக்கம் அரசிடம் இல்லை' என அதிகாரிகள் சொன்னார்கள். அதுவே, ஒலிம்பிக் போட்டிக்குச் செல்வதென்றால் விளையாட்டுத்துறையின் உதவி கிடைக்கும். அப்பா, அம்மா இருவருமே டெய்லர்களாக வேலை பார்க்கின்றனர். தங்கையும் இப்போதுதான் கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். மிகவும் சிரமமான சூழலில்தான் குடும்பம் இருக்கிறது. ' இது ஒரு வாய்ப்பு. இதை விட்டுவிடக் கூடாது' என்று ஸ்பான்சர்களைத் தேடி அலைந்தேன். எங்கும் உறுதியான பதில் கிடைக்கவில்லை. அப்போதுதான் 'சோசியல் கேபிடல்' என்ற தளம் மூலம், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் உதவி செய்யும் தகவலைக் கேள்விப்பட்டு சந்தித்தேன். என்னுடைய சான்றிதழ்களைப் புரட்டிப் பார்த்தவர், ' தாய்லாந்து சென்று வர எவ்வளவு செலவாகும்?' என்று கேட்டார். ' 86 ஆயிரத்து 550 ரூபாய் ஆகும்' என்று சொன்னேன். அடுத்த நிமிடமே, அவருடைய சம்பளத்தை செக்காக என்னிடம் கொடுத்துவிட்டு,

' வறுமைச் சூழலால் திறமைகள் இருந்தும் முடங்கிக் கிடப்பவர்கள் ஏராளம் உள்ளனர். பொருளாதாரச் சிக்கல், அவர்களை மேலே வர விடுவதில்லை. என்னுடைய உதவி பெரிதல்ல. வெற்றி பெற்ற கையோடு என்னை வந்து சந்தித்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன். ஆல் தி பெஸ்ட்' என வாழ்த்தினார். அவரை சந்தித்த சில நிமிடங்களில் எனக்குத் தீர்வு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என நெகிழ்ந்தவர், " ஒவ்வொரு ஆண்டும் வாள்வீச்சுக்காகவே ஐந்து போட்டிகள் வரையில் நடக்கின்றன. திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து ஸ்பான்சர்கள் கிடைத்தால், இன்னும் ஊக்கத்தோடு விளையாடுவேன்" என்கிறார் தமிழ்கனி.

வெற்றிக் கனியைப் பறித்து வாருங்கள் தமிழ்கனி! 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.