Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 31, 2016

டெக்னாலஜி துணைகொண்டு கலக்கும் மாஃபா பாண்டியராஜன்: தீப்பெட்டி தொழிலாளி முதல் அமைச்சர் வரையிலான பயணம்


சிவகாசியை அடுத்த விளாம்பட்டியை சொந்த ஊராகக் கொண்ட பாண்டியராஜன், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டே பள்ளிப் படிப்பை முடித்த பாண்டியராஜன், கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் பி.டெக். பட்டம் பெற்றார். இதையடுத்து ஜாம்ஷெட்பூரில் எம்.பி.ஏ. படித்துமுடித்த அவர், மேற்குவங்கத்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் பணியில் சேர்ந்தார்.

அந்த அனுபவத்தைக் கொண்டு சென்னையில் கடந்த 1992-ல் மாஃபா (Mofoi) எனும் வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன்பின்னர்தான் பாண்டியராஜனாக இருந்த அவர், மாஃபா பாண்டியராஜனாக அறியப்பட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறையில் உள்ள அனுபவத்தால் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல நாடுகளிலும் வேலை வாய்ப்புப் பெற முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

அரசியலில் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட பாண்டியராஜன், தேமுதிகவின் வளர்ச்சி கண்டு விஜயகாந்த் தலைமையை ஏற்றுக் கொண்டார். அவரின் நன்மதிப்பைப் பெற்றதுடன் ஆலோசகராகவும் பாண்டியராஜன் இருந்தார். இந்தநிலையில் கடந்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட விருதுநகர் தொகுதியில் போட்டியிட மாஃபாவுக்கு வாய்ப்பளித்தார் விஜயகாந்த். அந்த தேர்தலில் வெற்றிபெற்ற மாஃபா பாண்டியராஜன், விஜயகாந்த் உடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ-வாக இருந்து வந்தார்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பாண்டியராஜன், அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து ஆவடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு பெற்ற பாண்டியராஜன், மக்களின் குறைகளைக் கேட்டறிய டெக்னாலஜியின் துணைகொண்டு ’மை ஆவடி ஆப்’ (My Avadi App) எனும் செல்போன் செயலியை உருவாக்கி வெளிச்சம் பெற்றார். தேர்தலில் வென்ற மாஃபா, பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அதிமுக தலைமையின் நன்மதிப்பைப் பெற்றார். குறிப்பாக திமுக உறுப்பினர் தியாகராஜனின் ஆங்கில உரைக்கு, அவர் பாணியிலேயே பதிலளித்து அதிமுக உறுப்பினர்களிடையே பிரபலமானார்.

மேலும், பாஜக அரசின் ஜிஎஸ்டி மசோதாவை தமிழகம் எதிர்ப்பது ஏன் என்று பேரவையில் அவர் அளித்த நீண்ட விளக்க உரை அவரை அடுத்தநிலைக்கு எடுத்துச் சென்றது. ஊடகங்களில் அதிமுகவின் குரலாக ஒலித்த மாஃபா பாண்டியராஜனின் பலமே அரசின் சாதனைகளை புள்ளிவிபரங்களாக எடுத்துச் சொல்வதே. இதுபோன்ற காரணங்களால் தமிழகக் கல்வித்துறையின் அடுத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையும் பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டெக்னாலஜியில் இளைஞர்களுடன் போட்டிபோடும் அளவுக்கு அறிந்துவைத்துள்ளதால் இந்த துறை ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிமுக தொண்டர்கள் கிசுகிசுக்கின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் 6ஆவது பள்ளிக்கல்வி அமைச்சராகி இருக்கும் மாஃபா பாண்டியராஜனுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால், மத்திய அரசின் கல்விக் கொள்கையைக் கையாள்வது மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது போன்றவையே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.