Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 22, 2016

இரண்டாம் ரகுராம் ராஜனிடம் நாட்டின் கஜானா!


மும்பையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கும் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் கஜானா சாவியை கையாளும் உயரிய பொறுப்பு உர்ஜித் பட்டேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்து வரும் உர்ஜித் வருகின்ற செப்டம்பர் மாதம் 4-ம் தேதி  24வது  கவர்னராக பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார்.

பாரதிய ஜனதா எம்பி சுப்ரமணியன் சுவாமி, தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார். பிரதமர் தலையீட்ட பிறகே  சுப்பிரமணியன் சுவாமி, ரகுராம்ராஜன் குறித்த விமர்சனங்களை குறைத்துக் கொண்டார். விமர்சனங்களால் ரிசர்வ் வங்கிக்கு ''இரண்டாம் முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை'' என ரகுராம் ராஜனே மறுப்புத் தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.கடந்த 25 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இரண்டாவது முறையாக  பதவி வகிக்க  வாய்ப்பு கிடைக்காமல் பதவி விலகும் ஒரே கவர்னர் ரகுராம் ராஜன்தான்


ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக அருந்ததி பட்டாச்சார்யா, நிதி ஆயாக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா ஆகியோரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தேர்வும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

ரகுராம் ராஜனைப் போலவே  இவரும்  யேல் பல்கலைக்கழகத்தில்தான் பொருளாதத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்.. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1986ம் ஆண்டு எம்பில்லும் முன்னதாக 1984ம் ஆண்டு லண்டன் பல்கலையில் பொருளாதாரம் படித்தார். தற்போது 52 வயதான உர்ஜித், ரிசர்வ் வங்கியில் கடந்த 2013 ம் ஆண்டு ஜனவரி 11ம் பணியில் இணைந்தார். தற்போது இவர் நிதி கொள்கை துறையின் தலைவராக (மானிட்டரி பாலிசி கமிட்டி) உள்ளார்.

ரிசர்வ் வங்கி துணை கவர்னராவதற்கு முன்,போஸ்டன் குழுமத்தின் அறிவுரையாளராக பணியாற்றினார். கடந்த 1998ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை, மத்திய நிதியமைச்சகத்துக்கும் அறிவுரையாளராக இருந்துள்ளார். ரிலையன்ஸ் குழுமத்திலும் பணிபுரிந்துள்ளார். கடன்கள் சீர்திருத்தம், வங்கித்துறை சீர்திருத்தம் ஓய்வூதிய நிதி கையாள்தல், அந்நிய செலாவணியை கையாள்வதில் உர்ஜித் பட்டேல் திறமைமிக்கவர்.,


இந்த உர்ஜித் பட்டேலும் பதவி விலகி செல்லும் ரகுராம் ராஜனும் நெருங்கிய நண்பர்கள். ரகுராம் ராஜனின் நம்பிக்கைக்குரியவராவும் உர்ஜித் பட்டேல் விளங்கினார். அதனால் ரிசர்வ் வங்கி பதவியில் இருந்து ரகுராம் ராஜன், விலகி சென்றாலும் அவரது கொள்கைகளையே  உர்ஜித்தும் பின்பற்றுவார் என்றே கருதப்படுகிறது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைப்பதுதான் உர்ஜித் பட்டேலின் முக்கிய நோக்கமாக இருக்கும்.  அதுபோல், ரிசர்வ் வங்கியின் கொள்கைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்றே நம்பப்படுகிறது.

ஆனால், ரகுராம் ராஜன் போல உர்ஜித் சர்வதேச அளவில் பிரபலமானவர் அல்ல. ''நான் ரகுராம் ராஜன்... நான் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறேனோ அதனை செய்வேன் '' ரகுராம் ராஜனால் கூறப்பட்டு மிகவும் பிரபலமடைந்த வார்த்தை இது.  இனிமேல், '' நான் நினைப்பதை உர்ஜித் செய்வார் '' என ரகுராம் ராஜன் கூறக்கூடும்.

உர்ஜித் என்றல் தமிழில் 'சக்தி' என்று அர்த்தம் . இந்திய பொருளாதாரத்துக்கு உர்ஜித், புதிய உந்து சக்தியாக இருப்பாரா இல்லையா என்பது போகப் போகத் தெரியும்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.