Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 5, 2016

'இன்று ஐ.ஏ.எஸ் தேர்வில் தோற்ற நாள்...!' -மாநகராட்சி கமிஷனரின் ஃபேஸ்புக் நினைவுகள்


கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயனின் ஃபேஸ்புக் பதிவில், ' இன்று நான் ஐ.ஏ.எஸ் தேர்வில் தோற்றதை ஃபேஸ்புக் மெமரி சுட்டிக் காட்டுகிறது. கனவுகள் நனவானதில் கடவுளுக்கு நன்றி' என குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார்.

மாணவர்களிடையே தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசுவதிலும், அரசின் திட்டங்களை முன்னெடுப்பதிலும் கோவை மாநகராட்சி கமிஷனர் விஜய் கார்த்திகேயனின் பணி குறிப்பிடத்தகுந்தது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நேரத்தில், ' தோற்றவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்' என ஃபேஸ்புக்கில் கமெண்ட் பதிவு செய்தார். இன்று காலையில், ஃபேஸ்புக் மெமரியில், 2009 ஆகஸ்ட் 4-ம் தேதி ஐ.ஏ.எஸ் முதல்நிலைத் தேர்வில் தோற்றதைக் குறிப்பிட்டு, 'டவுன்...பட் நாட் அவுட்' என எழுதியிருந்தார். அதை முகநூல் பக்கம் சுட்டிக் காட்டியதைக் குறிப்பிட்டு, 'கடவுளுக்கு நன்றி' என எழுதியிருக்கிறார் விஜய் கார்த்திகேயன்.
                      
" ஐ.ஏ.எஸ் தேர்வு என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவாக இருக்கிறது. இத்தனைக்கும் விஜய் கார்த்திகேயன் எம்.பி.பி.எஸ். படித்தவர். 'ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும்' என்பதுதான் தொடக்ககால கனவாக வைத்திருந்தார். அவருடைய அப்பா கண்ணன் வனத்துறையில் உயர் அதிகாரியாகப் பணிபுரிகிறார். அதனால் இயல்பாகவே, 'ஐ.ஏ.எஸ் படித்தால் இன்னும் நிறைய பேருக்கு சேவை செய்ய முடியும்' என்ற லட்சியத்தை வளர்த்துக் கொண்டார்"  என நம்மிடம் விவரித்த மாநகராட்சி அதிகாரி ஒருவர், " மதுரையில் எம்.பி.பி.எஸ் முடித்த கையோடு ஐ.ஏ.எஸ் முதல்நிலைத் தேர்வு எழுதினார். தேர்வில் தோற்ற அன்று அவரது அம்மாவிடம், ' நான் தோற்றதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அடுத்தமுறை ஐ.ஏ.எஸ் தேர்வில் உறுதியாக வெற்றி பெறுவேன்' எனக் கூறினார்.தோல்விக்கு மிக முக்கிய காரணமே, முதல்நிலைத் தேர்வுக்கு அவர் தேர்வு செய்த பாடம்தான். மருத்துவம் படித்ததால் மருத்துவ அறிவியலைத் தேர்வு செய்தார். இவரைவிட, மருத்துவத்தில் முதுகலைப் படிப்பு முடித்தவர்களோடு ஐ.ஏ.எஸ் முதல்நிலைத் தேர்வில் போட்டிப் போட முடியவில்லை. தவிர, பாடத் திட்டம் மிகக் கடுமையாக இருந்தது. இதையடுத்து, மானுடவியல் பாடத்தைத் தேர்வு செய்தார். அந்த வருடம் வெளியான ஐ.ஏ.எஸ் தேர்வில் மானுடவியல் படிப்பில் முதல் மதிப்பெண் வாங்கினார். அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 22-வது இடமும் பிடித்தார். 'தோல்வியில் இருந்து வெற்றியைத் தொடங்க வேண்டும்' என்றுதான் பல இடங்களிலும் அவர் பேசுவார். அவருடைய பேச்சைக் கேட்பதற்கு என தனிக் கூட்டமே உண்டு" என்றார் உற்சாகத்தோடு.

" தங்களுடைய முயற்சிகளில் தோற்றவர்கள் ஒரு நிமிடம் நிதானமாக அமர்ந்து, ' எந்த இடத்தில் நாம் தோற்றோம்' என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், வெற்றிக் கோட்டை அடைவது மிக சுலபம். எல்லாம் கொஞ்ச காலம்தான்" என உற்சாகப்படுத்துகிறார் விஜய் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.