Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 20, 2016

'சென்னையை நோக்கி வரும் ஜப்பான் அபாயம்!' -கல்பாக்கம் அலர்ட்


' கல்பாக்கம் அணுஉலையில் நிறுவப்பட இருக்கும் அதிவேக ஈனுலைகளால், எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம்' என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். ' கடலில் அலைகளின் உயரம் அதிகரித்தால், ஜப்பானுக்கு இணையான துன்பத்தை சென்னை சந்திக்கும்' என்கின்றனர் அவர்கள்.

இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது கல்பாக்கம் அணுமின் நிலையம். கடந்த சில வருடங்களாகவே அணுமின்நிலையத்தின் கதிர்வீச்சால் கடற்கரையோர கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சூழல் ஆய்வாளர்கள் பேசி வந்தனர். தைராய்டு புற்றுநோய், எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவும் வேதனைப்படுகின்றனர். இந்நிலையில், " கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அதிக வேக ஈனுலைகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இயற்கைப் பேரிடர் நிகழ்ந்தால், அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை" எனக் கொதிக்கிறார் சுற்றுச்சூழல் மருத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின்  மருத்துவர் புகழேந்தி. தொடர்ந்து நம்மிடம்,

"கல்பாக்கத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. அணுமின் நிலையத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு கதிர்வீச்சால் பல்வேறு நோய்கள் உருவாகி வருகின்றன. தற்போது அதிவேக ஈனுலைகளை (PFDR) நிறுவும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த அதிவேக ஈனுலைகளையைக் கையாளும் அளவுக்கு தேர்ச்சி பெற்ற விஞ்ஞானிகள் கல்பாக்கத்தில் இல்லை. 2010-ம் ஆண்டிலேயே இந்த ஈனுலைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ' 2017 மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்' என அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவிக்கிறது. எங்களுடைய கேள்வியெல்லாம், புவியியல் ஆய்வாளர்கள் சுந்தர் மற்றும் சுந்தர வடிவேல் ஆகிய இருவரும் கல்பாக்கம் பகுதியில் மேற்கொண்ட ஆராய்ச்சியைப் பற்றியது. அவர்கள் தங்களுடைய அறிக்கையில்,

' கிழக்கு கடற்கரைச் சாலையில் புயல் வந்தால், கடல் அலைகளின் உயரம் 4 முதல் 11 மீட்டர் வரையில் உயரும்' எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால், கடல்மட்டத்தில் இருந்து 9.52 மீட்டர் உயரத்தில்தான் கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்திருக்கிறது. தற்போது நிலநடுக்கப் பகுதி 3-ல் கல்பாக்கம் அமைந்திருக்கிறது. இங்கு பூமிக்குக் கீழே 85 சதவீதம் மணல் பரப்பும் 15 சதவீத அளவுக்கே பாறைகளும் உள்ளன. இதனால் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிகப்படியான பாதிப்புகளுக்கு அணுமின் நிலையம் ஆளாகும். ' நிலநடுக்கப் பகுதி மூன்றில் இருந்தாலும், அதிக பாதிப்பை உருவாக்கும் நான்காம் நிலை பகுதியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும்' என தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் உறுப்பினர் கணபதி தெரிவிக்கிறார்.

இந்த நேரத்தில் அதிவேக ஈனுலை அமைக்கப்பட்டால், பேரிடர் நேரத்தில் ஜப்பானின் புகுஷிமாவுக்கு இணையான துயரம்தான் கல்பாக்கத்தில் ஏற்படும். இந்த ஈனுலைகளை குளிர்விக்க லிக்விட் சோடியம் பயன்படுத்துகிறார்கள். இதன் மீது தண்ணீர் பட்டாலே வெடிக்க ஆரம்பித்துவிடும். கடல் அலைகளின் உயரம் அதிகமானால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. இதுகுறித்து அணுமின் நிலைய உயர் அதிகாரிகளிடம் நேரில் சென்று விளக்கம் கேட்டேன். ' இரண்டு வாரத்தில் உங்களுக்குப் பதில் தருகிறோம் என்றார்கள். மாதங்கள் கடந்தும் பதில் இல்லை. அணுமின் நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு, அதிவேக ஈனுலைகளை அரசு நிறுவட்டும். மக்கள் மத்தியில் உள்ள ஏற்பட்டுள்ள அச்சத்தை அகற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது" என்றார் ஆதங்கத்தோடு.

கல்பாக்கம் அணுமின் நிலைய உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். " இந்திய அறிவியல் வல்லுனர்கள் வடிவமைத்த 440 மெகாவாட் வேக ஈனுலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலையைச் சுற்றிலும் கனமான தடுப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்தச் சுவர்கள் அனைத்தும் வெளிப்புற மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஈயத்தால் வேயப்பட்டவை. கல்பாக்கம் அணுஉலை அருகே 160 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசினாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதவகையில் அணு உலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இதன் பாதுகாப்பு குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.