Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 31, 2016

காலையில் துப்புரவு தொழிலாளி... மாலையில் இசை கலைஞர்...


மதுரை மாநகரின் தெருக்களில் அதிகாலை நேரங்களில் இவரை பார்க்க முடியும். காக்கி நிற சட்டை அணிந்து, மதுரை தெருக்களை வலம் வந்து தூய்மை பணியை மெற்கொள்வார். மாலையில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து, நெற்றியில் சந்தனம் மணக்க இசை கலைஞராக காட்சியளிப்பார். குடும்ப சூழல் காரணமாக, இசை மீது தன்னுடைய காதலை விட்டுக்கொடுக்காமல் இன்றும் காலையில் துப்புரவு பணி, மாலையில் தவில் கலைஞர் என இயங்கி வருகிறார் மதுரை, வடபழஞ்சியைச் சேர்ந்த இளங்கோவன்.

தவில் இசை என்றால் இளங்கோவனுக்கு கொள்ளைப்பிரியம். ஆனால் அவரை தவில் இசை பக்கம் செல்ல விடாமல், குடும்ப நெருக்கடி துரத்திய காலத்தில் அப்பா வழியில் துப்புரவு தொழிலாளி ஆனவர் இளங்கோவன். ஆனால் இசை மீதான அவரது ஈடுபாடும், காதலும் அவரை விடாமல் இழுக்க... காலையில் துப்புரவு பணியை மேற்கொள்ளும் தொழிலாளியாகவும், மாலையில் தவில் இசை கலைஞராகவும் காட்சியளிக்கத்துவங்கியிருக்கிறார்.

கோவில் திருவிழாக்கள், திருமண விழாக்கள் துவங்கி இவரது கச்சேரிகளில் இவரது தவில் வாசிப்புக்கு ரசிகர்கள் அதிகம். விடுமுறை நாட்களில் மும்பை, கேரளம், திருச்செந்தூர், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நடை பெறும் இசைக் கச்சேரிகள், திருமணம், கோயில் விழாக்களுக்கு இவர் சென்று வருகிறார்.  துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து கொண்டே, ஒரு இசை கலைஞனாக வாழ்வது என்பது நிச்சயம் அசாத்தியமானது.

இளங்கோவனிடமே இது தொடர்பாக பேசினோம். "எங்களது குடும்பத்தில் நான் 4வது தலைமுறையாக தவில் வாசித்து வருகிறேன். என் அப்பா, தாத்தா என எல்லோருமே தவில் வித்வான்கள் தான். என்னைப்போல எனது அப்பாவும் துப்புரவுத் தொழிலாளியாக இருந்து வந்தார். திடீரென அவர் இறந்து விட்டார். அப்போது என் தம்பிகள் இருவரும் அப்போது சிறியவர்கள். அதனால் நான் வேலைக்கு சென்றாக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்பா இறந்ததால் அப்பாவின் வேலை எனக்கு கிடைத்தது. தவில் இசை மேல் இருந்த காதலையும், ஈடுபாடையும் மூட்டை கட்டி வைத்து விட்டு துப்புரவு தொழிலாளியானேன்.



ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டேன். துப்புரவு வேலையில என்னை முழுமையா ஈடுபடுத்திக்க முடியலை. தவில் இசை மேல இருந்த விருப்பம் தான் அதுக்கு காரணம். அதனால அப்பப்போ மன அமைதிக்காக தவில் வாசிக்க ஆரம்பிச்சேன். அதுல ரொம்ப திருப்தி இருந்துச்சு. மன நிறைவாவும் இருந்துச்சு. ஏன் துப்புரவு வேலையை செஞ்சுகிட்டே, தவில் இசையை வாசிக்க முடியாதுனு நினைச்சேன். அந்த எண்ணம் தான் இப்போ நான் தவில் இசைக்கலைஞராக இருக்க காரணம்.

அதே நேரத்துல துப்புரவு பணி மேலயும் எனக்கு மிகப்பெரிய மரியாதையும், பிடிப்பும் ஏற்பட்டுச்சு. இப்ப கூட வேலை நாட்கள்ல வேலைக்கு போகாம இருக்க மாட்டேன். சரியா வேலைக்கு போய்டுவேன். விடுமுறை நாட்கள்ல தான் கச்சேரிக்கு போறேன். ஒரு தடவ  போன 2 ஆயிரம், 3 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். தவில் வாசிக்குற வேலை எப்போதும் இருக்காது. 6 மாசம் வேலை இருக்கும். 6 மாசம் சும்மா தான் இருக்கணும்.

நான் அரசு வேலையில இருக்கறதால பிரச்னை இல்லை. எனக்கு தெரிஞ்சு சக கலைஞர்களோட நிலைமை ரொம்ப பரிதாபமாக இருக்கும். குடும்ப கஷ்டத்துக்காக தவில், நாதஸ்வரத்தை அடகு வைக்கிறவங்க கூட இருக்காங்க. எனக்கு அது மாதிரி சூழல் இல்லை.
மனைவி, குழந்தை, பேரன், பேத்தினு நான் குடும்ப வட்டத்துல இருக்குறதால என்னாலை துப்புரவு பணியை விட்டுட்டு முழு நேர தவில் கலைஞரா மாற முடியலை. ஒரு விஷயம் நான் துப்புரவு வேலை பாக்குறப்போ தவில் கலைஞன் அப்படீங்கறதை மறந்துடுவேன்," என்றார் அழுத்தமாக.

தமிழ் சமூகத்தில் கம்பீரமாக ஓங்கி ஒலித்த இசை, இன்றும் தனது கம்பீரத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு இளங்கோவன் போன்ற இசைக்கலைஞர்களும் மிக முக்கிய காரணம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.