Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 17, 2016

சித்தராமையாவின் சுதந்திர தின உரை தமிழகத்துக்கு எதிரானது: முத்தரசன் கண்டனம்


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டப்பட உள்ளது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். தமிழகத்துக்கு எதிரான சித்தராமையாவின் உரையைக் கண்டிக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின விழா மூவர்ண கொடியேற்றி கொண்டாடப்பட்டது. கர்நாடகத்தின் முதல்வரும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா, பெங்களுரில் தேசியக் கொடி ஏற்றி வைத்து தமிழகத்துக்கு எதிராக சுதந்திர தின உரை நிகழ்த்தியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கர்நாடக அரசு நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்குரிய தண்ணீரை கொடுக்காத காரணத்தால் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காவிரி பாசன மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலமாக குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை, இதன் விளைவாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.1200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு ஒரு போக சம்பா சாகுபடி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.

சம்பா சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத் தர வேண்டும், காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைத்திட வேண்டும், தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 19 அன்று விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கடையடைப்பு, மறியல் போராட்டங்களை அறிவித்துள்ளன.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் நடத்தவுள்ள இப்போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வரின் சுதந்திர தின உரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக அமைந்துள்ளது.

அவரது சுதந்திர தின உரையில் ''கர்நாடகத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்காக 5 ஆண்டுகளில் ரூ-.50 ஆயிரம் கோடி செலவு செய்வோம் என்று கூறினோம், கடந்த 3 ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம், 5 ஆண்டுகளின் முடிவில் இது ரூ.60 ஆயிரம் கோடியை தொடும்.

கர்நாடகத்தை பொறுத்த வகையில் நீர், நிலம், மொழி பிரச்சினைகளில் அரசியல் கட்சிகள் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்படுகின்றன. ஆதரவு வழங்கிய அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது. மழை காலத்தில் கடலில் கலக்கும் உபரி நீரை பயன்படுத்த இந்த அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கட்டப்படும் அணையிலிருந்து 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பெங்களூரு நகரத்திற்கு குடிநீர் வழங்கப்படும், என்றும், ரூ.1002 கோடி செலவில் ஏறத்தாழ 430 ஏரிகள் அமைத்து காவிரி நீரைக் கொண்டு நிரப்படும்'' என்றும் சித்தராமையா தனது உரையில் தெரிவித்துள்ளார்.

காவிரியில் கர்நாடகம் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட தரக் கூடாது என்ற முடிவை மேற்கொண்டுள்ளது என்பது முதல்வரின் உரை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தமிழக மக்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்யாமலும், காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் தீய நோக்கத்தோடும் கர்நாடக அரசும் அங்குள்ள அனைத்து கட்சிகளும் கரம் கோர்ந்து நிற்கின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கோ, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பிற்கோ கர்நாடகம் கட்டுப்படுவதாக இல்லை.

கர்நாடகத்தின் அடாவடித்தனமான இச்செயல்களுக்கு மத்திய அரசும் உறுதுணையாக இருந்து வருகின்றது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு, பகிரங்கமாக கர்நாடகத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் தரிசாக கிடக்கின்றன. பல லட்சம் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வு இழந்து நிர்க்கதியாய் உள்ளனர்.

இத்தகைய மிக அபாயகரமான நெருக்கடி மிக்க சூழலில் தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டிடவும் கர்நாடகத்திடமிருந்து, நடுவர் மன்ற தீர்ப்பின்படி உரிய தண்ணீரை பெறவும், காவிரி மேலாண்மைக்குழு மற்றும் ஒழுங்காற்றுக்குழுவை மத்திய அரசு அமைத்திடவும் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்தவும், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 1892ம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறி பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டியுள்ளதை அப்புறப்படுத்தவும் முல்லை பெரியாறு அணைத் தேக்கத்தில் 152 அடி வரை தண்ணீரைத் தேக்கவும் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளையும் மன மாச்சியமின்றி ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது.

முதல்வர் காலதாமதமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி ஒத்த கருத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் மத்திய அரசை நிர்ப்பந்தம் செய்திட, முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் பிரதமரை சந்தித்து முறையீட்டு உரிய தீர்வைக் காண உடனடி முயற்சிகளை தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.

அரசு மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தனது குழு ஒத்துழைப்பையும் வழங்கும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.