August 3, 2016
இந்தியப் பழங்குடிகள்.
ஒன்கே மக்கள் (Onge) எனப்படுவோர் அந்தமான் தீவுகளில் வசிக்கும் அந்தமான் மக்களின் ஒரு குறிப்பிட்ட பழங்குடிகள் ஆவர். இவர்கள் “நெகிரிட்டோக்கள்” எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பொதுவாக சிறிய அந்தமான் தீவு மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுத் திடல்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் ரட்லண்ட் தீவு மற்றும் தெற்கு அந்தமான் தீவின் தென்முனையின் பகுதிகளிலும் சில கூடாரங்களில் வசிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடியே தமது உணவைத் தேடுகின்றனர். ஓன்கே மக்கள் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து 50,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. கிபி 672 முதல் 1901 காலப்பகுதி வரை அந்தமானில் இடம்பெற்று வந்த குடியேற்றங்கள் காரணமாக ஒன்கே மக்களின் தொகை கணிசமான அளவு குறைந்து வந்தது. தற்போதுள்ள மக்கள் சிறிய அந்தமான் தீவில் இரண்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியின மக்களுடனான தொடர்பு, மற்றும் உணவுப் பழக்க வழக்க மாற்றங்களே இவர்களின் மக்கள்தொகைக் குறைப்பிற்கு முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன. 1901 இல் இவர்களின் தொகை 672 ஆகவும், 1911 இல் 631 ஆகவும் 1921 இல் 346 ஆகவும்; 1931 இல் 250 ஆகவும், 1951 இல் (இந்திய விடுதலைக்கு கிட்டவாக) 150 ஆகவும் இருந்தது. தற்போது (2008 இல்) இவர்களின் தொகை ஆக 100 மட்டுமே உள்ளது. டிசம்பர் 2008 இல் நச்சு திரவத்தை அருந்தியதால் இவ்வினத்தின் 8 ஆண்கள் இறந்தனர். ஆல்ககோல் என நினைத்து மெத்தனால் என்ற நச்சுத் திரவத்தை அருந்தியதால் இவர்கள் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 15 ஒன்கே இனத்தவர் இந்நிகழ்வில் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.2009 இல் நான்கு ஒன்கே இனப் பெண்கள் மீளத் திருமணம் செய்ய சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டனர். இவ்வினத்தில் பெண்கள் மீளத்திருமணம் புரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போடோ மக்கள்(Bodos) எனப்படுவோர் வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். 1991 ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தில் 1.2 மில்லியன் போடோ இனத்தவர்கள் வாழ்கிறார்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 53. விழுக்காடு ஆகும். அசாம் மாநிலத்தின் உதால்குரி, கொக்ராஜார் ஆகிய நகரங்களில் இவர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தியாவின் ஷெடியூல் வகுப்பினரில் போடோக்கள் 8வது இடத்தை (1971) வகிக்கின்றனர். இவர்கள் போடோ மொழியைப் பேசுகின்றனர். போடோக்கள் போடோ-கச்சாரி என்ற இனக்குழுக்களின் 18 பிரிவுகளில் ஒன்று என 19ம் நூற்றாண்டில் முதன் முதலாக வகைப்படுத்தப்பட்டது. வடகிழக்கு இந்தியாவின் பெரும் பகுதியிலும், நேபாளத்திலும் போடோக்கள் வாழ்கின்றனர். பிரம்மபுத்ரா ஆற்றுக் கரைகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர்ர் போடோக்கள் ஆவர். போடோக்கள் முன்னைய காலங்களில் தம்முடைய மூதாதையோரயே வழிபட்டு வந்தனர். இதற்கு “பாத்தூயிசம்” என்று பெயர். அண்மைக்காலங்களில் இந்து சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். 1980களின் இறுதிப் பகுதியில் இருந்து போடோக்கள் தமக்கு சுயாட்சி வழங்கக்கோரி உபேந்திரா நாத் பிரம்மா தலைமையில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர் இப்போது போடோக்களின் தந்தை என அழைக்கப்பட்டு வருகிறார். போடோக்களின் தனித்துவம், பண்பாடு, கலாசாரம், மொழி ஆகியவற்றைப் பேண நடத்தப்பட்ட போராட்டங்களை அடுத்து இவர்களுக்கு “போடோலாந்து பிராந்தியக் கவுன்சில்” என்ற தனியான நிர்வாக அலகு தற்போதைய கொக்ராஜார் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது. சுயாட்சிக்கான போராட்டங்கள் “அனைத்து போடோ மாணவர் அமைப்பு” மூலமாகவும், “போடோ விடுதலைப் புலிகள்” (Bodo Liberation Tigers, BLT) என்ற ஆயுத அமைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டது. இவர்களைவிட “போரோ பாதுகாப்பு படை”, போடோலாந்து தேசிய மக்களாட்சி முன்னணி, போன்றவை ஆயுதம் தாங்கி தற்போதும் போராடி வருகின்றன. 2006 அசாம் மாநில தேர்தல்களில் போடோ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து திஸ்பூரில் போட்டியிட்டு ஆட்சியை அமைத்தனர்.
போண்டாஅல்லது போண்டோ மக்கள் என்பவர்கள் இந்தியாவில் ஒரிசா மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் மல்க்காங்கிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள். இப்பகுதி, ஒரிசா, சட்டீசுகர்கு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் சேரும் இடத்தில் உள்ளது. இவர்களில் இன்று ஏறத்தாழ 5000 பேர்கள்தான் இருக்கின்றனர் (1991 கணக்கெடுப்பின் படி). இவர்கள் முண்டா என்னும் ஆசுத்திரேலிய-ஆசிய குடும்பத்து மொழி பேசும் மக்கள் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இம்மக்கள் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட (scheduled tribe) இனங்களில் ஓரினமாக பதிவு செய்ய்ப்பட்டுள்ளனர். இவர்கள் ரேமோ (Remo) என்றும் அறியப்படுகின்றார்கள். இவர்கள் பேசும் போண்டா மொழியில் ரேமோ என்றால் மக்கள் என்று பொருள். இவர்களுக்கு வழங்கும் பிற பெயர்கள் போண்டோ, போண்டோ பொரா’சா (Bondo Poraja).இவ்வினத்தவர் ஓரளவுக்கு ஆடை அணிகலன்கள் அணிகின்றனர். இவ்வின மக்களின் பெண்கள் தங்கள் கழுத்தில் மிகவும் தடிப்பான வெள்ளி வளையங்களை அணிகின்றனர். காதிலும், மூக்கிலும் பல இடங்களில் தோடு, வளையங்கள் அணிகின்றனர். சிறு குழந்தைகளும் மூக்கணிகள் அணிகின்றனர். போண்டா இன மக்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இம்மக்கள் தங்கள் தலை முடியில் விளக்கெண்ணெய் தேய்த்துக்கொள்கிறார்கள். இவ் இனப் பெண்கள் தங்களைவிட 10-15 அகவை (வயது) குறைந்த ஆண்களை மணந்து கொள்கின்றனர். திருமணம் செய்துகொள்ளும் பொழுது பெண்ணுக்கு 20-25 அகவையும் ஆணுக்கு ஏறத்தாழ 10 அகவையும் இருக்கும். இவர்கள், அருகில் உள்ள ஊர்ப்புற சந்தைகளில் பண்டமாற்று முறையில் (“பின்னிமோய் புரோத்தா, ‘binnimoy protha’)பொருள்களைப் பரிமாறுகிறார்கள். இம்மக்கள் தாங்கள் வாழிடங்களில் சென்று கண்பது எளிதல்ல என்று சிலர் கருதவதால், ஞாயிற்றுக் கிழமை சந்தைகளில் காண்பதே பெரும்பாலும் நிகழ்வதாகும்
இந்தியப் பழங்குடிகள்.
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 03, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.