Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 3, 2016

தமிழகப் பழங்குடிகள்.



தமிழகப் பழங்குடிகள்தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 3.5% உள்ளனர் (2001 கணக்கெடுப்பு). தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடிகள் உள்ளனர். இருளர், காடர், குறும்பர், தோடர் போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். பழங்குடிகள் பெரும்பாலும் காடும் காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் பணம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இவர்கள் தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் குமுகப் (சமூகப்) பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள். பெரும்பாலோருடை மொழிகள் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததென்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். முதன் முதல் எட்கர் தர்ஸ்டன் என்பாரும், பின்னர் அனந்த கிருஷ்ண அய்யர், முனைவர் அய்யப்பன் போன்றோரும் பழங்குடிகளை பற்றிய ஆய்வுகள் செய்துள்ளனர். பழங்குடி பெயர் வாழும் பகுதி மொழி அரநாடன் கோவை, ஆனைமலை மலையாளக் கிளை மொழி அலுகுறும்பர் நீலகிரி கன்னடக் கலப்பு மொழி இருளர் கோவை, சேலம், காஞ்சிபுரம், நீலகிரி, விழுப்புரம் இருள மொழி தமிழ் கிளைமொழி ஊராளி நீலகிரி (சத்தியமங்கலம்) மலையாளம் கலந்த தமிழ் எருக்கலா காஞ்சிபுரம், செங்கல்பட்டு தமிழின் கிளை மொழி. மலையாளம் கலப்பு எரவல்லன் கோவை (மலைப்பகுதி) ? கசபர் நீலகிரி, கூடலூர்,உதகமண்டலம் கசபர் மொழி, கன்னடம் தமிழ் கலப்பு காணிக்காரர் கன்னியாகுமரி மலையாளம் தமிழ் மொழி காடர் கோயம்புத்தூர், ஆனைமலை,திருச்சிராப்பள்ளி,தஞ்சாவூர் கன்னடக் கலப்பு மொழி குறும்பர் நீலகிரி கன்னடக் கலப்பு மொழி குடிமலைக்குடி தமிழக-கர்நாடக எல்லை மலைகள் துளு மொழி குறிச்சான் தருமபுரி கன்னடக் கிளை மொழி பணியர் நீலகிரி, பாலக்காடு, கண்ணனூர், வயநாடு மலையாளக் கிளை மொழி பழியர் பழனி மலைக்குன்றுகள், சிறுமலை, இராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் தமிழ் மொழி புலையர் பழனி மலைக் குன்றுகள், ஆனைமலை, மதுரை மாவட்டம் தமிழ் மொழி மலமலசர் ஆனைமலைப் பகுதிகள் தமிழ், தமிழின் கிளைமொழி மலையாளி சேர்வராயன் மலை, கொல்லி மலை, சவ்வாது, ஏலகிரி, பச்சை மலைக் குன்றுகள் தமிழ், மொழி முதுவர் ஆனைமலை, ஏலமலை, ஏலமலையை ஒட்டியுள்ள கேரளப் பகுதிகள் தமிழின் கிளை மொழி தோடர் நீலகிரி தோடா மொழி படுகர் நீலகிரி கன்னடக் கிளை மொழி
தமிழரின் தோற்றம், பரவல் பற்றியும், அரசியல், பண்பாட்டு, தொழில்நுட்ப வரலாறு பற்றியும் தமிழ் வரலாறு கட்டுரை விபரிக்கும். தமிழர் தோற்றம் பற்றி இரு கருதுகோள்கள் உண்டு. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று. தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லதுதிராவிடர்களோ தான் (உதா. பர்போலா 1974; 2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும். (தி ஹிண்டு, 2005)
கோத்தர்என்போர் நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி இன மக்கள். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் ஏழு இடங்களில் வாழ்கின்றனர். இம்மக்கள் நீக்ரிடாய்ட் இனத்தைச் சேர்ந்தோர் ஆவர். இவர்கள் தாங்கள் வாழுமிடத்தைக் கோகால் என்றழைக்கின்றனர். வீட்டை அவர் மொழியில் பய் என்றழைப்பர். தாம் வாழும் தெருக்களை கேரி என்றழைப்பர். உணவுக்கு கேப்பையை விரும்பி உண்கின்றனர். இராகிப் பிட்டு இவர்கள் விரும்பும் முக்கிய உணவு. எருமைக் கறியையும் விரும்பி உண்பர். கருமார்த் தொழில் (இரும்புக் கருவிகள் செய்தல்), மட்பாண்டம் செய்தல் ஆகியவற்றில் வல்லவர்கள். கோத்தர் பேசும் மொழி கோத்த மொழி எனப்படுகிறது. இது தென் திராவிட மொழிப்பிரிவைச் சேர்ந்தது. இம்மொழி வரிவடிவம் அற்றது.கோத்தர் இறந்தோரை எரிக்கும் வழக்கம் கொண்டவர். இறந்த அன்று பச்தாவ் (பச்சைச் சாவு) என்றும் ஓராண்டு கழித்து வர்ல்தாவ் (காய்ந்த சாவு) என்றும் இரு சடங்குகள் நடத்துவர்.
காடர் என்போர் தமிழ் நாட்டில் உள்ள பழங்குடிகளில் ஓரின மக்கள். இவர்கள் கோயம்புத்தூரில் உள்ள ஆனைமலை, பரம்பிக்குளம் கங்கடவு பெரும்பாறை போன்ற இடங்களிலும், மற்றும் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் மொழி கன்னட மொழி கலப்புள்ளது.
தோடர்கள்தமிழ் நாட்டில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்றனர். தோடர்கள் தாம் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர். இம் மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. இதனால் இம்மக்களை மாந்தவியலாளர் செல்லமாக எருமையின் குழந்தைகள் என அழைப்பர். இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது. இம்மக்கள் பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள்.தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர். தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர். தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார். இவர்கள் முற்காலத்தில் பல்கணவ முறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.
 படுகர்(Badagas அல்லது படகர்) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். நீலகிரியில் வாழும் 18 இன மக்களில் ஒரு இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாததாகும். இவர்கள் விஜய நகர பேரரசின் காலத்தின்போது மைசூர் நிலப் பகுதிகளில் இருந்து நீலகிரிக்குப் இடமபெயர்ந்தார்கள் எனப்படுகிறது. நீலகிரியில் வாழும் படகர்களை வடுகர் என்றும் படகர் என்றும் கௌடர் என்றும் கூறுகின்றனர். நீலகிரி படகர் சமுதாயத்தில் 18 பிரிவுகள் உள்ளன.
கசவர்கள் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர். இம்மக்கள் தடித்த உதடும் சுருண்ட மயிரும், கருத்த நிறமும் கொண்டவர்கள். இவர்கள் தாம் வாழும் குடிசையைச் சேரி என்று அழைப்பர். இக்குடிசைகள் மூங்கில், கம்பு ஆகியவற்றைக் கொண்டு புல்லால் வேயப்பட்டு இருக்கும். இவர்தம் மொழி கன்னட மொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. திருமணம் பெரும்பாலும் பெரியவர்களாலேயே முடிவு செய்யப்படுகிறது. மணமுறிவு, மறுமணம் ஆகியன வழக்கில் உள்ளன.
காணிக்காரர் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோட்டில் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றனர். இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும். இவர்கள் பேசும் மொழி காணிக்காரர் மொழி எனப்படுகிறது. இவ்வின மக்கள் குட்டையான உருவமும் சுருண்ட மயிரும் கருந்த நிறமும் கொண்டவர்கள். பச்சை குத்திக் கொள்ளுதலும் கடுக்கன் அணிந்து கொள்ளுதலும் இவர்தம் பழக்கங்களில் குறிப்பிடத் தகுந்தன. இவர்கள் தாங்கள் வாழுமிடத்தை காணிக்குடி என அழைப்பர். மணமாகாத ஆண்களுக்கு தனியாகக் குடியிருப்புகள் உண்டு. மணமாகோதோர் இரவில் அங்குதான் தங்கவேண்டும். காணிக்காரர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தாங்கள் வாழுமிடத்தை மாற்றுகின்றனர். வேளாண்மை இவர்தம் முக்கியத்தொழில். மரவள்ளிக் கிழங்கு முக்கிய உணவு. இம்மக்களுக்கு ஆவி உலகக் கோட்பாட்டிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை உண்டு. இறந்தவர்கள் இவர்கள் எரிக்கவோ புதைக்கவோ செய்கின்றனர்.
பணியர்தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டாரத்திலும், கேரளத்தில் பாலக்காடு, கண்ணனூர், வயநாடு ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றனர். கருத்த நிறமும் சுருண்ட மயிரும் தடித்த உதடும் கொண்ட இம்மக்கள் நீக்ராயிட் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடும் உழைப்பாளிகளான இம்மக்களில் பெரும்பாலானோர் உழவு வேலை செய்கின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் குடிசையைச் சாலை எனவும் பல குடிசைகள் கொண்ட ஊரினை பாடி எனவும் அழைக்கின்றனர். பாடியின் தலைவன் கூட்டன் எனப்படுவான். இவர்கள் ஒரு காலத்தில் மரம் வெட்டியும் யானை பிடித்தும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆவி உலகக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்கள். இவர்களது கோவில் தெய்யபிறை எனப்படுகிறது. இம்மக்கள் பேசும் மொழி மலையாளத்தின் கிளைமொழியாகும். இறந்த மக்களைப் புதைப்பது இவர்கள் வழக்கம்.
பெட்ட குறும்பர்தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் வாழும் பழங்குடி இனத்தோர். இவ்வினத்தார் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்ப் பகுதியில் வாழ்கின்றனர். பெட்ட எனின் இவர்தம் மொழியில் மலை என்று பொருள். இவர்கள் குறுமன், குறும்பன், குறுபன் முதலிய பல பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். இம்மக்கள் தாம் வாழுமிடத்தை பாடி என்று அழைக்கின்றனர். இவர்களது குடிசைகள் மூங்கிலால் கட்டப்பட்டு இருக்கும். குடிசைகட்கு நடுவில் பெரிய குடிசையொன்றும் இருக்கும். இதற்கு வெளியில் எப்போதும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். முதுமலை, தெப்பக்காடு பகுதிகளில் வாழும் பெட்ட குறும்பர்கள் யானைகளைப் பழக்குவதில் தேர்ந்தவர்கள். தேன் எடுப்பதும் மீன் பிடிப்பதும் இவர்தம் தொழில். நெருப்பு மூட்டி அதனைத் தெய்வமாகப் போற்றுகின்றனர். பெட்ட குறும்பர் பேசும் மொழி பெட்ட குறும்பர் எனப்படுகிறது. இது தென்திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தனித் திராவிட மொழியாகும். பேராசியர் எமனோ, கமில் சுவலபில் ஆகியோரும் தத்தம் நூல்களில் இக்கருத்தையே குறிப்பிட்டுள்ளனர். பெட்டக் குறும்பர் இன மக்களிடையே மொத்தம் 16 பெயர்கள் தாம் உண்டு. அவை மாண்பன், மாறன், பொம்மன் முதலான எட்டு ஆண் பெயர்களும் மாண்பி, மாரி, பொம்மி முதலான எட்டு பெண் பெயர்களும் ஆகும். இறந்தோரை இவ்வின மக்கள் புதைக்கின்றனர். ஆண், பெண் இருபாலரும் இறந்தவர்களைக் கொண்டு செல்கையில் இடுகாட்டுக்குச் செல்வர். இறந்தவரின் வீட்டார் பின்னர் வேறு இடத்தில் குடியேறுவர்.
மலமலசர் என்போர் தமிழ்நாட்டின் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலைப் பகுதியில் வாழும் பழங்குடி இன மக்கள் ஆவர். இப்பகுதியில் மலமலசரைப் போன்று பதிமலசர் என்னும் இனத்தாரும் வாழ்கின்றனர். மலமலசர் மலைகளிலும் பதிமலசர் மலை அடிவாரத்திலும் வாழ்கின்றனர். மலமலசர் தாம் வாழுமிடத்தைப் பாடி என்றழைப்பர். இவர்கள் காட்டுக் கடவுளரை வழிபடுகின்றனர். நாட்டுத்தெய்வங்களைக் கும்பிடுவதில்லை. ஆசுத்திரேலிய இனத்தைச் சேர்ந்த இம்மக்கள் தடித்த உதடும் கருமையான மயிரும் குட்டையான உருவமும் கொண்டவர்கள். மலமலசர்க்கு தாடி அடர்த்தியாக வளர்வதில்லை. இவர்தம் பேச்சில் தாடி என்பதற்கு தனியான சொல்லை இல்லை. மீசையை மேல் மீசை என்றும் தாடியை கீழ் மீசை என்றும் அழைக்கின்றனர். இவர்கள் யாரும் அணுக இயலாதவாறு காட்டினுள்ளே குடிசைகள் அமைத்து வாழ்கின்றனர். இவர்கள் பேசுவது தமிழின் கிளை மொழியாகும். இறந்தோரைப் புதைத்தல் இவ்வின மக்களின் வழக்கம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.