Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 27, 2016

திருமணம் செய்து கொண்டதால் மடாதிபதியின் பதவி பறிபோனது.


திருமணம் செய்து கொண்டதால் கும்பகோணம் வீரசைவ மடத்தின் இளைய மடாதிபதியை பதவி நீக்கம் செய்து மடாதிபதி உத்தரவிட்டார்.

வீரசைவ மடம்
கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே வீரசைவ பெரிய மடம் இயங்கி வருகிறது. கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு உள்ள இந்த மடத்திற்கு இலங்கை, கர்நாடகா, திருவாரூர், தாராசுரம் உள்ளிட்ட பல இடங்களில் கிளை மடங்கள் உள்ளன. இந்த மடம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இங்கு லிங்காயத் மரபின்படி வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்த மடத்தின் 97–வது மடாதிபதியாக நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் உள்ளார். மடாதிபதிக்கு வயது முதிர்வு காரணமாக, அவருக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிவிடை செய்து வந்த கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே உள்ள கோலாரைச் சேர்ந்த கங்காதரன்(வயது37) என்பவர் இந்த மடத்தின் 98–வது இளைய மடாதிபதியாக கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டார்.

இளைய மடாதிபதி திருமணம்
இதையொட்டி கங்காதர சுவாமிகளுக்கு தீட்சை வழங்கப்பட்டு முறைப்படி லிங்காதரணம் செய்யப்பட்டு, மடத்தின் சொத்துகளை நிர்வகிக்க அதிகாரம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இளைய மடாதிபதி கங்காதரன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதை அறிந்த மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள், இளைய மடாதிபதி பதவியிலிருந்து கங்காதரனை நீக்கம் செய்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– திருமணம் செய்யாமல் முற்றிலும் பிரம்மச்சாரியாக உள்ளவரே இந்த மடத்தின் பட்டத்திற்கு வரமுடியும். ஆனால் கங்காதரன் கடந்த ஜூலை 11–ந்தேதி திருமணம் செய்து கொண்டு, அதை மறைதது இங்கு இருந்துள்ளார். அது பற்றி நான் அறிந்தவுடன் கங்காதரன் யாரிடமும் கூறாமல் சென்றுவிட்டார். இங்கிருந்து பல ஆவணங்களை அவர் எடுத்து சென்றுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவர், இளையமடாதிபதியின் திருமண புகைப்படத்தை வெளியிட்டார்.

இதுகுறித்து கங்காதரனை போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் கூறியதாவது:– மடாதிபதியாக உள்ள நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகளுக்கு திருமணமாகியுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தனது மனைவிக்கு வீடுவாங்க ரூ. 25 லட்சம் வேண்டும் என கேட்டார். அதற்கு பணம் இல்லை என்று நான் கூறியதால் எனமீது கோபம் அடைந்து கடந்த ஜூன் மாதம் 6–ந்தேதி மடத்தில் இருந்து என்னை வெளியேற்றிவிட்டார். பின்னர் நான் பெங்களூரு வந்து என்னுடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். மடத்தை விட்டு வெளியே வந்த பிறகுதான் திருமணம்செய்து கொண்டேன். இந்த மடத்தின் மடாதிபதி பற்றிய பல விவரங்களை திருச்சியில் இன்று(சனிக்கிழமை) நிருபர்களை சந்தித்து பேட்டி அளிக்க உள்ளேன் என்றார். துறவறம் இளைய மடாதிபதி திருமணம் செய்து கொண்டதால் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.