Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 15, 2016

காந்திஜியின் கடைசி நிமிடங்கள்... பாதுகாப்பு அதிகாரி கேப்டன் பாக்கியநாதன் தரும் உருக்கமான தகவல்கள்


காந்திஜி கோட்சே என்ற கொடியவனால் சுடப்பட்டு உயிர் பிரியும்  கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன? என்பது பற்றிய உருக்கமான தகவல்களை தருகிறார், கேப்டன் பாக்கியநாதன். இவர் காந்திஜியின் பாதுகாப்பு அதிகாரியாகவும், அவரது மரணத்துக்கு பிறகு இந்திய ராணுவத்திலும் பணிபுரிந்தவர். இப்போது வயது 96.

திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் தனது மகன் டேவிட் ராஜேஷ், மருமகள் ரெஜினா டேவிட் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

கேப்டன் பாக்கியநாதன் சொல்கிறார்:

“தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தேன். 18 வயதில் எனக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு மதுரையில் ஆட்கள் தேர்வு நடந்தது. அதில் பங்கேற்ற நான் தேர்வானேன். பெங்களூருவில் எங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரிட்டிஷ் ராணுவத்தில் மெட்ராஸ் பட்டாலியனில் டிராப்ஸ்மேன் சர்வேயராக எனது பணியை தொடங்கினேன்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் ஏராளமான தமிழர்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சிறப்பாக பணியாற்றியதால், டிராப்ஸ்மேன் சர்வேயராக இருந்த நான் நாயக், ஹவில்தார் என படிப்படியாக உயர்ந்து கேப்டன் ஆனேன்.
இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த போது, பர்மாவில் ஜப்பானிய படைகள் ஊடுருவின. இதையடுத்து கொல்கத்தாவில் இருந்த மெட்ராஸ் பட்டாலியன் பர்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பர்மாவில் ஷார்க் எனும் இடத்தில் ஜப்பானிய படை தடுப்பு பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டது.

அங்கு நான் ஹவில்தாராக நியமிக்கப்பட்டேன். ஷார்க் பகுதியை கைப்பற்ற ஜப்பானிய படையினர் முயன்றனர். இதனால் 36 மணி நேரம் கடுமையாக துப்பாக்கி சண்டை நடந்தது. எனது தலைமையில் இடம்பெற்ற 60 பேரில் 33 வீரர்கள் இறந்தனர். ஜப்பானிய படையில் 3 அதிகாரிகள் உள்பட 126 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வீரதீர செயலை பாராட்டி இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ் மன்னர் பரிந்துரையின்பேரில் மிகவும் உயரிய ராணுவ பதக்கம், இரண்டாம் உலகப்போரின் கதாநாயகன் எனும் பட்டம் ஆகியவற்றை அப்போதைய தென்கிழக்கு ஆசியா கமாண்டராக இருந்த லூயிஸ் மவுண்ட் பேட்டன் பிரபு எனக்கு வழங்கினார்.

இதற்கிடையே நாங்கள் பர்மாவில் இருந்து ஜப்பானுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அனைவரும் தயாராக இருந்த நேரத்தில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் அணுகுண்டுகள் வீசப்பட்டன.

இதில் நிலைகுலைந்த ஜப்பான் சரண் அடைந்தது. இல்லாவிட்டால் போர் மேலும் தீவிரம் அடைந்து எங்களின் பயணம் ஜப்பான் வரை நீடித்து இருக்கும்.
நமது தேசம் சுதந்திரம் பெற்றதும் முதல் சுதந்திர தினவிழா புதுடெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்தது. அங்கு நடந்த ராணுவ அணிவகுப்பில் நான் பங்கேற்றேன். 21 பீரங்கி குண்டு கள் முழங்க பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 21 பீரங்கி குண்டுகள் முழங்க நமது இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான் என நாடு இரண்டாக பிரிந்ததை தொடர்ந்து ஆங்காங்கே கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் பார்லிமெண்ட் போலீஸ் நிலைய ராணுவ அதிகாரியாக இந்திய அரசு என்னை நியமித்தது. அப்போது மகாத்மா காந்திக்கு பாதுகாவலராக நியமிக்கப்பட்டேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.

காந்திஜி பிர்லா மாளிகையில் வசித்தார். மிகப்பெரிய அகிம்சைவாதியான அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் நாங்கள் மாளிகைக்குள் செல்லும் போது சாதாரண உடையில் தான் செல்வோம். ராணுவ உடையில் சென்றால் எனது நாட்டில் எனக்கு ராணுவ பாதுகாப்பா? என்று கடிந்து கொள்வார். தினமும் மாலை 6 மணிக்கு பிரார்த் தனைக்காக வெளியே வருவார். அவருடன் நிறைய பேர் பிரார்த் தனையில் பங்கேற்பார்கள். பார்வையாளர்களும் வருவார்கள். அனைவரிடமும் எளிமையாக பழகுவார். நாட்டின் பெரிய தலைவர் சாதாரணமாக பழகியதை இப்போது நினைத்தாலும் ஆச் சரியமாக இருக்கும்.
தனது இளமைக்கால அனுபவங்கள் பலவற்றை எங்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். சிறுவயது குறும்புகள் என எதையும் ஒளிவு, மறைவின்றி பேசுவார். சிலநேரம் நகைச்சுவைகளை சொல்லி பிறரை சிரிக்க வைப்பார். அதேநேரம் மத மோதல்களை பற்றி பேசும்போது மிகவும் வருத்தம் அடைவார். இந்தியாவில் பிறந்த அனைவரும் சகோதர, சகோதரிகளே... ஆளுக்கு ஒரு மதத்தை தழுவினால் உறவு முறை மாறிவிடுமா?. எந்த மதத்தில் இருந்தாலும் அனைவரும் இந்திய தாயின் பிள்ளைகளே என்பார். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் இந்தியா வேகமாக வளரும் என்றும் கூறுவார்.
காந்திஜிக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் 3 மாதங்கள் இருந்தேன். சிறிய கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்த கோட்சே 5 ரவுண்டுகள் மகாத்மா காந்தியை சுட்டுள்ளான்.

எதிலும் அகிம்சையை கடைப்பிடித்த மகாத்மா காந்தி, கொடியவன் கோட்சேவின் துப்பாக்கி குண்டுகளையும் சகித்து கொண்டாரோ? என எண்ணும் வகையில் சலனமற்று அவருடைய உடல் இருந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த மகானின் உடலை பார்த்ததும், துக்கம் தொண்டையை அடைக்க ராணுவ அதிகாரி என்பதையும் மறந்து கதறி அழுதேன். அதற்குள் வல்லபாய் பட்டேல் உள்பட முக்கிய பிரமுகர்களும் வந்துவிட்டனர். மகாத்மா காந்தியின் உடலை தூக்கிச் செல்லும் பெரும்பாக்கியம் எனக்கு கிடைத்தது. மேலும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றதோடு, அவருடைய அஸ்தியை தனி ரெயில் மூலம் அலகாபாத்தில் உள்ள திருவேணி சங்கமத்தில் கரைக்கும் வாய்ப்பும் கிடைத்தது பெரும் புண்ணியம்.

1939-ல் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்த நான் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய ராணுவத்தில் 1974-ம் ஆண்டு வரை பணியாற்றினேன். சிறப்பாக பணியாற்றியதற்காக இந்திய ராணுவத்தின் 3 சரித்திர புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளேன். ஓய்வுபெற்ற பின்னர் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராணுவ வரலாறு, புவியியல் குறித்து பாடம் நடத்தினேன். என் விருப்பம் ஒன்றே ஒன்றுதான். மக்கள் நாட்டுப் பற்றுடன் வாழ வேண்டும். ஜெய்ஹிந்த்...” என முத்தாய்ப்பாய் முடித்தார், பாக்கியநாதன்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.