Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 23, 2016

குற்றங்களை தடுக்க கண்காணிப்பு பணியில் ஆளில்லா விமானங்கள் : ஜெயலலிதா அறிவிப்பு


குற்றங்களைத் தடுக்க பொது  இடங்களில் 71,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது; 2  ஆளில்லா விமானங்கள் கண்காணித்து வருகின்றன என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். காவல் மற்றும் தீயணைப்புதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: கடந்த 2015ம் ஆண்டு 1,763 கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளன.  இவ்வாண்டு ஜூன் 30 வரையில் 847 கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு 11,196 களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. ஜூன் 30 வரை 5,868 களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. ஆளில்லா விமானங்கள்: அதிக மக்கள் கூடும் திருவிழாக்கள், முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் போது தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்; முக்கிய குற்றங்களில் தடயங்கள் குறித்து அறியவும் மற்றும் இயற்கை பேரிடர்களின் போது சேதங்கள் குறித்து அறிந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து விரைவு படுத்தவும் இரண்டு ஆளில்லா விமானங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குற்றங்களைத் தடுக்கும் விதமாகவும், குற்றங்கள் நிகழ்ந்த இடத்தில் தடயங்களை சேகரிக்க உதவிடும் வகையிலும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  71,000-க்கும் அதிகமான  கண்காணிப்பு கேமராக்கள் அரசு மற்றும் தனியரால் பொருத்தப்பட்டுள்ளன. குடியிருப்புகள்: கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1,615 கோடி மதிப்பீட்டில் 20,936 காவல் குடியிருப்புகள் கட்டவும், ரூ.200 கோடி மதிப்பீட்டில் 526 புதிய காவல் நிலையங்கள் கட்டவும், ரூ.356 கோடி மதிப்பீட்டில் 315 துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்ந்த வீடுகள், தங்குமிடங்கள், ஆயுதப்படை அலுவலகங்கள், காவல் ஆணையரகம், மாவட்ட காவல் அலுவலக கட்டடங்கள், அலுவலகங்களில் கூடுதல் கட்டடங்கள், காவலர் மருத்துவமனை, ஊர்காவல் படை அலுவலகங்கள் முதலியன கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, 13,034 குடியிருப்புகள், 345 காவல் நிலையங்கள், 201 இதர கட்டடங்கள் ஆகியப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய கட்டடப் பணிகள்  நடைபெற்று வருகின்றன.  காவல் துறையினர் சொந்த இல்லம் பெற்றிடும் வகையில் ‘உங்கள் சொந்த இல்லம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 47  பல்பொருள் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன.  காவல் துறையை மேலும் நவீனமயமாக்கவும், காவலர்கள் நலனை மேலும் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை எனது அரசு தொடர்ந்து எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கும் வழங்கப்படுகின்றன. உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சார்ந்தவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படுகின்றன.  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையைச் சார்ந்தவர்களும் காவல் துறையினருக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பல்பொருள் அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் பொருட்கள் வாங்கிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. நவீன தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன உபகரணங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து செயல்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.