August 15, 2016
இந்த சுதந்திர தினம் மற்றுமொரு நாளாக நம்மை கடந்து சென்று விடக்கூடாது
இந்த சுதந்திர தினம் மற்றுமொரு நாளாக நம்மை கடந்து சென்று விடக்கூடாது. ஏனெனில் அந்நியர்களிடம் பெற்ற சுதந்திரத்தை இன்று அதிகார வர்க்கத்திடம் அடகு வைக்கும் நிலையில் இந்திய மக்கள் இருப்பதை நாம் தினசரி செய்திகளில் கண்டு வருகின்றோம்.
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும், வகுப்புவாத வெறியர்களால் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் நிம்மதியிழந்து, அடிமைகளை விடவும் மோசமாக வாழும் சூழலிலேயே, சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அவல நிலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.
ஒரு நாட்டின் குடிமகன், தான் விரும்பியதை உண்ணுவதற்கும், தனது சிந்தனையை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரம் இல்லை. பிறகு எப்படி இதனை பாதுகாப்பான நாடாக கருத முடியும்? வகுப்புவாதிகள் விருப்பத்துக்கு நடக்கவில்லை என்றால் நாம் கொடூரமாக கொலை செய்யப்படலாம். எனில் நாம் சுதந்திர நாட்டில்தான் வாழுகிறோமா? குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டு இல்லாமல், தேசியக் கொடியை பிரதமர் ஏற்றுமளவுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு உள்ளது என மார்தட்டிக் கொள்வது, உடலுக்குள் ஆயிரம் வியாதிகளை வைத்துக் கொண்டு அழகான உடுப்பு உடுத்தி ஆரோக்கியமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு ஒப்பாகும்!
ஒரு நாட்டின் குறிப்பிட்ட இன மக்களை, அந்நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என கூறி, பெரும்பான்மை மக்களால் அழித்து ஒழிக்கும் போது, சர்வதேச சமூகத்துக்கு பதில் சொல்லும் விதமாக சம்பந்தப்பட்ட நாட்டின் அரசியல் தலைவர் கூறும் பசப்பு வார்த்தைகள் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை போக்க உதவாது. பிரதமர் மோடி தலித்துகளுக்காக இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதும் இப்படிப்பட்டதுதான். மாட்டுக்காக மனிதர்கள் கொல்லப்பட்டு பின், அவர்களை தாக்காதீர்கள்; என்னைத் தாக்குங்கள் என மோடி கூறுவது யாரை ஏமாற்றுவதற்காக? அவரின் பசப்பு வார்த்தைகள் ஒன்றை நிரூபித்துள்ளன. அதாவது முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் இந்திய பிரஜைகள் அல்ல; அவர்கள் இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள் என்ற இந்துத்துவ ஃபாசிஸ சித்தாந்தத்தை அவரின் பசப்பு வார்த்தைகள் மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியுள்ளன.
காலனி கொடுங்கோன்மை நாட்களில் கூட அனுபவிக்காத துயரங்களை, முஸ்லிம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் வகுப்புவாத ஃபாசிஸத்தின் கொடுங்கோன்மையில் அனுபவித்து வருகிறோம். மோடியின் இரண்டு ஆண்டு கால ஆட்சி, நாட்டை மீண்டும் இன்னொரு வடிவிலான அடிமை ஆட்சிக்கு கொண்டு சென்றுள்ளது. வகுப்புவாத ஃபாசிஸ சர்வாதிகாரம் இந்தியாவில் அறிவிக்கப்படாத ஆட்சி முறையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஜனநாயக விரோத சக்திகளை ஆட்சிப் பீடத்திலிருந்து தூக்கியெறிய, மதச்சார்பற்ற சக்திகள் அவசியம் கருதி அவசரமாக ஒன்றிணைந்து போர் முரசு முழங்க வேண்டும். காலனி ஆதிக்கத்தில் இருந்து தேசத்தை விடுவித்த விடுதலைப் போராட்ட வீரர்களின் அடிச்சுவட்டில் பயணித்து, வகுப்புவாத ஃபாசிஸ ஆதிக்கத்தில் இருந்து தேசத்தை விடுவிக்க இந்த நாளில் சபதமேற்போம்!.
இந்த சுதந்திர தினம் மற்றுமொரு நாளாக நம்மை கடந்து சென்று விடக்கூடாது
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.