Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 8, 2016

வைர வியாபாரி மகனுக்கு கிடைத்த ‘கசப்பான வாழ்க்கைப் பாடம்’


குஜராத்தைச் சேர்ந்த இளைஞர் திரவ்ய தோலாக்கியா, சில ஆயிரம் ரூபாய் பணத்துடன் கேரளாவுக்கு வந்தார்.  ஆங்காங்கே கிடைத்த சிறுசிறு வேலைகளைப் பார்த்து தனது அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு வழிதேடிக் கொண்டார்...!

இதிலென்ன அதிசயம்? இவரைப் போன்ற எண்ணற்ற இளைஞர்கள் தினந்தோறும் வேலை தேடி வெளிமாநிலங்களுக்குச் செல்கிறார்களே, கிடைக்கும் வேலைகளைப் பார்க்கிறார்களே என்கிறீர்களா?

கொஞ்சம் பொறுங்கள், இளைஞர் திரவ்யவின் அப்பாவுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது, அவரது வைர வியாபாரம், 71 நாடுகளுக்குப் பரந்து விரிந்திருக்கிறது. இப்படி, திரண்ட சொத்துகளுக்கு ஒரே வாரிசு, 21 வயது இளைஞர் திரவ்ய தோலாக்கியா.

அப்புறம் ஏன் அவரை வேலை தேடிக்கொள்ளும்படி தனியே கேரளாவுக்கு அனுப்ப வேண்டும்?

அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்த தனது மகன், வாழ்க்கை என்றால் என்னவென்று நேரடியாக அனுபவித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அந்த வைர வியாபாரி சவ்ஜி தோலாக்கியா நினைத்ததுதான் காரணம். அதனால், ஒரு மாதம் இப்படி வேலை பார்க்கும்படி பணித்திருக்கிறார்.

அது பற்றி சவ்ஜி தோலாக்கியாவே கூறுகிறார்:

‘‘நான் என் மகனுக்கு மூன்று நிபந்தனைகள் விதித்தேன். நீ உனக்குத் தேவையான பணத்தை உழைத்துத்தான் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். அதேநேரம், ஒரு இடத்தில் ஒரு வாரத்துக்கு மேல் வேலை செய்யக்கூடாது. எனது பெயரையோ, செல்போனையோ பயன்படுத்தக் கூடாது. தவிர்க்கவே முடியாத நிலை என்றால் தவிர, அவசரத்துக்காக கையில் கொடுக்கப்பட்டிருக்கும் 7 ஆயிரம் ரூபாயை பயன்படுத்தக் கூடாது. நிஜத்தில் வாழ்க்கை என்றால் என்ன, ஒரு வேலை தேடிக்கொள்ளவும், சம்பாதிக்கவும் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று என் மகன் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். இதையெல்லாம் நேரடி அனுபவம் தவிர வேறு எந்தப் பல்கலைக்கழகமும் கற்றுத் தராது.’’



இப்படி வித்தியாசமாக சிந்தித்த சவ்ஜி தோலாக்கியா, குஜராத் சூரத்தில் உள்ள ஹரே கிருஷ்ணா வைர ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர்.

மகன் திரவ்ய தோலாக்கியா, அப்பாவின் சவாலை ஏற்றுக்கொண்டார். அவர் முன்பின் அறிந்திராத பகுதிக்கு, தெரியாத மொழி பேசும் பகுதிக்குச் சென்றுதான் வேலை தேட வேண்டும் என்பது கூடுதல் நிபந்தனைகள்.

எனவே, தான் அறிந்திராத மலையாளம் மொழி பேசும் கேரளத்தின் கொச்சி நகரத்துக்குச் செல்ல திரவ்ய முடிவெடித்தார்.

இந்த அனுபவம் எப்படி இருக்கப் போகிறது, தனக்கு என்னென்ன வேலைகள் கிடைக்கும் என்று அவருக்கு துளி தெளிவும் இல்லை.

‘‘கொச்சிக்கு வந்த முதல் ஐந்து நாட்களுக்கு எனக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. தங்குவதற்கும் சரியான இடம் இல்லை. சுமார் 60 இடங் களில் வேலை கேட்டு அலைந்தேன். ஆனால் யாருக்கும் என்னைத் தெரியாத நிலையில் ஒருவரும் எனக்கு வேலை கொடுக்க முன்வரவில்லை. விரக்தி என்னை விரட்டியது. நிராகரிப்பின் வலி எப்படி இருக்கும், ஒரு வேலையின் மதிப்பு என்ன என்று அந்த சில நாட்களிலேயே நான் புரிந்துகொண்டேன்’’ என்கிறார், திரவ்ய.

வேலை கேட்டுச் சென்ற இடங்களில் எல்லாம் தான், குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஏழை விவசாயியின் மகன், 12–ம் வகுப்புதான் முடித்திருக்கிறேன் என்று திரவ்ய கூறியிருக்கிறார்.



ஒரு வார கால அலைச்சலுக்குப் பின்பு திரவ்ய தோலாக்கியாவுக்கு சேரநெல்லூரில் உள்ள ஒரு பேக்  கரியில் எடுபிடி வேலை கிடைத்திருக்கிறது. பின்னர், கால் சென்டர், செருப்புக்கடை, துரித உணவகம் என்று பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறார். எல்லாவற்றிலுமாகச் சேர்த்து ஒரு மாதத்தில் இவர் சம்பாதித்தது 4 ஆயிரம் ரூபாய்தான்.

‘‘நான் வாழ்க்கையில் பணக் கஷ்டம் என்றால் என்னவென்று அனுபவித்ததே கிடையாது. ஆனால் நான் இங்கே ஒரு வேளை உணவுக்கான 40 ரூபாயை சம்பாதிப்பதற்குக் கூட திணறித் தவித்துப் போய்விட்டேன். குறைந்தபட்சம் 250 ரூபாய் இருந்தால்தான் லாட்ஜில் இடம் கிடைக்கும் என்ற நிலை. இன்றைய வாழ்க்கை நான் நினைத்ததைவிட எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை நான் அணு அணுவாக உணர்ந்துவிட்டேன்’’ என்கிறார்.

திரவ்யவுக்கு வேலை அளிப்பதாக உறுதி அளித்தவர்களில் ஒருவர், நிதி சார்ந்த தொழில்புரியும் ஸ்ரீஜித்.

‘‘ஒரு பேக்கரியில் அந்தப் பையனைப் பார்த்ததுமே எனக்குப் பிடித்துப் போய் விட்டது. அவனிடம் ஏதோ விசேஷம் இருப்பது போலத் தோன்றியது. இந்நிலையில் அவன் என்னிடம் வேலை கேட்டபோது, ‘போன் செய்துவிட்டு வந்து பார்’ என்று கூறிவிட்டேன். ஆனால், முன்பின் தெரியாத நபரை வேலைக்கு அமர்த்துவதா என்று என்னைச் சார்ந்தவர்கள் கூறியதால், அவனது தொலைபேசி அழைப்பைத் தவிர்த்துவிட்டேன். இந்நிலையில், சமீபத்தில், அந்த இளைஞரின் தந்தை நடத்தும் வைர நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எனக்கு போன் செய்து நன்றி தெரிவித்ததுடன், திரவ்யவைப் பற்றிய உண்மைக் கதையையும் கூறினார்’’ என்று வியப்பு மாறாமல் கூறுகிறார், ஸ்ரீஜித்.

வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடத்துடன் சூரத் திரும்பியிருக்கும் திரவ்ய தோலாக்கியா, தற்போது தந்தையின் தொழிலின் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறார்.

இவரை இந்த நிஜப் பரிசோதனைக்கு உட்படுத்திய அப்பா சவ்ஜி தோலாக்கியா, கடந்த 2014–ம் ஆண்டு தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக 491 கார்கள், 200 அடுக்குமாடிக் குடியிருப்புகள், 525 வைர நகைகளை வழங்கி நாடெங்கும் பரபரப்பாய் கவனிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.