August 9, 2016
4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சீன பெருவெள்ளமும் குமரிக்கோடும்!
சீனாவின் பெரும் வெள்ளம் குறித்த தொன்மம் உண்மை என்பதை புதிய கண்டுபிடிப்புகள் உறுதிபடுத்தியுள்ளன.
மனித இன வரலாற்றில் அனைத்து பண்டையச் சமூகங்களும் பிரளயத் தொன்மங்களை கொண்டுள்ளன. விவிலியத்தில் இடம்பெற்றுள்ள நோவாவின் காலப்பிரளயம் உள்ளிட்ட பல தொன்மங்களுக்கும் முன்னோடியாக கருதத்தக்க தொன்மம், சுமேரியக் களிமண் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் பழம்பெரும் பாரம்பரிய கதைகளில் மஞ்சளாறு உடைந்து ஏற்பட்ட “பெரும் வெள்ளம்” குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. தொன்மமாக கருதப்பட்ட இவை உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே அறிஞர்களால் கருதப்பட்டு வந்தது.
புதிய தொல்லியல் கண்டுபிடிப்புகள், ஒரு இனத்தையே அதிர்ச்சிக்கும் பீதிக்கும் உள்ளாக்கிய பெரும் வெள்ளம் குறித்த தொன்மமானது உண்மை என்பதை நிரூபித்துள்ளது. சீன மக்கள் தங்கள் வாழ்வை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கையே தங்களது இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
Xia வம்ச அரசனான Yu the Great என்று அழைக்கப்படும் சீன அரசனின் காலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டதாகவும் Yu அதனை மிகச்சிறப்பாக கையாண்டு வெற்றிகரமாக மக்களை காத்ததாகவும் சீன பழம்பெரும் இலக்கியங்களும், வாய்வழி கதைகளும் கூறுகின்றன.
இந்நிலையில், சர்வதேச விஞ்ஞானிகளின் குழுவொன்று கி.மு.1920-ல் மஞ்சளாற்றங்கரையில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மஞ்சளாற்றின் கரை உடைந்ததால் மனித இனத்தின் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை மண்ணடுக்குகளில் காணப்பட்ட தடங்களை வைத்து நிருவியுள்ளனர். சீன சமூகம் புதிய கற்காலத்தில் இருந்து வெண்கல காலத்திற்கு செல்லும் காலத்திற்கு இடையிலான காலக்கட்டத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கருதப்படுகிறது.
”குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள”:
இதேபோன்றதொரு தொன்மம் நமது பாரம்பரியத்திலும் உண்டு என்பதை நாம் அனைவருமே அறிவோம். குமரிகண்டம் குறித்த தொன்மமானது வாய்ப்பு இல்லாத ஒன்று என்று சில அறிஞர்கள் கூறினாலும், சிலப்பதிகாரம் கூறும் “கொடுங்கடல் கொண்ட குமரிக்கோடு” இருந்திருக்க வேண்டும் என்றே பிற அறிஞர்கள் கருதுகின்றனர்.
சிலப்பதிகாரத்தின் காடுகாண் காதையில் கூறப்படும் “பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழகத்தின் தென்பகுதியின் சிறு நிலப்பகுதி கடல்மட்ட உயர்வு காரணமாக கடலுக்குள் சென்றிருக்கலாம் என்றே அறிஞர்கள் பலரும் கருதுகின்றனர். கண்டம் அளவு பெரிய நிலப்பரப்பு கடலினுள் சென்றிருக்க வாய்ப்பில்லை என்றே ஆய்வாளர் ஜெயகரன் உள்ளிட்டோர் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர்.
தென்னகத்தின் கடற்கரையை பொருத்தவரை கடற்கரை பரப்பானது மாற்றங்களுக்கு உட்பட்டே வந்துள்ளது. சங்க இலக்கியங்கள் கூறும் கொற்கை, அரிக்கமேடு பகுதிகளில் கடல் பின்வாங்கிச் சென்றுள்ளது. இது தொடர்பான முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் கடல் கொண்டதாக கூறப்படும் 49 நாடுகள் குறித்து அறிய வாய்ப்பு ஏற்படலாம்.
ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணகாரை நாடு, ஏழ்குறும்பனைநாடு உள்ளிட்ட 49 நாடுகளும் அறிஞர்கள் குறிப்பிடும் படி, சிறிய ஊர்களாகவே இருப்பினும், இத்தகைய ஆய்வுகள் தமிழ்குடியின் தொன்மையையும், வரலாற்றையும் எடுத்துக்கூற வாய்ப்பாக அமையும்.
4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சீன பெருவெள்ளமும் குமரிக்கோடும்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.