Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 22, 2016

3 ‘திடுக்.. திடுக்..’ திருப்பூர் பின்னலில் சிக்கும் பெண்களின் வாழ்க்கை



எல்லா துறைகளிலும், எல்லா ஊர்களிலும் ஆண் தொழிலாளர்கள்தான் அதிகம்’ என்ற தீர்ப்பை திருத்தி எழுதுகிறது, திருப்பூர். இங்கு ஆண்களைவிட, பெண் தொழிலாளர்கள் அதிகம். திருமணமான பெண்கள் உழைத்து, குடும்பத்தையே காப்பாற்றுகிறார்கள். திருமணமாகாத பெண்கள் உழைத்து பணம் சேமிக்கிறார்கள், எதிர்காலத்திற்காக!
வாரத்தில் 6 நாட்கள் பின்னலாடை நிறுவனங்களில் கடினமாக உழைக்கும் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. சனிக்கிழமைதோறும் சம்பளத்தை பெறும் அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க ஞாயிற்றுக்கிழமை கடைகளில் குவிகிறார்கள். அந்த நாளுக்கு ‘பர்சேஸ் தினம்’ என்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள். அன்று எங்கு பார்த்தாலும் பெண்கள் கூட்டம்தான். அவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு அதிக நேரம் கடைகள் திறந்திருப்பது வாடிக்கை. வடமாநில பெண்கள் அரைகுறை தமிழில்  திருப்பூர் மார்க்கெட்டிலும், அனுப்பர்பாளையம் வாரச்சந்தையிலும் பேரம் பேசி பொருட்கள் வாங்குவது, காண ரசனையான காட்சிதான்.
பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களும், இளம்பெண்களும். சொந்த ஊரில் இருந்து திருப்பூர் வந்து பணியாற்றுவதால் சுதந்திரமான மனநிலை இந்த தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது. சொந்த ஊர் என்றால், தெரிந்தவர்கள் இருப்பார்கள் என்ற தயக்கத்துடன் எந்த செயலையும் யோசித்து செய்வார்கள். ஆனால் இன்னொரு ஊரில் வந்து வேலைபார்ப்பதால் சிலருக்கு தயக்கங்கள் விலகி, அசட்டு தைரியம் வந்துவிடுகிறது. சூழ்நிலைகளும் அவர்களுக்கு ஆதரவாக அமைந்துவிடுவதால், முறையற்ற பாலியல் வாழ்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
அங்கு ஆண், பெண் தொழிலாளர்கள் சேர்ந்து வேலை பார்க்கிறார்கள். இரவும்– பகலும் அருகருகே இருப்பதால், தன்னுடன் வேலை பார்ப்பவருடன் எளிதில் காதல் வசப்பட்டு, இணைந்துவிடுகிறார்கள். பெற்றோருக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தும் இளம்காதல் ஜோடிகள் திருப்பூரில் அதிகம் என்கிறது, அங்கு எடுக்கப்பட்டுள்ள ஆய்வுகள்.
ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்ற வார்த்தைக்கு ஏற்ப காதல் திருமணம் செய்த இளம்ஜோடிகளோ சில மாதங்களில் தங்கள் இல்வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, பிரிந்து சென்று விடுவதும் உண்டு. வெளிநாட்டு கலாசாரம் போல் தாலிகட்டாமல் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் குடித்தனம் நடத்துபவர்களும் உண்டு. முறையற்ற வாழ்க்கை மூலம் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிவிட்டு சொந்த ஊருக்கு ஓடிவிடும் பெண்களும் உண்டு.
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் ஒரு பனியன் நிறுவன வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்த கும்பகோணத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருத்திக்கு, அருகே இருந்த ஒர்க்ஷாப் ஊழியருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்ததின் விளைவு அந்த பெண் கர்ப்பமானாள். அதன் பிறகே அந்த ஒர்க்ஷாப் ஊழியருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தை இருப்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. விவரத்தை அறிந்ததும் ஒர்க்ஷாப் ஊழியர் சொல்லாமல் கொள்ளாமல் ஓட்டம் பிடித்தார். 
தான் ஏமாற்றப்பட்டது ஒருபுறம், காதலன் கைவிட்டு சென்றது மறுபுறம் என்று தனது வாழ்க்கையே சூனியமாகி போன நிலையில், விஷயம் வெளியே தெரிந்தால் வெட்கக்கேடாக போய்விடும் என்று நினைத்த அந்த பெண் தனது கர்ப்பத்தை மறைத்து பனியன் நிறுவனத்தில் வழக்கம்போல் பணியாற்றி வந்தாள். நிறைமாதமானதும் தான் தங்கியிருந்த அறையில் ஏதோ ஒரு தோழி உதவியுடன் உயிரை பணயம்வைத்து பிரசவித்த அந்த பெண் மனதை கல்லாக்கிக்கொண்டு பச்சிளம் சிசுவை பழைய பொருட்கள் போட்டு வைத்திருந்த அட்டை பெட்டிக்குள் மறைத்து விட்டு, அறையை பூட்டினாள். எதுவும் தெரியாதவர் போல், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி லீவு எடுத்துவிட்டு சொந்த ஊர் சென்று விட்டாள்.

அறைக்குள் இருந்து குழந்தையின் மரண அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது தான் பச்சிளம் குழந்தை பசியால் கதறி துடித்து, உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதன்பிறகே இத்தனை விஷயங்களும் வெளியே தெரியவந்தன. பின்னர் அந்த குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர். குழந்தையை பெற்றெடுத்த இளம்பெண்ணிடம் தெரிவித்தபோது, ‘மானம் போய்விடும். குடும்பத்திற்கும் அவமானமாகிவிடும். குழந்தையை எடுத்துக்கொள்ளுங்கள். என்னை விட்டுவிடுங்கள்’ என்று கதறினாள்.
இப்போது அந்த ‘தாய்’ என்ன நிலையில் இருக்கிறாரோ தெரியவில்லை! குழந்தை, காப்பகத்தில் அனாதை என்ற அடைமொழியோடு வளர்ந்துகொண்டிருக்கிறது.
திருட்டு உறவால் வாழ்க்கையை முடித்துக்கொண்ட பெண்களின் பட்டியலும் திருப்பூரில் வெகுநீளம் என்று இன்னொரு ஆய்வு சொல்கிறது. சொந்த ஊரில் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு ஆண்கள் திருப்பூரில் பணியாற்றி வருகிறார்கள். அங்கு தன்னோடு பணியாற்றும் பெண்களை வலைவீசி பிடித்து, திருட்டு உறவை தொடங்குகிறார்கள்.
தங்களை கணவன்–மனைவி என்று கூறிக்கொண்டு வாடகைக்கு குடியேறுகிறார்கள். கொஞ்ச நாட்கள் வாழ்க்கை ஜாலியாகத்தான் போகிறது. அடுத்து அடிதடி ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்குமே சொந்த ஊரில் திருமணமாகி, இணையும், குழந்தைகளும் இருப்பது தெரியவருகிறது. முடிவில் விரக்தியடைந்து தற்கொலைக்கு வழிதேடுகிறார்கள்.
ஒருசில வாரங்களுக்கு முன்பு திருப்பூர் ராயபுரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண், 35 வயது பெண்ணுடன் வாடகைக்கு குடியேறினார். வீட்டு உரிமையாளரிடம் தங்களை கணவன்–மனைவி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். காலையில் இருவரும் வேலைக்கு சென்றார்கள். மாலையில் வீட்டுக்கு வந்தனர். ஒருவாரத்திலே இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இருவரும் மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு கட்டிப்பிடித்து கதறியபடி வீட்டுக்கு வெளியே வந்து விழுந்தார்கள். அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆண் இறந்தார். பெண் உயிர் இழுபறியானது.
போலீசார் விசாரித்ததில் இறந்தவருக்கு சொந்த ஊரில் மனைவியும், குழந்தைகளும் இருந்தனர். மாதம் ஒருமுறை குடும்பத்தை பார்க்க சென்றுவந்திருக்கிறார். உடன் தீக்குளித்த பெண் தென்மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதும், அவளும் சொந்த ஊரில் திருமணமானவள் என்பதும் தெரியவந்தது.
இதுபோல் கரூரை சேர்ந்த 40 வயது பனியன் தொழிலாளி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூரில் மனைவி, மகனுடன் குடியிருந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில வாரங் களுக்கு முன்பு வால்பாறையில் இருந்து ஒரு பெண் வந்து அந்த தொழிலாளியை தனது கணவர் என்று கூறி உரிமை கொண்டாடி ரகளை செய்தார். இந்த விவகாரம் போலீஸ் நிலையம் சென்றது.
போலீசார் அந்த தொழிலாளியையும் இரு பெண்களையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த தொழிலாளி திருப்பூரில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் பனியன் நிறுவனத்தில் வேலை செய்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததும், அவர்களுக்கு 13 வயதில் மகன் இருப்பதும் தெரிந்தது. இந்த திருமண சம்பவம் கரூரில் உள்ள தொழிலாளியின் பெற்றோருக்கு தெரியவில்லை. இந்தநிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வால்பாறையை சேர்ந்த பெண்ணை அந்த பனியன் தொழிலாளிக்கு திருமணம் முடித்து வைத்துள்ளனர். அந்த பெண்ணுக்கு 9 வயதில் மகள் இருக்கிறாள்.
இத்தனை ஆண்டுகளாகியும் தான் ஏற்கனவே காதல் திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று வால்பாறையில் வசிக்கும் மனைவியிடம் அவர் தெரிவிக்கவில்லை. அதுபோல் திருப்பூரில் உள்ள மனைவியிடம் வால்பாறையில் உள்ள இன்னொரு மனைவி பற்றியும் மறைத்து விட்டார். இரு          மனைவிமார்களும் அந்த தொழிலாளியை பிடித்து போலீசார் முன்னிலையில் கேள்விமேல் கேள்வி கேட்டு திட்டி தீர்த்து விட்டார்கள். இரு மனைவிகளில் எந்த மனைவியோடு அவரை அனுப்பி வைப்பது என்று தெரியாமல் போலீசார் விழிபிதுங்கினார்கள்.
திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் தனது மனைவியுடன் குடியிருந்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. பனியன் நிறுவனத்தில் கணவன்–மனைவி இருவரும் சேர்ந்து பணியாற்றியுள்ளனர். இந்தநிலையில் கடந்த மாதம் திடீரென்று அந்த பெண், குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டாள்.
பதறியடித்து போலீஸ் நிலையம் வந்து அந்த வாலிபர் புகார் கொடுத்தார். புகாரில் தன்னுடன் வேலை செய்து வந்த வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார். போலீசாரும் அந்த பகுதியில் விசாரணை நடத்தியபோது, அந்த பெண் தன்னுடன் வேலை செய்த திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபருடன் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது. திண்டுக்கல் வாலிபருக்கோ திருமண          மாகவில்லை. இருப்பினும் குழந்தையுடன் இருந்த பெண்ணை தன்னுடன் குடித்தனம் நடத்த அழைத்துச்சென்று விட்டார். அதன்பிறகு கை காலில் விழுந்து அந்த பெண்ணை ஒடிசா கணவர் ‘கைப்பற்றி’ அழைத்துச்சென்றார்.
இப்படி போலீஸ் சொல்லும் நிஜகதைகள் ஏராளம். மாதத்துக்கு 5 கள்ளத்தொடர்பு சம்பந்தப்பட்ட புகார்கள் வருவதாக திருப்பூர் மாநகர போலீஸ் துறை தெரிவிக்கிறது. இது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட அதிகம்.
இப்படி திருப்பூரில் திருட்டு உறவுகள் அதிகரிக்க என்ன காரணம்? இதற்கு தீர்வு என்ன?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.