August 30, 2016
14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு வாழமங்கலத்தில் கண்டெடுப்பு
14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு வாழமங்கலத்தில் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் வாழமங்கலம் கிராமத்தில் 14 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த காணிக்காவல் ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஆ.மணிகண்டன் தெரிவித்திருப்பது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சோழர்களும் இறுதிப்பகுதியில் பாண்டியர்களும் ஆட்சிபுரிந்தனர். படிப்படியாக நிலையான ஒருங்கிணைந்த ஆட்சிமுறை மறையத்தொடங்கியது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் அதிக நிலம் படைத்தவர்கள் அவ்வூரின் குறுநில மன்னர்களாக மாறினர். அவர்களே முறைப்படுத்திக்கொள்ளும் வகையில் வரிசெலுத்தி பாடிகாவலை நியமித்து வந்துள்ளது புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது,
பாடி காவலுக்கு விளையும் பொருட்களின் அடிப்படையில் கோல் அளவீட்டு முறையில் பெறப்பட்டுள்ளது. நிலமில்லாதவர்களிடம் ஆடு, மாடு மற்றும் கோழி, இறைச்சி, நெய், பால் அல்லது அதற்கு இணையான நிதி, கடமை என்ற பெயரில் வழங்குவது நடைமுறையில் இருந்துள்ளது. பிற்பகுதியில் கிராம பாடிகாவல் புரிவோர் குளம் வெட்டுதல், பாசனத்தை முறைப்படுத்தி வழங்குதல், கோயில் நிர்வாகம் உள்ளிட்ட பொது நிகழ்வுகளை முன்னெடுக்கும் உரிமை பெற்றனர்.
கீழைக்குறிச்சியும் பாடிக்காவலும்
கீழைக்குறிச்சியை (தற்பொழுது கீழக்குறிச்சி என்று அழைக்கப்படுகிற) சேர்ந்தவர்கள் பாடிக்காவல் புரிந்தததையும் கள்வர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுவை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்ததையும் இச்செயலுக்காக பயனடைந்த கிராமத்தவரால் பாடிகாவல் குழுவுக்கு விருந்து வழங்கப்பட்டதையும் புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகளான 688 மற்றும் 691 கூறுகிறது. கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல்காத்து வருவதை தெரியப்படுத்தும் வகையில் கல்வெட்டினை ஊரின் எல்லையிலோ, வயல்களிலோ, ஊரின் மத்தியிலோ, கோயிலுக்கு அருகாமையிலோ, பாடிகாவல் புரியும் நிலப்பகுதியிலோ நட்டு வைத்திருப்பதை அறியமுடிகிறது. இவ்வாறு ஒரு குறிப்பிட்ட ஊரின் வரி வசூல் உள்ளிட்ட உரிமைகளை வெளிப்படுத்தும் கல்வெட்டே ஆசிரியம் கல்வெட்டு எனப்படுகிறது.
‘ஸவஸ்தி ஸ்ரீ வட சிறுவாயி நாட்டு வாளுவமங்கலம் பகைத்தலைப்பாடியான கீழைக்குறிச்சியார் ஆசிரியம் விசையஞ்சாநல்லூர்” என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது வாழமங்கலம் என்று அழைக்கப்படும் இவ்வூர் வடசிறுவாயி நாடு என்ற சோழ மன்னர்களால் பெயரிடப்பட்ட குறுநில நாட்டின் ஒருபகுதியாக இருந்துள்ளது. பின்னர் வாளுவமங்கலம் என்ற பெயரோடு வழங்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. மேலும் இவ்வூரை கீழைக்குறிச்சியார் என்ற ஊர்ப்பெயரோடு அழைக்கப்பட்ட பாடிக்காவல் தலைவனின் கட்டுப்பாட்டில் இவ்வூர் வந்ததையும், இவ்வூரின் பெயரை விசையஞ்சான் அல்லது விசையன் அஞ்சாதவன் என்ற பொருள்படும்படி தனது பெயரின் முன்னொற்றோடு விசையஞ்சாநல்லூர் என்று கல்வெட்டு நாட்டியிருப்பதும் தெரிகிறது.
தற்போது வரை வாழமங்கலத்தில் வசிக்கும் குறிப்பிட்ட இனத்தவரின் உறவினர்கள் கீழைக்குறிச்சி கிராமத்தினரோடு உறவு பேணி வருவதை இவ்வூரில் வசிப்பவர்கள் அளித்த தகவல்கள் உறுதி செய்கின்றன என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு வாழமங்கலத்தில் கண்டெடுப்பு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 30, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
August 30, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.