Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

August 24, 2016

முதல்வரையும் குழந்தையாக மாற்றிய ஒற்றை வெள்ளி!


ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைகள்தான் தாய்நாட்டின் மானத்தை காத்தனர். ரியோவில் சாக்‌ஷி  இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தார்... சிந்து பேட்மின்டனில் வெள்ளி வென்றார். ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மகர் புரோடுவானா வால்ட் பிரிவில் அசத்தினார். இறுதிச் சுற்றில்  0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலத்தை தவறவிட்டார். ஆனாலும் இந்தியர்களின் இதயத்தில் இடம் பிடித்தார் கர்மகர். ஒலிம்பிக்கில் மங்கைகள் தங்கம் வெல்லவில்லையென்றாலும் இந்தியாவின் தங்கங்கள்தான். நாட்டின் கவுரவத்தை காத்த  மூன்று பேருக்குமே இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதான 'ராஜீவ்காந்தி கேல்ரத்னா 'விருது அளிக்கப்படவுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகள் ஒவ்வொருவராக நாடு திரும்பிக் கொண்டு இருக்கின்றனர். வெண்கலம் வென்ற சாக்‌ஷி இன்று காலையில் தாயகம் திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. முன்னதாக, பேட்மின்டன் வீராங்கனை சிந்து நேற்று தாய்நாடு வந்தார். ஹைதரபாத்தில் திறந்த வெளி பேருந்தில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து நடந்த விழாவில், சிந்துவுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் 5 கோடி ரூபாய்க்கான செக் வழங்கி பாராட்டினார். தெலுங்கானா அரசு  விழா முடிந்ததும். ஆந்திர அரசு சார்பில் விஜயவாடாவில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹைதரபாத்தில் இருந்து சிந்து விஜயவாடாவுக்கு வருவதற்காக  தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிந்துவின் பெற்றோர், பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்டோர் அந்த விமானத்தில் நேற்று மாலை விஜயவாடா வந்திறங்கினர். விமான நிலையத்தில் இருந்து இந்திரா காந்தி  ஸ்டேடியம் வரை சிந்து அவரது பெற்றோர் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்து ஸ்டேடியம் வரை வழிநெடுக இருபுறமும் மக்கள் திரண்டு நின்று சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சிந்து தனது கழுத்தில் அணிந்திருந்த ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை கூட்டத்தினரிடம்  காட்டி மகிழ்ந்தார். கோபிசந்த் கையில் தேசியக் கொடியை ஏந்தி கூட்டத்தினரை பார்த்து உற்சாகமாக கை அசைத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். சில மணி நேர பயணத்துக்குப் பின், ஊர்வலம் ஸ்டேடியம் சென்றடைந்தது.



விழாவில் ஆந்திர முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடைக்கு வந்த சந்திரபாபு நாயுடு, சிந்து கழுத்தில் அணிந்திருந்த வெள்ளிப் பதக்கத்தை ஆசையுடனும் ஆர்வத்துடன் குழந்தை போல பார்த்து மகிழ்ந்தார். சிந்துவுக்கு மனதார வாழ்த்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு,  ஆந்திர அரசு சார்பாக 3 கோடி ரூபாய்க்கான செக் வழங்கினார். ஆந்திராவின் புதியத் தலைநகரான அமராவதியில் ஆயிரம் அடி நிலம் வழங்குவதற்கான உத்தரவையும் மேடையிலேயே பிறப்பித்தார். 'கிருஷ்ணா புஷ்கரலு' நிகழ்வின் போது, 12வது நாளில் கிருஷ்ணா நதியில் சிந்துவும் கோபிசந்தும் புனித நீராட வேண்டுமென்றும் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்தார்.விழாவின் போது, திடீரென்று பாதுகாப்புத் தடைகளை  உடைத்த சந்திரபாபு நாயுடு , தான் ஒரு பேட்மின்டன் ராக்கெட்டை எடுத்துக் கொண்டார். சிந்துவுக்கும் ஒரு ராக்கெட்டை கொடுத்தார். மேடையிலேயே சிந்துவை தன்னுடன் பேட்மின்டன் விளையாட வருமாறு அழைத்தார். தொடர்ந்து மேடையிலேயே இருவரும் சிறிது நேரம் பேட்மின்டன் விளையாட, கூட்டத்தினர் அதனைப் பார்த்து உற்சாகக் கரகோஷம் எழுப்பினர்.

கிலோக்கணக்கில் இந்தியர்களிடம் தங்கம் குவிந்து கிடந்தாலும், சிந்து வென்ற இந்த ஒற்றை வெள்ளிக்கான மவுசு ரொம்பவுமே ஸ்பெஷல்தான்!


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.