Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2016

விஜயகாந்தை வாட்டும் வாஸ்து! -வணிக வளாகமாக மாறுகிறதா தே.மு.தி.க அலுவலகம்?


'கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகம், வணிக வளாகமாக மாறப் போகிறது. தேர்தல் தோல்விக்கு வாஸ்து பிரச்னையே காரணம் என்பதால் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் கேப்டன்'  என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.

மக்கள் நலக் கூட்டணியோடு தேர்தலை எதிர்கொண்டதில், படுதோல்வியைச் சந்தித்தது தேசிய முற்போக்கு திராவிட கழகம். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்தும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார் விஜயகாந்த். ' தி.மு.கவுடன் கூட்டணி அமைத்திருக்கலாம்; மக்கள் நலக் கூட்டணியை தவிர்த்திருக்கலாம்' என நிர்வாகிகள் கூறும் கருத்துக்களை எதிர்கொண்டு வருகிறார். அவர்களிடம், ' மக்கள் நலனுக்காகத்தான் இப்படியொரு கூட்டணியில் பங்கெடுத்தோம். அது அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. கட்சியின் தொண்டர்கள் ஓட்டுப் போட்டிருந்தாலே, நல்ல சதவீதத்தில் ஓட்டு வாங்கியிருக்க முடியும். அவர்கள் ஏன் நம்மை புறக்கணித்தார்கள்?' என்று விஜயகாந்த் கேட்கும் கேள்விக்குத்தான் இதுவரையில் விடை தெரியவில்லை. இந்நிலையில், கட்சி அலுவலகத்தில் மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருக்கிறார் விஜயகாந்த்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகி ஒருவர், " அரசியல் தொடர்பான முக்கிய முடிவுகளை கட்சி அலுவலகத்தில் வைத்துதான் எடுக்கிறார் கேப்டன். கட்சி அமைந்திருக்கும் இடத்தில் வாஸ்து சரியில்லை என உறுதியாக நம்புகிறார் அவர். சிறிய மாற்றங்களைச் செய்தால், நல்ல முன்னேற்றம் வரும் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். தவிர, கோயம்பேடு பகுதியில் சிறிய அளவில்கூட நிலம் கிடைப்பதில்லை. அந்தளவுக்கு மிகப் பரபரப்பான பகுதியாக மாறிவிட்டது.

இந்தப் பகுதியில் மிகப் பெரிய வணிக வளாகம் அமைத்தால் நன்றாக இருக்கும் என மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஒன்று, கேப்டனுக்கு நெருக்கமானவர்களை அணுகியது. கோயம்பேட்டில் 12 கிரவுண்ட் நிலத்தோடு, தே.மு.தி.க அலுவலகம் செயல்படுகிறது. இந்த இடத்தில் வணிக வளாகத்தைக் கட்டிவிட்டு, அதன் மாடியில் கட்சி அலுவலகத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக, மும்பையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. 140 கோடி ரூபாய் அளவுக்குத் திட்டம் தயாராகி வருகிறது" என்றார் அவர்.

' வாஸ்துபடி கட்சி அலுவலகத்தை மாற்றி அமைத்தால், அடுத்த தேர்தலில் இழந்த வாக்கு சதவீதத்தை மீட்டு விடலாம்' என நம்புகிறார் விஜயகாந்த். அதற்கேற்ப, ' வணிக வளாகத்திற்கான அடிக்கல் விரைவில் நாட்டப்படலாம்' என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.