Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

அல்சைமர் நோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்...! - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


முதிய வயதினருக்கு மிக அபூர்வமாக வரும் அல்சைமர் நோய் பாதிப்பு சமீபத்தில் உலகளவில் அதிகரித்து வருகிறது. ஒரு வகையான ஆழ்ந்த மறதி நோய் என மருத்துவர்களால் கூறப்படும் இந்த நோய், மூளையில் சீரற்ற புரதங்கள் படிவதால் ஏற்படுவதாக கூறப்படுகிறது. மூளையின் உத்தரவிற்கும் தங்களின் செயல்பாடுகளுக்கும் முரண்படும் வகையில் தங்கள் இயல்பான பணியை செய்ய முடியாமல் தவிப்பது, மொழித்திறன் பாதிக்கப்பட்டு, சிந்திக்கும் ஆற்றல் குறைவது, சற்று முன் நடந்தது, பேசியது ஆகியவை மறந்து போவது போன்றவை இந்த நோயின் பாதிப்புகள்.

65 வயது தாண்டியவர்களையே அதிகம் பாதிக்கும். இந்நோயைப் பற்றி முதன்முதலாக 1906 ல் ஜெர்மனி மருத்துவர் அலோயிஸ் அல்சைமர் உலகுக்கு எடுத்துரைத்தார். கொஞ்சம் கொஞ்சமாய் மூளையின் செல்களை சிதைத்து, ஞாபக சக்தியைக் குறைத்து, தங்களை தாங்களே மறந்துவிடும் அளவுக்கு தள்ளிவிடும் இந்த அல்சைமர் நோய், அமெரிக்காவில் மட்டும் 54 லட்சம் பேரை பாதித்துள்ளது. உலகம் முழுவதிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 4 கோடியே 70 லட்சம் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
இந்த நோய் பாதித்தவர்கள் மேற்சொன்ன பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இறுதியில் மரணத்தை தழுவுவார்கள்.

அமிலாய்டு ப்ரிகர்சர் புரோட்டீன், ப்ரிசெனிலிஸ் 1, ப்ரிசெனிலின்ஸ் 2 ஆகிய ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றம், அடிக்கடி தலையில் காயங்கள் ஏற்படுவது, மன அழுத்தம், அதிக கோப இவைகள் அல்சைமர் நோய் தாக்க காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். தற்போது இந்தியாவில் 40 லட்சம் மக்கள் இந்நோயோடு வாழ்ந்து வருகிறார்கள்.



இந்நோயை குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் முதன்முறையாக அமெரிக்க விஞ்ஞானிகள் அல்சைமர் பாதிப்பை ஆரம்பநிலையிலேயே கண்டறியும் வழிமுறைகளை கண்டறிந்துள்ளனர்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை இந்திய வம்சாவளி விஞ்ஞானி அடங்கிய அமெரிக்க விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. கண் விழித்திரையின் (ரெட்டினா) பின்பகுதியை உற்று கவனிப்பதன் மூலம் நோய் பாதித்துள்ளதா என்பதை கண்டுபிடித்துவிடலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மருந்து பிரிவில் பணியாற்றும் இந்தியரான ஸ்வாதி, ‘‘கண்ணின் விழித்திரை மூளையுடன் மட்டும் இணைந்திருக்கவில்லை. ஒட்டுமொத்த நரம்பு மண்டலங்களுக்கும் விழித் திரைதான் மையம். எனவே இதை உற்று கவனித்தாலே நரம்பு மண்டலங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள், மூளையின் செயல்பாடு ஆகியவற்றை கண்டறிந்துவிடலாம்’’ என்றார்.


இது குறித்து அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் ராபர்ட் வின்ஸ் கூறும்போது, ‘‘அல்சைமர் நோயை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் நோயை குணப்படுத்தும் மருந்துகளை மேம்படுத்துவதற்கும் வழி பிறக்கும்’’ என்றார்.

இந்த புதிய தொழில்நுட்பத்தை மனிதர்களிடம் ஆராய்ந்து முன்னோட்ட பரிசோதனை செய்யும் பணி விரைவில் துவங்கும் எனவும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

அல்சைமர் நோய் தொடர்பான ஆராய்ச்சிகளில் இது முதல்வெற்றி என்கிறது மருத்துவ உலகம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.