Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2016

தூக்கிப் போடுங்கள்!-சிறுகதை


புகழ் பெற்ற குரு ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டு இருந்தார். அப்போது சீடர்களின் தலைவனான மூத்த சீடன் குருவைப் பார்த்தான்.
""குருவே! நாங்கள் விழிப்புணர்வு பெறுவது எப்படி?'' என்று கேட்டான்.
""உங்களை அறிவால் நிரப்பிக்கொள்ளுங்கள்!'' என்றார்.
""அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால் எப்படி குருவே? புரியவில்லை. சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்!'' என்றான் சீடன்.
""உங்களை அறிவால் நிரப்பிக்கொள்வது என்றால் பல நூறு ஓட்டைகள் கொண்ட ஒரு சல்லடையில், நீரை நிரப்புவது போன்றதாகும்!'' என்றார்.
""சல்லடையில் நீரை நிரப்புவதா? அதெப்படி முடியும் குருவே?'' என்றான் சீடன்.
""முயன்று பாருங்கள் முடிகிறதா? இல்லையா? என்பதை நாளை என்னிடம் சொல்லுங்கள்!'' என்றார்.
""சரி குருவே!''
சபை கலைந்தது.
சீடர்கள் ஒன்றுகூடி சல்லடையில் நீரை எப்படி நிரப்புவது என்பது பற்றி கலந்து பேசத் தொடங்கினர்.
""செய்துதான் பார்ப்போமே!'' என்றான் சீடன்.
ஒரு பெரிய சல்லடை கொண்டு வரப்பட்டது.
ஒரு சீடன் அதில் நீரை ஊற்றினான். நீர் சல்லடை ஓட்டைகளின் வழியே வெளியேறியது.
""ஊஹூம்! இது சாத்தியமில்லை!''
மறுபடியும் யோசித்தனர்.
""ஒரு யோசனை!'' என்றான் ஒரு சீடன்.
""என்ன?''
""சல்லடையில் ஐஸ்கட்டியை நிரப்பலாம்!''
""ஆஹா! அருமையான யோசனை. அது ஓட்டைகள் வழியே ஓடாது. அதுவும் திட நீர்தானே!''
""ஆமாம்! ரொம்ப சரி!''
சல்லடையில் ஐஸ் கட்டி நிரப்பப்பட்டது.
சிறிது நேரம்தான்.
ஐஸ்கட்டி உருகி, ஓட்டைகள் வழியே நீராக ஓடிவிட்டது.
சீடர்கள் சோர்ந்து போயினர்.
மறுநாள் குருவின் முன்னே தலை கவிழ்ந்து நின்றனர்.
""குருவே! சல்லடையில் நீரை நிரப்புவது சாத்தியமே இல்லை!'' என்றனர்.
குரு அவர்களைக் கூர்ந்து பார்த்தார்.
""சல்லடையை எடுத்துக்கொண்டு என்னோடு வாருங்கள்!'' என்று சொல்லிவிட்டு நடந்தார் குரு.
சீடர்கள் அவர் பின்னே ஓடினர்.
ஆசிரமத் தோட்டத்தில் சீடர்கள் குளிக்கும் பெரிய நீர்த்தொட்டியில் போட்டார். சல்லடை நீருக்குள் மூழ்கியது.
குரு சீடர்களைப் பார்த்தார்.
""இப்போது சல்லடையில் நீர் நிரம்பியிருக்கிறது அல்லவா?'' என்று கேட்டார் குரு.
""ஆமாம்!''
குரு சொன்னார்.
""விழிப்புணர்வு பெறுவது எப்படி என்று கேட்டீர்கள். அதைப் பெற அறிவு என்னும் கடலில் உங்களைத் தூக்கிப் போடுங்கள்... அறிவு உங்களைவிட்டு விலகி ஓடிவிடாது!'' என்றார் குரு.
சீடர்களுக்குத் தெளிவு பிறந்தது.
***

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.