Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் ராம்குமார் அனுமதி: எழும்பூர் கோர்ட்டில் இன்று விசாரணை


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ராம்குமார் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ராம்குமார் தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த மருத்துவமனையை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி (24) கொடூரமாக படு கொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தின் சுற்று வட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளி தப்பியோடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

அதன் அடிப்படையில் 10 தனிப்படை போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலையாளியின் உருவத்தின் மேம்படுத்தப்பட்ட போட்டோவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தனிப்படை போலீசார் அனுப்பி வைத்தனர். 

அனைத்து ஊடகங்களிலும் இந்த படங்கள் பிரசுரமானது. இதற்கிடையே சுவாதியின் உறவினர்கள், தோழிகள், நண்பர்கள் மற்றும் இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 

எட்டு நாளுக்கு பின் சனிக்கிழமை அதிகாலை செங்கோட்டையில் உள்ள ராம்குமார் வீட்டை போலீஸ் சுற்றி வளைத்தது. அப்போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கொலையாளி ராம்குமாரை வளைத்து பிடித்தனர். 

ரத்த வெள்ளத்தில் அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 18 தையல் போடப்பட்டது. சுவாதி கொலை நடந்தது சென்னை நுங்கம்பாக்கம் என்பதால் ராம்குமாரை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்தனர். 

ராம்குமாரை 108 ஆம்புலன்சில் ஏற்றி, ஒரு மயக்கவியல் நிபுணர், காது, மூக்கு, தொண்டை நிபுணர், ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை 4.40 மணியளவில் நெல்லையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர். 

பின்னர் ஆம்புலன்ஸ் 12 மணி நேரம் பயணம் செய்து தற்போது சென்னையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கைதிகள் சிகிச்சை பெறுவதற்கென்றே தனியாக அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த அறையில் ராம்குமார் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், நெல்லை நீதிபதி உத்தரவின் பேரில், சென்னை எழும்பூர் குற்றவியல் பெருநகர நீதிமன்ற நீதிபதி முன்பு ராம்குமாரை போலீசார் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர். அவரிடம் வாக்குமூலத்தை நீதிபதி கேட்டு பெறுவார் என தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.