Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

“தெறி”க்க விடும் அரசு பஸ்கள் “ ஓரம்போ... ஓரம்போ.. ஓட்ட உடைசல் வண்டி வருது ’’


கிராமங்கள் நிறைந்த சிவகங்கை பகுதியில் இயக்கப்படும் 90 சதவீத அரசு பஸ்கள் ஓட்டை, உடைசலுடன் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி காரைக்குடி மண்டல அரசு போக்குரவத்து கழகத்தின் கீழ் 753 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த மண்டலத்திற்குட்பட்ட 11 பணிமனைகளில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்புத்தூர் ஆகிய 4 பணிமனைகள் உள்ளன. இந்த நான்கு பணிமனைகளில் மட்டும் 159 ரூட் பஸ்கள், 146 டவுன் பஸ்கள் உள்பட 300 பஸ்கள் உள்ளன. இவை 843 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

பெரும்பாலும் மோசம் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திருச்சி, திருப்பூர், கோயம்பத்தூர், பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தொலை தூர ஊர்களைத் தவிர மதுரை, தொண்டி, திருப்புத்தூர், காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் சில பஸ்கள் மட்டுமே புதியவையாகும். பெரும்பாலானவை மோசமான நிலையில் உள்ளன.

சிவகங்கை பெரும்பாலும் கிராமம் சார்ந்த பகுதியாகும். இங்கு  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு இயக்கப்படும்  டவுன் பஸ்கள் அனைத்துமே மிக மோசமான நிலையில் உள்ளன. பல டவுன் பஸ்களில் மேற்கூரை, படிக்கடுகள், சீட், டயர்கள் உள்ள இடத்திற்கு நேரே உட்புறம் உள்ள பகுதி என அனைத்துமே சேதமடைந்து பயணம் செய்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பிரதான வழித்தடங்களில் காலை, மாலை உள்ளிட்ட முக்கிய நேரங்களில் குறைவான அளவு பஸ்களே இயக்கப்படுகின்றன. சேதமான சேஸால் இயக்கப்படும் அபாயம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் கிராமங்களைச் சேர்ந்தவர்களாவார்கள். இவர்கள் பள்ளி சென்று வர அரசு டவுன் பஸ்களையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் மோசமான நிலையில் உள்ள பஸ்களின் படிக்கட்டுகள், மேற்கூரைகளில் ஆபத்தான பயணம் செய்தும் வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் புதிய பஸ்களின் சேஸை சென்னை, கோவை போன் நகர்ப்புற பணிமனைகளில் கொடுக்கின்றனர். இவ்வாறு ஒரு சேஸ் கொடுத்தால் அந்த பணிமனைகளில் இனி தேறாது என ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு அல்லது மூன்று பஸ்கள் வரை எடுத்து வந்து இங்கு இயக்கி பயணிகளின் உயிருடன் விளையாடுகின்றனர். இதுகுறித்து நரசிம்மன் கூறுகையில், “ கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மதுரையிலிருந்து சிவகங்கை நோக்கி வந்த ரூட்பஸ் முத்துப்பட்டி அருகே ஸ்டியரிங் திருப்ப முடியாமல் நேரடியாக சாலையின் குறுக்கே சென்று கண்மாய் கரை மீது பாய்ந்தது. இதில் டிரைவர், கண்டக்டர், பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. இந்த நிலையிலேயே இப்பகுதி அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன” என்றார். கார்த்திகைராஜன் என்ற பயணி கூறுகையில், ” நகரங்களில் புதிய பஸ்சுக்கான சேஸை கொடுத்துவிட்டு அங்கு காலாவதி நிலையில் உள்ள பஸ்களை வாங்கி வருவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.

அரசு சார்பில் புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யும்போது அனைத்து மாவட்டங்களையும் சரி சமமாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராமப்பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாய் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளன. இயக்கப்படும் பஸ்களும் மோசமாக இருப்பதால் தினமும் உயிர் பயத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது” என்றார். காளையார்கோவிலை சேர்ந்த கஸ்தூரிவாசன் கூறுகையில், “ எங்கள் பகுதியில் இயங்கும் அரசு பஸ்களில் இருக்கைகள் மிகவும் மோசமாக உள்ளது. படிக்கட்டுகள் உடைந்தும், சுற்றியுள்ள தகரங்கள் பெயர்ந்தும் காணப்படுகின்றது. எப்போது எந்த பொருள் கழன்று விழுமோ என்ற பயத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது” என்றார். திருப்புத்தூர் இந்திராநகரை சேர்ந்த தீனதயாளன் கூறுகையில், “ திருப்புத்தூரிலிருந்து பொன்னமராவதி செல்லும் அரசு டவுன் பஸ்சும், அதே மாதிரியாக பொன்னமராவதியில் இருந்து கண்டவராயன்பட்டி வழியாக திருப்புத்தூர் வரும் டவுன் பஸ்சுகளும் இந்திரா நகர் பகுதியில் நிறுத்துவது கிடையாது. இங்கு பஸ் நிறுத்தம் இருந்தும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் இதை பொருட்டாக கருதுவது கிடையாது” என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.