Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

பாவக்காற்று!-சிறுகதை


பவளநாட்டு அரசி, ஒருமுறை நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தாள். அவளுக்குச் சேவை செய்வதற்கு பல உறவினர்கள் வந்து விட்டனர். அவர்களும் அவ்வப்போது வைத்தியர்கள் கூறிய மருந்துகளைக் கொடுத்து வந்தனர். அப்போதும் அவளது நோய் போகவில்லை.
இந்நிலையில், இமயமலையிலிருந்து ஒரு யோகி, மன்னரைக் காண வந்தார். மன்னர், அவரை ராணியின் அறைக்கு அழைத்துச் சென்று, நோய் பற்றியும், வைத்தியர்கள் எவ்வளவு மருத்துகளைக் கொடுத்தும் குணமடையாதது பற்றியும் கூறினார்.
யோகியும், அந்த அறையைப் பார்த்து விட்டு, ""மன்னா! உன் மனைவியின் உடல் மீது பாவக்காற்று தாக்குவதால், நோய் மறையாமல் உள்ளது. பாவம் செய்தவர்கள் வந்து போவதால், பாவக்காற்று அடித்து நோயைப் போக விடாமல் செய்கிறது. எனவே, பாவம் புரியாதவர்களை மட்டும் இந்த அறைக்குள் அனுமதி. நான் கொடுக்கும் மருந்தை ஒருவர் மட்டும் வேளாவேளைக்கு இந்த அறைக்குள் வந்து கொடுத்து விட்டுப் போகட்டும். இப்படிச் செய்தால் ராணி விரைவில் குணமடைவாள்,'' என்று கூறி மருந்தையும் கொடுத்தார்.
மன்னரும் யோகி கூறியதை எல்லாரிடமும் சொல்லி, ""நானும் அறியாமல் பல பாவங்களை புரிந்திருக்கிறேன். எனவே, ராணி குணமடையும் வரை, அந்த அறைக்குள் நான் போக மாட்டேன். உங்களில் யாராவது பாவமே புரியாதவர் இருந்தால், அவர், அந்த அறையில் இருக்கலாம். ராணிக்கு மருந்து கொடுக்க ஒரு தாதி வேளாவேளைக்கு வந்து போவாள்,'' என்றார்.
அப்போது அங்கு கூடி இருந்த உறவினர்கள் எல்லாருமே அந்த அறையிலிருந்து வெளியே போய் விட்டனர். எல்லாரும் ஏதாவது ஒரு பாவத்தைச் செய்திருந்ததால், தம் பாவக்காற்று ராணி மீது பட்டு, அவள் குணமடையாமல் போய் விடுவாளோ என பயந்தே அவ்வாறு சென்றனர். ராணியும், யோகி கொடுத்த மருந்தைச் சாப்பிட்டு, ஒரே வாரத்தில் குணமடைந்து விட்டாள்.
ஒருவாரமானதும் மன்னர், யோகியைக் கண்டு ""என் மனைவி குணமடைந்து விட்டாள். இந்த ஒரு வாரகாலமாக அவள்மீது பாவக்காற்றே படவில்லை. உங்கள் மருந்தும் நல்ல பயன் அளித்தது,'' என்றார்.
""நான் கொடுத்த மருந்து எல்லா வைத்தியர்களும் கொடுத்த மருந்துதான். ஆனால், நோயாளியைச் சுற்றி எல்லாரும் கூட்டம் போட்டுக் கொஞ்சமும் காற்று வர விடாமலும், அவளை நிம்மதியாக இருக்க விடாமலும் செய்வதைக் கண்டேன். அதனால்தான், "பாவக்காற்று' எனக்கூறி எல்லாரையும் அப்புறப்படுத்தினேன். நோயாளிக்குத் தேவை நல்ல காற்றோட்டம். அப்படி நல்ல காற்றோட்டம் இல்லாவிட்டால் நோய் குணமாகாதே!'' என்றார் யோகி.
""ஆம், அது தெரியாமல் போயிற்றே,'' எனக் கூறி, யோகிக்கு நன்றி கூறினான் மன்னன்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.