Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2016

பல்லாங்குழி... பரமபதம்... தாயக்கட்டம்... போக்கிமானுக்கு இந்திய சவால்!


    பல்லாங்குழி...பரமபதம்...தாயக்கட்டம், இவையெல்லாம் நம் குழந்தைகளுக்கு ஏதோ வேற்றுக் கிரகவாசிகளின் பெயர்கள் போலத் தோன்றும். ஆனால், இதெல்லாம் நமது பாரம்பர்ய விளையாட்டுக்கள் என்று கற்றுக் கொடுக்க வேண்டிய தருணத்தில் நாமிருக்கின்றோம்.

ஏனென்றால்  இது டெம்பிள் ரன், ஆங்கிரி பேர்ட்ஸ், கேண்டி க்ரஷ் என்று செல்போனிலேயே விளையாடிக் கிடக்கும் குழந்தைகளுக்கான காலகட்டம். அந்த மாய விளையாட்டுகளின் உலகத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை வெளியில் மீட்டுக் கொண்டுவருவதே இப்போதெல்லாம் பெற்றோருக்கு பெரும் போராட்டமாக உள்ளது.

அதே மனநிலையில்தான் தன்னுடைய மகனுக்கு இந்தப் பாரம்பர்ய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியே ஆகவேண்டும் என்று ‘பல்லாங்குழி’யை தேட ஆரம்பித்தார் ஈரோட்டைச் சேர்ந்த தமிழ் பிரியா.

அந்தத் தேடுதலில் வரிசையாக இன்னும், இன்னும் பல்வேறு பாரம்பர்ய விளையாட்டுக்களின் ஆணிவேரினைக் கண்டறிந்து வெளிக்கொண்டுவர முடிந்தது பிரியாவால்.

ஈரோட்டில் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கான கடையொன்றினை நடத்தி வருகின்ற தமிழ் பிரியா, அதையும்தாண்டி இன்று பாரம்பர்ய விளையாட்டுக்களின் காதலி.

இவரிடம் தற்போது ’போர்டு கேம்ஸ்’ என்னும் கட்டம் விளையாட்டுக்கள் மட்டுமே 30ல் இருந்து 45 வரை இருக்கின்றன. அதையும் தாண்டி நடைமுறை விளையாட்டுக்களான 'கொல கொலயா முந்திரிக்கா, கில்லி தாண்டு, ஐந்து கல்' உள்ளிட்ட விளையாட்டுக்களையும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வருகின்றாராம் பிரியா.



கடந்த 2012 ம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு மே மாதம் முதல் வாரமும் குழந்தைகளுக்கான விளையாட்டு கண்காட்சியை நடத்தி வருகின்றார் தமிழ் பிரியா. ‘16 சிப்பாய்கள்’ என்னும் தலைப்பில், குழந்தைகளுக்கான இந்த சிறப்பு விடுமுறை கால விளையாட்டுப் பயிற்சியை முன்னெடுத்துள்ளார் அவர்.

இதுகுறித்து தமிழ் பிரியாவிடமே கேட்டோம். அதற்கு அவர், " நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு விஷயத்தையும் காரணமில்லாமல் கண்டுபிடிக்கவில்லை. எடுத்துக்காட்டாக மரப்பாச்சி பொம்மைகள் மூலமாக ஆண், பெண் வேறுபாடுகளையும், உடலமைப்பையும் குழந்தைகளுக்கு எளிதாக விளக்க முடிந்தது.

தாயக்கட்டம் என்னும் தாயக்கரம் விளையாடும்போது விரல்களுக்கான பயிற்சி முழுமையாக கிடைத்து வந்தது. பல்லாங்குழி, மூளை மற்றும் கைகளுக்கான பயிற்சியை ஒருசேரக் கொடுக்கக் கூடியது. சொப்புச்சாமான் விளையாட்டோ உணவுப் பொருட்களான பருப்பு, காய்கறிகள் மற்றும் அரைத்தல், கொதிக்க வைத்தல் உள்ளிட்ட உணவுத் தயாரிப்பு முறைகளையும் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்ட உதவியது" என்கிறார்.

" நாம் தாயக்கட்டம் என்று சொல்வதைத்தான் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறையில் விளையாடுகிறார்கள். அதேபோன்று கொங்குப் பகுதியில் தாயக்கட்டமாக விளையாடப்படும் விளையாட்டினை, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தஞ்சாவூர் தாயமாக விளையாடி வந்துள்ளனர். சில இடங்களில் இதற்கு பெயர் எட்டு கட்டைத் தாயம். இப்படி ஒரே விளையாட்டை மாற்றி, மாற்றி பல்வேறு முறைகளில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள், நம் முன்னோர்கள். ஆடுபுலி ஆட்டத்திலேயே 15க்கும் மேற்பட்ட முறைகள் இருக்கின்றன" என்று மேலும் ஆர்வமாகச் சொல்கிறார் தமிழ் பிரியா.

செல்போன் விளையாட்டுக்கள் படையெடுக்கும் இந்த ஆண்ட்ராய்டு காலத்தில் பல்லாங்குழியும், பாண்டி விளையாட்டும் கூட குழந்தைகளின் மனவளர்ச்சிக்கு அவசியம். விழுங்கும் விர்ச்சுவல் கேம் வேர்ல்டில் இருந்து மூளைக்கு வேலை கொடுக்கும் போர்டு கேம் வேர்ல்டுக்கு குழந்தைகளைக் கொண்டு வருவது பெற்றோர்களால் மட்டுமே சாத்தியமாகும்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.