Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 26, 2016

நிராசையாகும் மருத்துவப் படிப்பு... அகதி மாணவர்களின் ஏக்கம் தீருமா?


பி.எ‌ஸ்‌ஸி ந‌ர்‌சி‌ங், பி.பார்ம்., போன்ற படிப்புகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 1000 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட படிப்புகளை படிக்க முடியாமல், தங்களது கனவுகளை பொசுக்கிக்கொண்டு அகதிகள் முகாமில் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள், இலங்கை அகதி மாணவர்கள்.

பொறியியல் கனவை நனவாக்கிய கருணாநிதி!

தமிழகம் முழுவதும் சுமார் 108 அகதிகள் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் உள்ள சிறார்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இதில் ஆண்டுதோறும் சுமார் 4000 மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்விக்கு தயாராகிறார்கள். 1000 த்தை தாண்டி இவர்கள் மதிப்பெண் பெற்றாலும், இவர்கள் தேர்ந்தெடுப்பது கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ படிப்புகளைதான். காரணம், இநதியக் குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே இந்த மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க முடியும். பொறியியல், மருத்துவம், நர்சிங், கால்நடை மருத்துவம் ஆகிய உயர்கல்வியைப் படிக்க விரும்பினால், அதற்கு விண்ணப்பிக்க கூட இவர்களுக்கு தகுதியில்லை என்கிறது மாநில அரசின் கல்விக் கோட்பாடு.

இந்நிலையில்தான் 2010ம் ஆண்டு, திருச்சி அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவர் நாகராஜ், பிளஸ் 2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை. இந்த விவகாரத்தை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார், வழக்கறிஞர் சிவக்குமார். இதையடுத்து, பொறியியல் விண்ணப்ப படிவத்தில் இலங்கை அகதிகளுக்கு என தனி ஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்தார் கருணாநிதி. இதனால், நாகராஜைப் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பொறியாளர்களாக ஆகியுள்ளனர்; ஆகி வருகின்றனர்.

மருத்துவக் கனவை நிறைவேற்றுவாரா ஜெயலலிதா?



பொறியியல் கனவு நிறைவேறினாலும், இன்னும் மருத்துவம் படிப்பதற்கான வழி இல்லாமல், தங்களது கனவுகளோடு இருள் சூழ்ந்த கூண்டில் அடைபட்டுக் கிடக்கிறார்கள் இந்த அகதிகள். தாங்கள் விரும்பிய படிப்பை படிக்க ஏதாவது வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில், வேறொரு படிப்பை தேர்வு செய்யவும் மனமில்லாமல் உள்ளனர்.

பொறியியல் படிக்க கருணாநிதியிடம் சுரந்த கருணையை, மருத்துவம் படிக்க முதலமைச்சர் ஜெயலலிதாவிடமும் எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள் அகதி மாணவர்கள். ஈரோடு மாவட்டம் பவானி அகதிகள் முகாமில் உள்ள துஷாந்தி, 1018 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இயற்பியல் 181, வேதியியல் 178, உயிரியல் 152, கணிதத்தில் 157 என மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 2005-ல் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில் இவருடைய தந்தை விஜித் காணாமல் போனவர். அவர் உயிரோடு இருக்கிறாரா என்பது கூடத் தெரியவில்லை.

இவருடைய தாய் அருந்ததி, மூன்று பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அகதியாக தமிழகம் வந்தார். ஈரோடு மாவட்டம், பவானி முகாமில் இருந்து கொண்டு, பனியன் கம்பெனியில் வேலை செய்து, 3 பெண் குழந்தைகளையும் படிக்க வைத்தார். 10 -ம் வகுப்பு தேர்வில் துஷாந்தி 466 மதிப்பெண்கள் பெற்றார். 12-ம் வகுப்பில் தற்போது 1018 மதிப்பெண்கள் பெற்றுள்ள துஷாந்தி, நர்சிங் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் குடியுரிமைத் தகுதி அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது. ' அகதிகள் மாணவர்களும் மருத்துவம் மற்றும் நர்சிங் படிக்கலாம்' என்று தமிழக முதலமைச்சர் அரசாணை வெளியிட்டால் மட்டுமே, துஷாந்தி போன்ற மாணவர்கள் மருத்துவத் துறையில் அடியெடுத்து வைக்க முடியும்.

அகதி மாணவர்களின் வாழ்வு முதல்வர் கையில்

இது குறித்து துஷாந்தியிடம் பேசினோம். “ என் அம்மா பனியன் கம்பெனியில் வேலை செய்துதான் என்னை படிக்க வைத்தார். தற்போது அவர் வேலைக்குப் போக முடியாத நிலையில் உள்ளார். நான் படித்து வேலைக்குப் போய்தான் எனது தங்கைகளை படிக்க வைக்க முடியும் என்ற நிலை. என் ஒருவருடைய கல்வி மட்டுமல்ல, என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான அகதிகளின் கனவும், வாழ்வும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கையில் உள்ளது. அவர்கள் மனது வைத்தால் மட்டுமே குடியுரிமை இல்லாத எங்களுக்கு கல்வி உரிமை கிடைக்கும்” என்று கண்ணீரோடு வார்த்தைகளை முடிக்கிறார் துஷாந்தி.

மத்திய அரசுக்காக காத்திருக்கத் தேவையில்லை

இதுகுறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறனிடம் பேசியபோது, “ இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று ஏற்கனேவே தமிழக முதலமைச்சர் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். இரட்டைக் குடியுரிமை கொடுத்துவிட்டால் அவர்களுக்கான உரிமை கிடைத்து விடும். ஆனால் இரட்டைக் குடியுரிமை கொடுக்கும் அதிகாரம் மத்திய அரசிற்கு உள்ளது. மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்காமல், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள தகுதியுடைய மாணவர்களும் மருத்துவம், நர்சிங், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளில் சேர்க்க வேண்டும் என அரசாணை ஒன்றை முதலமைச்சர் வெளியிட வேண்டும்” என்றார்.

அகதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

“ஐ. நா. வின் சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால் அகதிகளை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்த மறுக்கிறார்கள். மற்ற நாடுகளில் அடைக்கலம் தேடி வருகிற அகதிகளுக்கு என்ன உரிமைகள் வழங்கப்படுகிறதோ, பாதுகாப்பு வழங்கப்படுகிறதோ அதேபோன்று இந்தியாவில் கடைபிடிப்பது இல்லை. இவர்களை திறந்தவெளி சிறைச்சாலையில் வைத்திருப்பது போன்றே வைத்துள்ளனர். 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் வைத்துள்ளார்கள். காவலர்களின் அனுமதியின்றி எங்கும் செல்லமுடியாத நிலையில்தான் இந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியக் குடியுரிமையும் இல்லாமல், இலங்கைக்கும் போக முடியாமல் தவித்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் போன்றவை அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதை இந்த அரசு கண்டு கொள்வதும் இல்லை. இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். அதேபோன்று இரட்டைக் குடியுரிமை விரும்புகிறவர்களுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும். அகதிகளுக்கான ஐ. நா. வின் சர்வதேச ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடவேண்டும். சட்டம், மருத்துவம் ,பொறியியல் போன்றவற்றில் இவர்களுக்கு என்று தனிப் பிரிவை ஏற்படுத்தி அதில் குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதன் பிறகு இந்தியக் குடியுரிமை வழங்க, மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

இதுகுறித்து மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜைத் தொடர்பு கொண்டு கேட்டோம். “அகதிகள் மாணவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி இல்லை என்று விதிகள் உள்ளன. இந்த ஆண்டில் மருத்துவத்திற்கு விண்ணப்பங்கள் வரவில்லை. நர்சிங் படிக்க இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்கச் சொல்லுங்கள், நாங்கள் மேலிடத்துக்கு அனுப்பி வைக்கிறோம்" என்றார்.

2014-ல் ஈரோடு அகதிகள் முகாமை சேர்ந்த நந்தினி என்ற பெண், 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் எடுத்தார். ஆனால் குடியுரிமை விவகாரம் காரணமாக அவர் கலந்தாய்வில் பங்கேற்க முடியாமல் போனது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பெண்ணுக்கு கல்வி உரிமை வழங்கக் கோரி, அரசியல் தலைவர்கள் முதல் நடிகர்கள் பலரும் அறிக்கை விட்டார்கள். ஆனாலும் இதற்கான தீர்வு எட்டப்படவில்லை.

1996 ம் ஆண்டு ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனின் மகள், ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் பயின்றுள்ளார். அதன் பிறகு ஐந்து இடங்களாக குறைக்கப்பட்டு, 2005 ம் ஆண்டுகளில் மத்திய அரசாங்கம் அதனை முற்றிலும் நீக்கியுள்ளது. அப்போதிலிருந்து நந்தினி போன்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திபெத்திய அகதிகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு அனுமதிக்கும்போது, இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் உரிமை மறுக்கப்படுவது வேதனையளிப்பதாக அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

" ஒரு நாடு, பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் எனில் அந்த நாட்டில் உள்ள பெண்கள் பெருமளவு கல்வி கற்க வேண்டும் என்பார்கள். என்னுடைய உழைப்பு நாட்டிற்கான பங்களிப்பாக இல்லையென்றாலும், என் குடும்பத்தின் வறுமையைப் போக்கவாவது தீர்வாக இருக்கவேண்டும்" என்கிறார் துஷாந்தினி.

செய்யுமா தமிழக அரசு?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.