Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

உத்தரகாண்ட் மக்களின் இடப்பெயர்வு சீனாவுக்கு விடப்படும் அழைப்பு! - எச்சரிக்கும் தருண் விஜய்


சீன எல்லையையொட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து பெரிய அளவில் வெளியேறி வருவது, எதிரி நாட்டுக்கு விடுக்கப்படும் வெளிப்படையான அழைப்பாகிவிடும் என்று பா.ஜ.க. பிரமுகர் தருண் விஜய் எச்சரித்து உள்ளார்.

இது தொடர்பாக உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் அவர் கூறும்போது, ''உத்தரகாண்டின் தொலைதூர எல்லைப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு தேடி இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்தப் போக்கினைத் தடுத்த நிறுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் ஆகியவை செய்து கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.



உத்தரகாண்டில் மலைப்பகுதிகளில் அமைந்துள்ள எல்லைப்புற கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதால் மனித நடமாட்டம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இது நமது எதிரி நாடான சீனாவுக்கு விடுக்கப்படும் வெளிப்படையான அழைப்பாகி விடும். எனவே எல்லைப் பகுதிகளில், குறிப்பாக இமயமலைப் பகுதிகளில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.

கிராமவாசிகள் இடம் பெயர்ந்ததால், சமோலி மாவட்டத்தின் பாரா ஹோதி, பிதோராகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சி மற்றும் மிலாம் பனிமலைப் பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நான் முன்ஷியாரி முதல் மிலாம் பகுதி வரை சுமார் 105 கி.மீ. தூரத்துக்கு மலையேறிச் சென்று பார்த்தேன். அந்தப் பகுதிகள் எல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

அரிய வகை மான்களுக்காகவும், போஜ்பாத்ரா வனத்துக்காகவும் உலகப் புகழ் பெற்ற இப்பகுதியில் தற்போது ஒருசில குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. இதனால் வேட்டைக்காரர்களுக்கு எந்தத் தடையுமின்றி விலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாட நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.