Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2016

ராமேசுவரத்தில் 27–ந்தேதி, அப்துல்கலாம் நினைவிடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார் 7 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்கிறார்



ராமேசுவரத்தில்அப்துல்கலாம் நினைவிடத்துக்கு வருகிற 27–ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அப்போது அப்துல்கலாமின் 7 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்கிறார்.

புதுடெல்லி,

இந்திய அணுசக்தி விஞ்ஞானி, ஏவுகணை மனிதர் என்று போற்றப்படுபவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

முன்னாள் ஜனாதிபதியான அவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27–ந்தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் மாணவர்கள் இடையே கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய உயிர் பிரிந்தது.

நினைவிடம்

அவர் மரணம் அடைந்து வருகிற 27–ந்தேதியுடன் ஓராண்டு நிறைவு அடைகிறது. அப்துல்கலாமின்
உடல் அவர் பிறந்த பூமியான ராமேசுவரத்தை அடுத்த
தங்கச்சி மடம் அருகேயுள்ள பேய்க்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்து இருந்தார். இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அறிவு சார் மையம், அருங்காட்சியகம், மணிமண்டபம் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளுக்காக முதல் கட்டமாக மத்திய அரசு ரூ.60 கோடி ஒதுக்கி இருக்கிறது.

வெறும் கூரை

இந்த நிலையில் அப்துல்கலாமிற்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக டெல்லி மேல்–சபையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் பேசினார்.

அவர் கூறுகையில், ‘‘அப்துல் கலாம் நமது தலைசிறந்த குருக்களில் ஒருவர். அதேபோல் தலைசிறந்த ஒரு ஆசிரியரும் ஆவார். ராமேசுவரத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு அடுத்த வாரத்துடன் ஒரு ஆண்டு ஆகிறது. ஆனாலும் அந்த இடம் வெறும் கூரையுடன் காட்சி அளிக்கிறது. அந்த பகுதி எங்கும் நாய்கள் அசுத்தம் செய்கின்றன. இது, நமது மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடமன்றி வேறெதுவும் இல்லை’’ என்றார்.

இதற்கு அ.தி.மு.க. எம்.பி.க் கள் அனைவரும் எழுந்து நின்று ஆட்சேபம் தெரிவித்தனர்.

தீர்வு காணவேண்டும்

அவர்களை அமைதிப்படுத்திய டெல்லி மேல்–சபை துணைத் தலைவர் பி.ஜே.
குரியன், அவர் பேசுவது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவருடைய கருத்தை தெரிவிக்க அவருக்கு உரிமை உண்டு என்றார்.

தொடர்ந்து பேசிய டெரக் ஓ பிரையன், அப்துல்கலாம் நினைவிடம் அமைப்பது தாமதமாகி வருவது தொடர்பாக மத்திய அரசையோ, மாநில அரசையோ நான் குறை கூறவில்லை. நினைவிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றுதான் கூறுகிறேன் என்றார்.

இதற்கு பதில் அளித்து ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியதாவது:–

திட்டமிட்டபடி தொடங்கும்

மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசுக்கு 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. எனினும், இப்போதைக்கு 1.8 ஏக்கர் நிலம்தான் கிடைத்து இருக்கிறது. நமது முயற்சிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் 27–ந்தேதி நாட்டப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறோம். தற்போது எங்களிடம் உள்ள நிலத்தை வைத்து நினைவகத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி திட்டமிட்டபடி வருகிற 27–ந்தேதி தொடங்கப்படும்.

நினைவிடம் அமைப்பதற்கான வரைபடம் இறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே கூடுதல் இடத்துக்காக காத்திருக்காமல் அன்றே நினைவிடம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

7 அடி உயர வெண்கல சிலை

இந்த நிலையில் வருகிற 27–ந்தேதி மத்திய அரசின் பாதுகாப்பு துறை சார்பில் பேய்க்கரும்பு பகுதியில் அப்துல்கலாம் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் 7 அடி உயரத்தில் அவருடைய முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த சிலை ஐதராபாத்தில் தயாராகி வருகிறது. சிலையை நிறுவதற்காக 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கும் பணி வேகமாக நடந்துவருகிறது.

அப்துல்கலாமிற்கு நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அப்துல்கலாமின் வெண்கல சிலையை திறந்து வைப்பார் என்றும் அப்போது அவர் மணிமண்டபம், அறிவுசார் மையம், அருங்காட்சியகம் ஆகியவை கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டுவார் எனவும் கூறப்படுகிறது.

இதில் மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், வெங்கையாநாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.