Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2016

'குறைந்த அளவே மது அருந்தியிருந்தேன்!' - ஆடி கார் விபத்து ஐஸ்வர்யா


சென்னையில், கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டித் தொழிலாளியைக் கொன்ற  ஆடி கார் ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். ' அன்றைக்கு குறைந்த அளவே மது அருந்தியிருந்தார். திருமணம் ஆகாததால் ஜாமீன் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
                                                      

சென்னை, சேத்துபட்டு பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தக ஆலோசகர் வில்சனின் மகள் ஐஸ்வர்யா. தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சனிக்கிழமையன்று, தனது ஆடி காரில் ராஜீவ் காந்தி சாலையில் அதிவேகமாகச் சென்றார். இதில், திருவான்மியூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனுசாமி என்பவர் மீது கார் மோதியதால், சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்த வழக்கில் ஐஸ்வர்யாவை  கைது செய்தனர் கிண்டி போக்குவரத்துப் புலனாய்வு போலீஸார். தற்போது புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஐஸ்வர்யா, ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், ' கடந்த 1-ம் தேதி என்னுடைய நண்பர்களுடன் இரவு சினிமாவிற்குச் சென்றுவிட்டு ஓ.எம்.ஆர் ரோட்டில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, எனது காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது சாலையைக் கடக்க முயன்ற முனுசாமி என்பவர்  என்னுடைய ஆடி காரில்  அடிபட்டுவிட்டதாக சொல்கின்றனர். இந்த விபத்தில் முனுசாமி என்பவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தார்.

அங்கிருந்த போலீஸார் என்னைப் பிடித்து விசாரித்துவிட்டு, 2-ம் தேதி என்னைக் கைது செய்தனர். என் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது; கவனக்குறைவால் விபத்தை உருவாக்கியது உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியிருக்கிறேன். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது ஜாமீன் மனு உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஐஸ்வர்யாவின் வழக்கறிஞர் வாதிடும்போது, ' ஐஸ்வர்யா மீது வழக்குப் பதிவதற்கு முன்னால், குடித்திருந்தாரா என்பது பற்றி மருத்துவமனையில் ஆய்வு செய்துள்ளனர். அதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைந்த அளவு மட்டுமே மதுவின் தன்மை இருந்துள்ளது. ஊடகங்கள்தான் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்துகின்றன.

இந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம்  304-பிரிவு(2)ன் கீழ் வழக்கு பதிவு செய்தது தவறானது. மனுதாரர் நல்ல பணியில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என வாதிட்டார்.

இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியாக, நீதியரசர் வைத்தியநாதன், ' இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை நாடிவிட்டு, நிவாரணத்திற்கு முயற்சி செய்யுங்கள். அங்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே, உயர் நீதிமன்றத்தை நாட முடியும். மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது' எனக் கூறி தள்ளுபடி செய்துவிட்டார்.

ஆடி கார் ஐஸ்வர்யாவின் ஜாமீன் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முனுசாமியின் குடும்பமோ, அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி பரிதவித்து நிற்கிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.