Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 30, 2016

நீதிமன்றங்களில் கழிவறை கட்ட 3 மாத கெடு! - பொதுப்பணித்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், 3 மாதங்களுக்குள் கழிவறைகளை கட்டி முடிக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் வேங்கை ஐ.பிரகாஷ்ராஜ் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் முறையான கழிவறை வசதிகளை செய்து தர அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர்,  ''தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் கழிவறை வசதிகள் உள்ளதா? அதை சுத்தம் செய்யும் ஊழியர்கள் உள்ளனரா என்பது உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழுவைச் சேர்ந்த டீக்காராமன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல, மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் முதல் குற்றவியல் நீதிமன்றம் வரை கழிவறை வசதிகள் எப்படி உள்ளது, எப்படி பராமரிக்கப்படுகிறது என்பதை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி தலைமையில், தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''நாங்கள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவும், தமிழக பொதுப்பணித் துறையும் ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளன.

பொதுப்பணித்துறை ஆய்வு அறிக்கையில், 'தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி, சென்னை மாநகரை தவிர தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் 320 கழிவறைகள், 320 துப்புரவு தொழிலாளர்கள் தேவை' என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிக்கையின் அடிப்படையில், கழிவறைகளை கட்டும் பணியை பொதுப்பணித் துறை மேற்கொள்ள வேண்டும். கழிவறை கட்டுவது மட்டுமல்லாமல், அதைத் தொடர்ந்து முறையாக பராமரிக்கவும் செய்ய வேண்டும்.

அதனால், இந்த பணிகள் அனைத்தையும் செய்து முடிக்க தமிழக பொதுப்பணித் துறைக்கு 3 மாதம் கால அவகாசம் வழங்குகிறோம். பணிகளை முடித்துவிட்டு, தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழுவுக்கு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்போது பணிகள் முடிவடையாமல் இருந்தால்,  எவ்வளவு நாட்களுக்குள் செய்து முடிக்கப்படும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், இந்த பணிகளை எல்லாம் சட்டப்பணி ஆணைக் குழுவை சேர்ந்த நீதிபதிகள் கண்காணிக்க வேண்டும். இப்படி நீதிமன்றங்களில் கழிவறை வசதிகள் செய்து கொடுப்பது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு பெரிய உதவியாக இருக்கும். இந்த பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு பொதுப்பணித்துறை, வருகின்ற நவம்பர் 18-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்." என்று கூறி உள்ளனர்.

இதேபோல், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டி வந்த புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, கழிவறை கட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக, மக்கள் தாமாகவே முன்வந்து ஜூலை 15-ம் தேதிக்குள் கழிவறை கட்டிய 147 குடும்பத்தினருக்கு இலவசமாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' திரைப்படத்தின் டிக்கெட்டை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.