Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

5 மணி நேர போராட்டம்!


நம்பிக்கையூட்டும் இளம் டென்னிஸ் வீராங்கனையாக மலர்ந்திருக்கிறார் கிரண் ராணி... வயது 13... தொடர்ச்சியாக 8 தேசியப் போட்டிகளில் தங்கப் பதக்கம். ஒரு மாலை நேரத்தில் இந்த விளையாட்டு ராணியைச் சந்தித்து மழலைப் பேச்சு கேட்டோம்!

‘‘அம்மா அனிதா விற்பனை பிரதிநிதியாகப் பணியாற்றுகிறார். அப்பா ஞானவேலு டென்னிஸ் பிளேயர். அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். அவர் விளையாடப் போகும்போதெல்லாம் என்னையும் அழைத்துப் போவார். அப்போது வெளியே விழும் பந்தை எடுத்து போய் அவரிடம் கொடுப்பேன். இப்படித்தான் என்னுடைய டென்னிஸ் ஆர்வம் தொடங்கியது...’’ என்கிற கிரண் ராணி, 4 வயதில் இருந்தே டென்னிஸ் ஆடி வருகிறார்.

செம்பாக்கம் சீயான் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கிரண், இப்போது நந்தனம் YMCAவில் டென்னிஸ் பயிற்சியாளர் ரவி,  ஃபிட்னஸ் பயிற்சியாளர் ரியாஸ் ஆகியோரிடம் நுணுக்கம் கற்கிறார். 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று முதல் பரிசை வென்றார். 9 வயதிலேயே, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநிலப் போட்டிகளில் இரு முறை பங்கேற்று முதல் பரிசு வென்றிருக்கிறார். இந்த போட்டிகள் மூன்று செட்கள் வரை போனது.

இதுவரை 21 மாநிலப் போட்டிகளில் விளையாடி உள்ள கிரண், 2012ல்,  முகப்பேரில் நடைபெற்ற 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வென்றதே முதன்முதலாக பங்கேற்ற மாநில போட்டி. டென்னிஸ் பயணத்தின் முதல்  போட்டியையே வெற்றியுடன் தொடங்கிய கிரண் ராணி, 12 வயதில் தமிழக  டென்னிஸ் அணிக்காக ஆட ஆரம்பித்துவிட்டார்.  முதல் மாநிலப் போட்டியில் முதலிடம் பிடித்ததைப்போல, 2013ம் ஆண்டில் நடைபெற்ற தேசியப் போட்டியில் முதன்முறையாக பங்கேற்று, ஆந்திராவைச் சேர்ந்த அனன்யா மோகன் ரெட்டியை 6-0, 6-0 என நேர் செட்களில் ஒருமணி நேரத்துக்குள் வீழ்த்தினார். மொத்தத்தில், 16 தேசியப் போட்டிகளில் பங்கேற்று 14 போட்டிகளில் தங்கம் வென்றிருக்கிறார்.

‘‘இதுவரை கலந்துகொண்ட தேசியப் போட்டிகளில் கடந்த ஆண்டு திருவனந்தபுரம் டென்னிஸ் கிளப் நடத்திய 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் தங்கம் வென்றதை மறக்க முடியாது’’ என்று கூறுகின்ற கிரண், முதலில் 1-4 என பின்தங்கி இருந்து பின்னர், 5 மணிநேரம் போராடி தங்கம் வென்றார். ஒன்றரை மணிநேர ஓய்வுக்குப்பின், 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும் போட்டியிட்டு முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

டென்னிஸ் பயிற்சிக்கு 6 மணி நேரம், படிப்புக்கு 6 மணிநேரம்,  உணவு மற்றும் பிற பணிகளுக்கு 6 மணிநேரம், உறக்கத்துக்கு 6 மணி நேரம் என 24 மணி நேரத்தை கச்சிதமாக பிரித்துச் செயல்படுகிறார். போட்டி நெருங்கும் நாட்களில் மற்ற பணிகளைக் குறைத்துவிட்டு, அதிக நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறார். ரன்னிங், ஸ்கிப்பிங் ஆகிய பயிற்சிகளோடு, கால்கள் வலுபெற தினமும் ஒரு மணிநேர Tera Band Leg Exercise செய்கிறார். கட்டுப்பாடுடன் கூடிய இவரது உணவுப் பட்டியலில் முளை கட்டிய பயறு வகைகள் முக்கிய இடம் பெறுகின்றன.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற மாநிலப் போட்டியில் 14 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முறையே தங்கம், வெள்ளி வென்றதற்காக, பிரபல டென்னிஸ் வீரர் ஆனந்த் அமிர்தராஜிடம் ‘நம்பிக்கையூட்டும் இளம் டென்னிஸ் வீராங்கனை’ விருதினை வென்றிருக்கிறார். ராணிக்கு யார் ரோல் மாடல்? அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்தான்! 20 வயதுக்குள் விம்பிள்டன் கோப்பையை வெல்வதும், ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுவதுமே தன் லட்சியம் என்கிறார் இந்த இளம் சாதனையாளர்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.