Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

அறிவாலயக் கணக்கில் சேரும் தேர்தல் பணம்! -விசாரணைக் கமிட்டியின் அதிர்ச்சி


' சட்டமன்றத் தேர்தலில் கட்சித் தலைமை கொடுத்த பணத்தை எப்படிச் சுருட்டினார்கள்?' என்பது குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க. தலைமை ' . வேட்பாளர்களும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் பல கோடி ரூபாய்களைச் சுருட்டியிருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து களையெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன' என்கிறார் தி.மு.கவின் சீனியர் ஒருவர்.

தி.மு.கவின் தலைமை செயற்குழு கூட்டத்தில், தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளும் வேட்பாளர்களும் ஏராளமான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். அதிலும், தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் செய்த தேர்தல் குளறுபடிகள் குறித்து, புகார் கூறியவர்களிட்ம் ஆதாரபூர்வமாக எழுதி வாங்கியது அறிவாலயம். இதன்பின்னர் கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளின் மாவட்டச் செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். ' கொடுத்த பணத்தை என்னதான் செய்தார்கள்... பாரபட்சம் பார்க்காமல் விசாரணை நடத்துங்கள்' என இரண்டு பேர் கொண்ட கமிட்டியை அமைத்தார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின்.


தி.மு.கவின் முன்னாள் நட்சத்திரப் பேச்சாளர் மறைந்த வெற்றிகொண்டானின் மகன் சூர்யா மற்றும் பூச்சி முருகன் ஆகிய இருவரும் மாவட்டம் தோறும் சுற்றுப் பயணம் செய்தனர். ' விசாரணையின் முடிவில், வேட்பாளர்கள் சுருட்டிய பல லட்ச ரூபாய்கள், அறிவாலய அக்கவுண்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளது' என்கிறார் தி.மு.கவின் சீனியர் ஒருவர்,

மேலும் அவர் நம்மிடம், " தேர்தல் செலவுகளில் சுணக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிதியை தாராளமாக வழங்கியது தலைமைக் கழகம். முன்னாள் அமைச்சர்கள் உள்பட நல்ல நிலையில் இருந்த 20 பேருக்கு மட்டும் கட்சித் தலைமை பணம் கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் பணத்தில் இருந்து செலவு செய்து, வெற்றியைத் தேடிக் கொண்டார்கள். மற்ற தொகுதி வேட்பாளர்கள் பலரும், முடிந்த அளவுக்குப் பணத்தைச் சுருட்டிவிட்டார்கள். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, பொதுத் தொகுதிகளுக்கு 25 லட்ச ரூபாயை வங்கிக் கணக்கிலும், தொகுதி செலவுகளுக்கு ஒரு கோடி ரூபாயும் தலைமை வழங்கியது. தனித் தொகுதிகளுக்கு இரண்டரை கோடி ரூபாய் வரையில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணத்தில், 80 லட்ச ரூபாய் வரையில் சிலர் சுருட்டியிருக்கிறார்கள்.

தேர்தல் செலவு கணக்குகளைக் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என விசாரணைக் கமிட்டி நிர்வாகிகள், வேட்பாளர்களிடம் கிடுக்கிப்பிடி போட, ' கனிமொழி வந்தபோது ஏழு லட்சம் செலவு, ஸ்டாலின் வந்தபோது 8 லட்சம் வரையில் செலவு' என  பொய்க் கணக்குச்  சொன்னார்கள். ஈரோட்டில், தேர்தல் முடிந்த பிறகும் கணக்கு வழக்குகளை ஒப்படைக்காமல் இருந்தார் ஒரு நிர்வாகி. அவரிடம், ' கணக்கு வழக்குகளை ஒப்படைத்தே ஆக வேண்டும்' என கடுமையைக் காட்டியபோது, 'செலவு செய்யாமல் இருக்கும் பணம் இவ்வளவுதான்' என 4.65 லட்சத்தை ஒப்படைத்தார். நாங்கள் அதிர்ந்து போய்விட்டோம். அந்தப் பணத்தை அறிவாலயக் கணக்கில் சேர்த்துவிட்டார்கள். ராமநாதபுரத்தில், பரமக்குடி வேட்பாளர் திசைவீரனுக்கு கொடுத்த பணத்தில், ஒரு கோடி ரூபாய் வரையில் எங்கே போனது  என்றே தெரியவில்லை.

அவரிடம் விசாரித்தால், பணத்தைச் செலவு செய்ய நியமித்த ஆள் ஊரை விட்டே ஓடிவிட்டார் என்றார். அந்த நபரையும் தேடிப் பிடித்து விசாரித்தால், வேட்பாளர் சொன்னது பொய் என உணர முடிந்தது. பரமக்குடி வேட்பாளரிடம் இன்னமும் விசாரணை நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல வேட்பாளர்கள் தலா ஒரு கோடி ரூபாய் வரையில் செலவு செய்யாமல் அமுக்கிவிட்டனர். சீட் கிடைக்காத மாவட்டச் செயலாளர்களின் உள்ளடிகள் ஒருபுறம் என்றால், பணத்தையே கண்ணில் காட்டாமல் துரோகம் செய்த வேட்பாளர்கள் மறுபுறம் என தலைமையை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளனர்.

தூத்துக்குடி, நெல்லையில் நடந்த விசாரணைகளிலும் அதிர்ச்சிகர தகவல்கள் சிக்கின. யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றித் துல்லியமான அறிக்கையைத் தயாரித்து வருகின்றனர்.  வரக் கூடிய நாட்களில் பல மாவட்டங்களின் முன்னணி நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள்" என ஆதங்கத்தோடு விவரித்தார் அவர்.

தி.மு.க வரலாற்றிலேயே தேர்தல் பணம் அறிவாலயக் கணக்கில் வரவு வைக்கப்படுவது இதுதான் முதல்முறை என்கிறார்கள். ' 32 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடித்த பெருமையை அ.தி.மு.க தக்க வைத்ததற்குக் காரணமே, இப்படிப்பட்ட மாவட்டச் செயலாளர்களும் வேட்பாளர்களும் எங்கள் கட்சியில் நிறைந்து இருப்பதால்தான்' என வேதனையை வெளிப்படுத்தினார் தி.மு.க நிர்வாகி ஒருவர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.