Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

புழல் சிறையில் 'ஆடி கார் ஐஸ்வர்யா!' -பரிதவிக்கும் முனுசாமி குடும்பம்


சென்னையில், கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டித் தொழிலாளியைக் கொலை செய்த ஆடி கார் ஐஸ்வர்யா, தற்போது புழல் சிறையில் கம்பி எண்ணுகிறார். ' இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்கே தவித்து வருகிறது இறந்து போனவரின் குடும்பம்' என வேதனைப்படுகின்றனர் திருவான்மியூர் பகுதி மக்கள்.

சென்னை, பழைய மாமல்லபுரம் சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலையில், குடிபோதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தார் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த  கேக் தயாரிப்பு நிறுவனம் நடத்துபவரின் மகள் ஐஸ்வர்யா. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிகிறார். 'வீக் எண்ட் பார்ட்டி' என்ற பெயரில் நண்பர்களோடு குடித்திருக்கிறார். மறுநாள் அதிகாலையில் தரமணி வழியாக அதிக வேகத்தில் காரை ஓட்டுக் கொண்டு வந்தவர், முனுசாமி என்ற தொழிலாளி மீது காரை மோதியிருக்கிறார். இதில், சம்பவ இடத்திலேயே முனுசாமி பலியாகிவிட்டார்.

இதையடுத்து, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் கைது செய்யப்பட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில், முனுசாமியின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியிருக்கிறது திருவான்மியூர் பி.பி.கே காலனி. அந்தக் குடும்பமே முனுசாமியின் வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறது. அவருடைய மனைவி கோவிந்தம்மாள், வீட்டு வேலை செய்து வருகிறார். முனுசாமியின் மூத்த மகன் கார்த்திக் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இளைய மகள் திவ்யா 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது.

முனுசாமியின் நண்பர் நாராயணனிடம் பேசினோம். " முனுசாமி மாதிரி ஒருத்தரைப் பார்க்க முடியாது. கொஞ்ச நேரம் கிடைச்சாலும், ஏதாவது ஒரு வேலை செஞ்சுட்டு இருப்பார். கார்பெண்ட்டர் வேலை, லோடு தூக்குவது என தினமும் 500 ரூபாய்க்கு மேல் வருமானத்தைப் பார்த்துடுவார். தெருவுக்குள் அவர் இருக்கும் இடமே தெரியாது. அவர் செத்துப் போனதுக்குப் பிறகுதான், ஊர்ல பல பேருக்கு அவரைத் தெரியுது. இரண்டு குழந்தைகளை வச்சுட்டு முனுசாமி குடும்பமே கஷ்டப்படுது. இதுவரைக்கும் யாரும் வந்து பாக்கலை. குடிச்சுட்டு வண்டி ஓட்டுன பொண்ணு மேல, கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டாங்க. அது ஒண்ணு மட்டும்தான் ஆறுதலா இருக்கு.

இறந்துபோன அன்னைக்கு இறுதிக் காரியம் செய்வதற்குக்கூட அந்தக் குடும்பத்திடம் பணம் இல்லை. சம்பவம் நடந்த அன்னைக்கு 140 கிலோமீட்டர் வேகத்துல அந்தப் பொண்ணு வண்டி ஓட்டிட்டு வந்திருக்கு. இவர் பிளாட்பாரத்துலதான் நின்னுக்கிட்டு இருந்தார். இந்த மாதிரி பொண்ணுங்க, பையன்களுக்கு வாரக் கடைசின்னா இதே வேலையா போயிடுச்சு. அவர் இறந்துட்டதால, அவரோட மனைவி மூணு மாசத்துக்கு எங்கேயும் வேலைக்குப் போக முடியாது. ஏதாவது இழப்பீடு கொடுத்தாதான், அந்தக் குடும்பம் கரை சேரும்" என்றார் வேதனையோடு.

கிண்டி போக்குவரத்துக் காவலர்களிடம் பேசியபோது, " அன்றைக்கு ஐஸ்வர்யா, சுஷ்மா உள்ளிட்ட மூன்று பெண்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டியுள்ளனர். இதில், தொழிலதிபரின் மகள்தான் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். வார இறுதியில் குடிப்பதும் சினிமாவுக்குப் போவதும்தான் இவர்களுடைய பொழுதுபோக்கு. வாகனத்தை ஓட்டிய ஐஸ்வர்யா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். விசாரணை நடந்து வருகிறது" என்கின்றனர்.

பழைய மகாபலிபுரம் சாலையைக் கடப்பது அப்பகுதி மக்களுக்கு தினம்தினம் பெரும் துன்பமாகவே முடிகிறது. பணம் படைத்தவர்கள் ஏற்படுத்தும் மரணம் என்பது, அந்த நேரத்தின் ஒரு செய்தியாக மட்டுமே மாறிப் போவது வேதனையான விஷயம். ஐஸ்வர்யா போன்ற செல்வந்தர் வீட்டுப் பெண்களின் வழக்குகள், சல்மான் கானின் வழக்கு போல மாறிவிடக் கூடாது என அச்சப்படுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.