Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2016

கிடைச்சதை வச்சு சமைக்கிறது பெரிய சவால்... ஆனாலும், அதுதான் செம த்ரில்!


Better late than neverனு ஒரு பழமொழி உண்டு. வேற எந்த விஷயத்துக்கு அது பொருந்துமோ இல்லையோ... சமையலுக்கு பொருத்தமான வாசகம்... சமையல் கத்துக்க வயசு பார்க்க வேண்டியதில்லைங்கிறது என் கருத்து. 30 பிளஸ் வயசுல ஒரு லேடி என்கிட்ட சமையல் கத்துக்க வந்தாங்க. அவங்களுக்கு வெங்காயம்கூட உரிக்கத் தெரியலை. கத்திப் பிடிக்கத் தெரியலை. ஆனாலும், ஆர்வம் இருந்தது. பரவாயில்லை... இப்ப ஆரம்பிச்சீங்கன்னாகூட நீங்க சீக்கிரமே சமையல்ல எக்ஸ்பர்ட் ஆயிடுவீங்க...



கவலைப்படாதீங்க’னு சொல்லி அவங்களுக்கு அடிப்படையிலேருந்து சொல்லித் தந்தேன். ஆர்வம் இருந்தா எந்த வயசுலயும் எந்த வேலையையும் கத்துக்கலாம்...’’- ஆழமான கருத்துடன் அழகாக ஆரம்பிக்கிறார் Bee. சென்னையைக் கலக்கிக் கொண்டிருக்கிற சைனீஸ் மலேசியன் செஃப்!

சமையல் கலை வகுப்புகள், உணவு தொடர்பான ஒர்க்‌ஷாப், ஆலோசனைகள் என பெயருக்கேற்றபடி பரபரப்பாகவே இயங்குகிறார் Bee. யதேச்சையாக தம் வாழ்வில் வந்த சமையலை, நேசித்து தொழிலாக ஏற்றுக் கொண்ட Beeயின் கதை சுவையாக இருக்கிறது.

அடிப்படையில நான் ஒரு சைனீஸ் மலேசியன். மலேசியாவுல படிப்பை முடிச்சேன். 19 வயசுல சிங்கப்பூர் போனேன். அங்கே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல 9 வருஷங்கள் வேலை பார்த்தேன். ரிஸ்க்கும் டிராவலும் அதிகமுள்ள வேலைன்னாலும் அதை ரொம்ப ரசிச்சு செய்தேன். என் கணவரை சந்திக்காம இருந்திருந்தா ஒருவேளை இன்னும்கூட நான் அந்த வேலையிலேயே இருந்திருப்பேனோ என்னவோ...’’ என்கிற Bee, பிரான்ஸை சேர்ந்த மார்ட்டினென்ட் என்பவரை காதல் திருமணம் செய்தவர்.

இந்தியாதான் நமக்கு பெஸ்ட்டுங்கிறதை கல்யாணத்துக்கு முன்னாடியே நானும் கணவரும் முடிவு பண்ணிட்டோம். 96ல சென்னை வந்தோம். 97ல கல்யாணம். என் ஹஸ்பெண்ட் ஐடி வேலையில இருக்கார். இந்தியாவுல சென்னைதான் எங்களோட சொர்க்கம்னே சொல்லலாம். பெசன்ட் நகர் பீச் ஓரமா ஒரு வீடு எடுத்து கடற்கரை காற்று வாங்கிட்டு, கடலோட அழகை ரசிச்சுக்கிட்டு ரொம்ப அழகான வாழ்க்கையை ஆரம்பிச்சோம்.

உணவுங்கிறது என் வாழ்க்கையில எப்பவுமே முக்கியமான ஒரு விஷயமா இருந்திருக்கு. மலேசியாவுல இருக்கிறபோதே நான் சமைக்க ஆரம்பிச்சிட்டேன். எங்கம்மா பயங்கர பிசியான லேடி. சமையக்கட்டுக்குள்ள எங்க பாட்டி சமைக்கிறதை பக்கத்துல நின்னு கவனிப்பேன். பாட்டிக்கு சமையல்ல ஹெல்ப் பண்றது எனக்குப் பிடிக்கும். கரியடுப்புலதான் சமைப்பாங்க.  ஆனா, அவ்ளோ பிரமாதமா சமைப்பாங்க. அவங்களைப் போல நானும் ஒரு நாள் சமைக்கணும்னு மனசுக்குள்ள நினைச்சுப்பேன். அப்படித்தான் சமையல் கத்துக்கிட்டேன்னு சொல்லணும்...

20 வயசுல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல வேலை. அங்கேயும் நான் ஹாஸ்பிட்டாலிட்டி டிபார்ட்ெமன்ட்டுல இருந்ததால மறுபடியும் சாப்பாடும் பரிமாறுவதும் எனக்குப் பக்கத்துலயே இருந்தது. நிறைய நிறைய டிராவல்... அத்தனையும் நிறைய நிறைய உணவுகளைப் பத்தித் தெரிஞ்சுக்க உதவியா இருந்தது...’’ - கடந்த கால நினைவுகளை அசை போடுபவர், செஃப் ஆன கதைக்கு அழைத்துச் செல்கிறார்.

சென்னைக்கு வந்ததும் நான் பயங்கரமா மிஸ் பண்ணினது எங்க வீட்டுச் சாப்பாடு. சைனீஸ், மலேசியன்னு என்னோட ஃபேவரைட் சாப்பாட்டுக்கு ரொம்ப ஏங்கினேன். மறுபடி மலேசியா போய், கத்துக்கிட்டு வந்தேன். கொஞ்சம் கொஞ்சமா சமைக்க ஆரம்பிச்சேன். நாங்க Hakkaனு சொல்ற ஒரு இனத்தைச் சேர்ந்தவங்க. எங்க உணவுகள்ல சிக்கன், போர்க், வாத்து, கடல் உணவுகள்தான் பிரதானமா இருக்கும். தவிர, காய்கறிகளும் கீரைகளும் பச்சை பசேல்னு ஃப்ரெஷ்ஷா கிடைக்கும். சென்னையில அப்படிக் கிடைக்கலை. கிடைச்சதை வச்சு சமைக்கிறது பெரிய சவாலா இருந்தது. ஆனாலும், அதுதான் செம த்ரில்லாவும் இருந்தது.

ஓரளவுக்கு நம்பிக்கை வந்ததும் சென்னையில ஒரு பெரிய மால்ல Bees Kopitiamனு ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சேன். கோபிட்டியம்னா சைனீஸ்ல காபி ஷாப்னு அர்த்தம். அங்கே பாரம்பரியமான மலேசியன் உணவுகளும் இந்தியனைஸ்டு சைனீஸ் உணவுகளும் ஸ்பெஷல். வேற எங்கேயும் கிடைக்காத சாப்பாடு அது.  ஒரு ஷாப்பிங் மாலுக்கு போய் சாப்பிடறதுங்கிறது நிறைய பேருக்கு வாரக் கடைசில மட்டும்தான் விருப்பமானதாகவும் வசதியானதாகவும் இருக்கு.

வார நாட்கள்ல ஆட்கள் கம்மி. வேற வழியில்லாம 3 வருஷத்துக்குப் பிறகு அந்த ரெஸ்டாரன்ட்டை மூட வேண்டியதாப் போச்சு...  ஒரு செஃப்பா அந்த பரபரப்பான 3 வருஷங்களை வாழ்க்கையில மறக்க முடியாது.  காய்கறிகள் வாங்கறதுலேருந்து, சமையல் வரை எல்லாத்துலயும் என் டச் இருக்கற மாதிரி மெனக்கெடுவேன். காலையில 8 மணிக்கு ஆரம்பிக்கிற வேலை, நடு ராத்திரி 2 மணி வரைக்கும்கூட போகும். ஆனா, அன்றைய தினம் முடியறபோது சாப்பாட்டைப் பத்தி நாலு பேராவது பாராட்டறதையும், திருப்தியா சாப்பிட்டதாகவும் சொல்றதைக் கேட்கறபோது எல்லா அலுப்பும் பறந்து போயிடும்.

சமையல் வேலை அலுத்துப் போகாம வைக்கிற மேஜிக் அதுதான்... ரெஸ்டாரன்ட்டை மூடினதும் சமையலுக்கும் எனக்குமான தொடர்பு அதோட விட்டுப் போயிடக்கூடாதேனு சமையல் கலை வகுப்புகள் எடுக்கிறதுல என் கவனத்தைத் திருப்பினேன்...’’ என்கிறவர், அதிலும் புதுமைகளைக் கையாளத் தவறவில்லை! வழக்கமான சமையல் கத்துக் கொடுக்க நிறைய இடங்களும் ஆட்களும் இருக்காங்க. அதனால நான் மலேசியன், தாய், பிரெஞ்சு உணவுகளைக் கத்துக் கொடுக்க ஆரம்பிச்சேன். குறிப்பா குழந்தைங்களுக்கான குக்கிங் கிளாஸ் எனக்கு ரொம்ப விருப்பமான விஷயம்...’’ - சமையலைக்கூட ஒரு வேடிக்கை விளையாட்டாக குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க முடியும் என நிரூபித்துக் கொண்டிருக்கிறார் செஃப் பீ.

கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கும் மேலா சமைக்கிறேன். ரெண்டு விஷயங்கள்தான் எனக்கு பெரிய சவாலா இருக்கு. வெளியில சாப்பிடற ஏதோ ஒரு அயிட்டம் நமக்கு ரொம்பப் பிடிச்சிடும். அதோட செய்முறை தெரியாம, அதை அப்படியே கொண்டு வர்றது இருக்கே... பெரிய சேலஞ்ச். பார்க்கிறதுக்கு 99 சதவிகிதம் அப்படியே இருந்தா மட்டும் போதாது... டேஸ்ட்டை கொண்டு வரணும். எப்படியாவது மண்டையை உடைச்சுக்கிட்டாவது கொண்டு வந்துடுவேன்.

பிரெஞ்சு உணவுகளை சமைக்கிறது அடுத்த சேலன்ஜ். உலகத்துலயே ரொம்ப கஷ்டமானது அது. எக்கச்சக்கமான சாஸ் சேர்த்து, ரொம்ப கிரியேட்டிவா சமைக்கணும். பிரெஞ்சுக்காரரை கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு பிரெஞ்சு சமையல்லயும் எக்ஸ்பர்ட் ஆயிட்டிருக்கேன்னு எல்லாரும் சொல்றாங்க...’’ - அடக்கமாகச் சிரிப்பவருக்கு, நம்மூர் மசாலா தோசையும் ரசம் சாதமும் அமிர்தமாம்.

சூடான சாதத்துல ரசம் விட்டு, அப்பளத்தை ெநாறுக்கிப் போட்டு, தொட்டுக்க வெண்டைக்காய் பொரியல் வச்சு சாப்பிடற சுகத்துக்கு வேற எதுவும் இணையாகாது...’’ - கண்கள் மூடி ரசக் கனவில் ஆழ்பவருக்கு வேறு கனவுகளும் இருக்கின்றன.

எனக்கு ரெண்டு ெபண் குழந்தைங்க. ரெண்டு பேரும் சென்னையில படிச்சிட்டிருக்காங்க. இன்னும் சில வருஷப் படிப்பு மிச்சமிருக்கு. அது வரை சென்னையிலதான் இருக்கப் போறோம். மலேசியாவுல டிபன் பாக்ஸ் சாப்பாடுனு ஒரு கான்செப்ட் ரொம்பப் பிரபலம். நான் ஸ்கூல்ல படிச்சிட்டிருக்க காலத்துலேருந்து இருக்கு. வீட்லேருந்து சமைச்சு டிபன் கேரியர்ல வச்சு, ஒரு ஆள் மூலமா கொடுத்தனுப்புவாங்க.

டப்பாவை திறக்கிற வரைக்கும் உள்ளே என்ன இருக்குனு தெரியாது. இன்னிக்கு என்ன மெனுவா இருக்கும்கிற அந்த சஸ்பென்ஸே சூப்பர் ஃபீலிங். டப்பாவை திறந்தா ஒரு அடுக்குல சூப், அடுத்ததுல ஸ்டிர் ஃப்ரை வெஜிடபுள்ஸ், அடுத்தது மீன், அடுத்ததுல ஸீ ஃபுட்ஸ்னு வெரைட்டியா இருக்கும். நிஜமான பேலன்ஸ்டு ஃபுட் அது. சென்னையிலயும் அந்த கான்செப்டை ஆரம்பிக்கலாமானு யோசிச்சிட்டிருக்கேன். அதுல என்னோட டச் ேசர்த்து, கூடவே இங்கே பலருக்கும் தெரியாத பிரெஞ்சு அயிட்டங்களையும் சேர்த்துக் கொடுக்கலாம்னு ஒரு ஐடியா இருக்கு... பார்ப்போம்...’’ - எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது செஃபின் திட்டம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.