July 24, 2016
கம்யூனிச சிந்தாந்தம் பரவுவது, இந்துத்துவா கருத்தியலுக்கு ஆபத்து என்று ஆர்எஸ்எஸ் அலறியுள்ளது.
பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்களில், இடதுசாரி சிந்தனைகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர்பிலுள்ள மாணவர் அமைப்புகளும் செயல்பாடுகளும்தான் அதிகம் உள்ளன. இடதுசாரிக் கட்சிகளின் இருப்பு, இந்துத்துவா சக்திகளுக்கு எப்போதுமே சவாலாக இருக்கின்றன; இந்து தேசியவாதிகளை உருவாக்குவதற்கும் முதற்தடையாக இருப்பது கம்யூனிச சிந்தாந்தம் என்ற கருத்தியல்தான்; எனவே, அவர்களுக்கு எதிரான கருத்தியல் போரில் நிச்சயம் ஜெயித்தாக வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கான்பூரில் கடந்த வாரம் கூடிய ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் பிரச்சாரகர் மாநாட்டில் இதுவே முக்கிய விவாதமாக இருந்துள்ளது.
மத்தியில் நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தது முதல், ஆர்எஸ்எஸ் உத்தரவுப்படி நாட்டின் உயர்கல்வி நிலையங்கள் அனைத்திலும், இந்துத்துவ சிந்தனைகளைப் பரப்பும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக, புனே தேசிய திரைப்படக் கல்வி நிறுவனம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகம், கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக் கழகம் மற்றும் நாட்டின் தலைநகரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் ஆகியவற்றில் ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி மூலம், சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அக்கல்வி வளாகங்களின் அமைதி குலைக்கப்பட்டது.
ஆனால், இங்குள்ள மாணவர்கள், தங்களின் வலுவான போராட்டம் மற்றும் ஒற்றுமையின் மூலம் ஆர்எஸ்எஸ் – பாஜக முயற்சியை முறியடித்தனர். மாணவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை ஒருநாளும் வெற்றிபெற விடமாட்டோம் என்று அவர்கள் உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எனினும் ஆர்எஸ்எஸ் தனது இந்துத்துவா திணிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதன் அடுத்தகட்டமாக தற்போது பள்ளிகளை ஆர்எஸ்எஸ் குறிவைத்துள்ளது. பள்ளிகள் அளவிலேயே இந்துத்துவ சிந்தனையையும், அதன் நாசகர சித்தாந்தங்களையும் பரப்ப முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் கான்பூரில் கூடிய ஆர்எஸ்எஸ் ஊழியர்களின் பிரச்சாரகர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகளில் இதுதான் முதன்மையானது என்று கூறப்படுகிறது.
அதற்குக் காரணம், கல்வி நிறுவனங்களில் இடதுசாரிக் கருத்துக்கள் செல்வாக்கு செலுத்துவதுதான். எனவே, பள்ளிகள் மட்டத்திலேயே கம்யூனிச கருத்துக்கள் பரவுவதை தடுத்து, இந்துத்துவ அரசியலை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இடதுசாரிகளின் அரசியல் பிரதிநிதித்து வம் குறைந்து இருக்கலாம்; எனினும் அது தன் செயல்பாட்டை இழந்துவிடவில்லை; எனவே, இடதுசாரிச் சிந்தனைகள் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்துவது தடுக்கப்பட வேண்டும் என்று கான்பூர் மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பேசியுள்ளனர்.
உயர்கல்வி நிறுவனங்களில் இடதுசாரி மாணவர் அமைப்புக்கள்தான் கருத்தியல் ரீதியாக ஆட்சி புரிகிறதென்றும், எனவே, கம்யூனிச சித்தாந்தங்களுக்கு எதிரான கருத்தியல் போருக்கு ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் தயாராக வேண்டுமென்றும், அழைப்பு விடுத்த அதன் தலைவர்கள், நேரடியாக பள்ளிகள் மட்டத்திலேயே கம்யூனிச கட்சிகளுக்கும், அதன் கருத்தியலுக்கும் எதிராக செயலாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதற்காக நாட்டின் பல பகுதிகளில் மாணவர்களை ஈர்ப்பதற்கு ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் ‘உதான்‘ என்ற தலைப்பில் வீதி நாடகங்கள் நிகழ்த்துவது, நாட்டின் தலைநகரில் செப்டம்பர் 20-22 வரை “தேசியவாதம்“ என்ற வீதி நாடகம் நடத்துவது; இதில் 80 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களைப் பங்கேற்க வைப்பது என்று விரிவான திட்டத்தையும் முன்வைத்து உள்ளனர். இந்த கலை நிகழ்ச்சிகளில் தனது திரைப்படக் குழுவினர் பங்கேற்க உள்ளதாக பிரபல தயாரிப்பாளரான சந்திரபிரகாஷ் தெவ்கி என்பவர் அறிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ்-ஸில் இளைஞர்களின் செயல்பாட்டை பலப்படுத்துவது; மாணவர் அமைப்பின் (ஏபிவிபி) செயல்பாட்டை பலப்படுத்துவது; ஆர்எஸ்எஸ் அடிப்படை சித்தாந்தங்களை கல்வி வளாகங்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பன போன்றமுடிவு களும் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்டு உள்ளன.
அதேபோல தேர்தலின்போது பாஜக-விற்காக உதவுவதிலும், அதன் செயல்பாடுகளில் தலையிடுவதற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு எல்லை வரையறுக்கப்பட்டு இருந்ததாகவும், கான்பூர் மாநாட்டில் அது தளர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதாவது பிரச்சனைகளில் ஆர்எஸ்எஸ் இனி நேரடியாகவே தலை யிடும் என்பதுதான் இதற்கு அர்த்தம். ஸ்வச் பாரத், பெட்டி பாச்சோ, பெட்டி பாட்தோ மற்றும் கங்கை இயற்கை அழிவுகள் மீட்பு ஆகிய அரசுத் திட்டங்களில் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் கவனம் செலுத்த வேண்டும்; அவற்றில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ்-ஸின் மற்றொரு உத்தரவு இதை தெளிவாக்கியுள்ளது.
எனினும், இந்துத்துவா கருத்தியலை கல்வி வளாகங்களில் கொண்டு சேர்ப்பதிலேயே முதன்மையான கவனமும் செலுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் அதன் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உயர்கல்வி நிலையங்களில், இடதுசாரி மாணவர் அமைப்புக்கள் செல்வாக்கு செலுத்துவதை இனியும் விட்டுவைக்க முடியாது என்று அவர்கள் கங்கனம் கட்டியுள்ளனர்.
கம்யூனிச சிந்தாந்தம் பரவுவது, இந்துத்துவா கருத்தியலுக்கு ஆபத்து என்று ஆர்எஸ்எஸ் அலறியுள்ளது.
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.