Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2016

எங்கள் ஊர் மண்வாசனை



குழந்தையின் “வீல்” என்ற அலறலில் திடுக்கிட்டு விழித்தான் பழனிச்சாமி.... அருகில் மனைவி படுத்திருந்ததற்கான அடையாளமாக தலையணையும், போர்வையும் சுருட்டி கிடந்தது.... நான்கடி தூரத்தில் தன் இரண்டரை வயது மகன் அழுதுகொண்டிருப்பதை தூக்க கலக்கத்தில் எரிச்சலுடன் பார்த்தான்...
“அப்பு..... அப்பு...” பாசத்துடன் படுத்திருந்தவாறே பிள்ளையை அழைக்க, அதுவோ தந்தை விழித்திருப்பதை கண்டதும் இன்னும் உச்சஸ்துதியில் அலறியது.... எழுந்து சென்று பிள்ளையை சமாதானப்படுத்த அலுப்புப்பட்ட பழனிச்சாமி, வலது கையை தரையில் ஊன்றி மெல்ல இடது கையால் பிள்ளையை இழுத்து தன் அருகில் அமர்த்தினான்....
“ஏம்பு அழுவுற?.... உங்காத்தா எவுன நின்னு பொரணி பேசுறா?... புள்ளைய பாக்குறத விட மகாராணிக்கு வெட்டிப்பேச்சு முக்கியமா போச்சு போல” குழந்தையால் பறிபோன தூக்கத்தை, மனைவியின் மீதான கோபமாக உருமாற்றினான், அருகில் இருந்த பிளாஸ்டிக் பையில் வாங்கி வைத்திருந்த கடலை மிட்டாயை பிள்ளையின் கையில் திணித்தான்....
அதை பார்த்ததும் அழுகையை மறந்து முகம் மலர்ந்தது குழந்தை...
கன்னங்களை வண்ணம் பூசிய கண்ணீரை தன் உள்ளங்கையால் துடைத்துவிட்டு, மூக்கிலிருந்து வடிந்ததை விரல்களால் எடுத்து சுவற்றில் தேய்த்தான்....
“காலங்காத்தால எங்க போனாளோ!... இவளுக்கு புருசன், புள்ள ஒரு கேடு” பிள்ளைக்கு ட்ரவுசரை மாட்டிவிட்டுக்கொண்டே அடுத்த இன்னிங்க்ஸ் தொடங்கினான் பழனிச்சாமி.... அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக தண்ணீர் குடத்துடன் உள்ளே வந்துவிட்டாள் லெட்சுமி...
“என்ன சத்தம் பைப்படி வரைக்கும் கேக்குது?... சூரியன் உச்சிக்கு வர்ற வரைக்கும் தூங்குறது, நடுராத்திரி பாதி சாமத்துக்கு மேல வீட்டுக்கு வாரதுன்னு இருக்குற உனக்கு என்னத்துக்கு பொண்டாட்டி புள்ளை’னு ஊரே கேக்குது...” தண்ணீர் குடத்தை கீழே வைத்த வேகத்தில் குழந்தை திடுக்கிட்டு நின்றது....
“ஆமா.... மாடு மாதிரி உனக்கு உலச்சு கொட்றேன் பாரு, இதுவும் சொல்லுவ, இன்னுமும் சொல்லுவ....”
 “ஆமாமா... கொட்டிட்டாலும்.... ஆயிரக்கணக்கா கொண்டாந்து கொட்டுற பாரு?.... இன்னும் இத்துப்போன கூரைய மாத்துறதுக்கு துப்பில்ல, மழை பேஞ்சா ஒன்டுறதுக்கு எடமில்ல.... இவரு கொட்டித்தான் இங்க வாழுதாம்” அரிசியை களைந்த பாத்திரத்தை அடுப்பின்மீது வேகமாக வைத்தாள்....
“சம்பாதிச்சு கொடுக்குற பணத்துல நல்ல பதூசா சீலையும், ஆடம்பர சாமானும் வாங்க தெரியுதுல்ல?... அத பத்திரப்படுத்தி வீட்டுக்கு எதாச்சும் செய்ய நீதாண்டி சேமிக்கனும்.... பொம்பள பொம்பளையா இருந்தா வீடு வீடா இருக்கும்”
 “ஆம்புள ஆம்புள மாதிரி நடந்துகிட்டா, நான் ஏன் பொம்பளையா நடந்துக்க மாட்டேன்?...” இந்த வார்த்தைகள் மட்டும் லெட்சுமியின் வாயில் இருந்து மெல்ல வெளிவந்தது.... ஆனால், இதற்குண்டான வலிமையையும், வலியும் பழனிச்சாமிக்கு நன்றாகவே தெரியும்.... இதற்கு மேல் விவாதத்தை தொடரவிட்டால் அது எங்கு சென்று முடியும்? என்பதை அவன் நன்கு அறிவான்....
இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தை கையில் வைத்திருந்த மிட்டாயை தின்ன மறந்து வெறித்து பார்த்துக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு, தோளில் ஒரு துண்டை போட்டுக்கொண்டு வழக்கமாக செல்லும் டீக்கடையை நோக்கி விரைந்தான் பழனிச்சாமி....
பழநிச்சாமிக்கும் லெட்சுமிக்கும் திருமணம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட இன்னும் பூர்த்தியாகவில்லை.... புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கொரியர் ஆபீஸில் லோடு மேன் வேலை அவனுக்கு.... தன் ஊரான சேரன் புதூர் ஊரிலிருந்து அரைமணி நேர பேருந்து பயணத்தில் புதுகை சென்றுவிடலாம்.... காலை பத்து மணி முதல், மாலை ஆறு மணி வரை வேலை.... ஏழு வருடங்களாக சுமைதூக்கி உடம்பு முறுக்கேறி கிடந்தது.... ஆண்மை கொப்பளிக்கும் உடல்வாகு.... இன்னும் முப்பதுகளை தொடாத வயது... ஆறு மணிக்கு வேலை முடிந்தாலும், இவன் வீட்டிற்கு வருவது நள்ளிரவை நெருங்கும் வேளையில்தான்....
மனைவி லட்சுமியுடன் தாம்பத்ய உறவு வைத்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது.... திருமணமான நாள் முதலாக இன்றுவரை வேண்டாவெறுப்பாகத்தான் தன் மனைவியுடன் உறவு கொள்கிறான்... பெரும்பாலும் அத்தகைய உறவுகளை தவிர்க்கவே நள்ளிரவு நேரத்தில் வருகிறான்.... இப்படி உடலுறவில் நாட்டமில்லாமல் போக காரணம் என்ன?... இதே குழப்பமும் கேள்வியும்தான் லெட்சுமிக்கும்... லெட்சுமியின் அழகில் ஊர் மிராசு முதல் கோவில் பூசாரி வரை அசராத ஆட்களே இல்லை... இவள் தண்ணீர் எடுக்க குளத்திற்கு போனால், விலகும் சேலைக்குள் தெரியும் வளமான மார்பை பார்ப்பதற்காகவே இளைஞர் பட்டாளம் மீன் இல்லாத குளத்தில் தூண்டில் போட்டு அமர்ந்திருக்கும்.... மாநிற மேனியும், செதுக்கிய முகவெட்டும், வடிவான உடல் வாகும் என்று அழகாகவே இருப்பாள் லெட்சுமி.... இத்தகைய ஒருத்தியை பிடிக்காமல் இருப்பானா ஒருத்தன்? என்று தனக்குள் நொந்துகொள்வாள் லெட்சுமி.... திருமணமான புதிதில் மட்டும் சம்பிரதாயத்துக்காக உடலுறவை மேற்கொண்ட பழனிச்சாமி, குழந்தை பிறந்தபிறகு ரொம்பவே விலகி சென்றுவிட்டதைத்தான் குத்தலாக “ஆம்புள, ஆம்புள மாதிரி நடக்கணும்” என்று சொல்வாள்.... அதற்கு மேல் நேரடியாக அவளால் கேட்டிட முடியாது, அதைக்கூட புரியாத அளவிற்கு பழனிச்சாமியும் முட்டாள் இல்லை என்பதையும் அவள் அறிந்திருந்தாள்....
ஒரு கையில் கடலை மிட்டாயையும், மறுகையில் அப்பாவின் தலையில் கைவைத்தபடியும் பிள்ளை அப்பாவின் தோளில் சாய்ந்திருக்க, பழனிச்சாமியோ ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்....
திருமணத்திற்கு முன்புவரை எந்த பெண்ணின்மீதும் ஈர்ப்பு கொள்ளவில்லை பழனிச்சாமி... தன் சகவயது நண்பர்கள் ஊர் கண்மாயில் குளிக்கும் பெண்களை மறைந்திருந்து வேடிக்கை பார்த்ததையும், பம்ப் செட் அறைக்குள் கதிர் அறுக்க வந்த பெண்ணை அழைத்துக்கொண்டு போனதையும் விலகி நின்றுதான் பார்த்தான்... “எல்லாம் கல்யாணம் ஆகிட்டா சரி ஆகிடும்” என்ற தனக்குள் உண்டான சமாதானத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொள்வான்....
“நம்ம சேரம்புதூர் கருப்பையா மவன் பழனிச்சாமி இருக்கான்ல, தங்கமான பையன்யா.... புதுக்கோட்டைல நல்ல வேல, பத்து மா சொந்த நெலம்... அதெல்லாம் விட எந்த பொண்ணையும் இதுவரைக்கும் நிமுந்து கூட பாத்ததில்ல.... அம்புட்டு சொக்கத்தங்கம்யா” பழனிச்சாமியை பற்றி உறவினர் ஒருவர் தன் அப்பாவிடம் சொன்ன இந்த வார்த்தைகள்தான் அவன் மீது லெட்சுமிக்கு விருப்பத்தை உண்டாக்கியது.... ஆனால், அதே வார்த்தைகள் இன்று பழனிச்சாமி மீது வெறுப்பை உண்டாக்கிவிட்டது.... ஆம், மற்ற பெண்களை நிமிர்ந்து பார்ப்பதற்கும், மனைவியுடன் இல்லறம் வாழ்வதற்கும் வித்தியாசம் இருக்கல்லவா?.....
இப்படி ஊருக்கே தெரிந்த பழனிச்சாமியின் முகத்திற்கு நேரெதிரான இன்னொரு முகத்தை அவனும், புதுகை பேருந்து நிலையமும் மட்டுமே அறிவார்கள்.....
அதை வேலைக்கு செல்லும்போது பார்க்கலாம், இப்போது பழனிச்சாமி டீக்கடைக்கு வந்துவிட்டான்... பெஞ்ச்சில் தன் மகனை அமர்த்தி, அவன் கையில் ஒரு பாலை வாங்கி கொடுத்துவிட்டு, பீடியை பற்றவைத்துக்கொண்டு சில அடி தூரம் தள்ளி நின்ற தன் நண்பர்கள் கூட்டத்தை அடைந்தான்....
“இந்தா வந்துட்டாண்டா நம்ம பங்காளி.... அவன்தாண்டா இதுக்கு சரியான ஆளு, கேளுங்கடா” பழனிச்சாமியை பார்த்த ஒருவன் இப்படி சொல்ல, ஒன்றும் புரியாமல் விழித்த பழனிச்சாமி, “என்னங்கடா பேசுறீங்க?....பிட்டல்லாம் பலமா இருக்கு?” என்றான்....
அருகில் நின்ற இன்னொருவன், பழனிச்சாமியின் தோளில் கைபோட்டு, “மச்சான், நம்ம சேகருக்கு கல்யாணமாம்.... கல்யாணம் பண்ணுனதுக்கப்புறம் நடக்க வேண்டிய விஷயங்கள் பத்தி சந்தேகமாம்.... கல்யாணம் ஆகி ஒரே வருஷத்துல புள்ளைய பெத்தவன் நீதான்.... அதான், எதாச்சும் நல்ல ஐடியா கொடுக்கணுமாம்....” என்றான்...
சம்மந்தப்பட்டவன், “ஆமா பழனி.... மொத ராத்திரியிலே எல்லாம் நடக்கனுமா?... நீ என்ன பண்ண மொத ராத்திரியில?” சீரியசாகவே கேட்டான்....
தன் தோள் மேல் கைபோட்டிருந்த மைத்துனனின் கைகளை விலக்கிய பழனிச்சாமி, “பேன் பாத்தேன்.... கேக்குறாணுக பாரு கேள்வி.... காலங்காத்தால, கருமம் பிடிச்ச்சவனுகளுக்கு வேற பேச்சே கெடைக்கல போல....” பீடியை கடைசி இழுப்பு இழுத்துவிட்டு தரையில் போட்டு காலால் மிதித்துவிட்டு டீக்கடையில் அமர்ந்திருந்த பிள்ளையை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றான் பழனிச்சாமி....
ஆம், ஊர் மக்களை பொருத்தவரை சிறந்த இல்லறம் நடத்துபவனாக பழனிச்சாமி தெரிந்தான்.... இப்படிப்பட்ட ஒரு பிம்பத்தை உருவாக்கத்தான் அவசர அவசரமாக திருமணமான முதல் வருடத்திலேயே பிள்ளையை பெற்றான் பழனிச்சாமி.... தன் ஆண்மையை ஊருக்கு நிரூபித்த திருப்தியில், மனைவியை கண்டுகொள்ளவில்லை....
வீட்டிற்குள் நுழையும்போதும் மனைவியின் கூக்குரல் விடாமல் ஒலிப்பதை கவனித்தான்....
“எங்கப்பா இருந்த இருப்புக்கு, என்னைய காரைக்குடி பக்கம் கேட்டாக.... என்ன பாவம் செஞ்செனோ தெரியல, இவுன வந்து மாரடிக்கிறேன்”
இப்போதும் எந்த பேச்சையும் பேசாமல், குளித்து முடித்துவிட்டு வேலைக்கு கிளம்பினான் பழனிச்சாமி.... எவ்வளவு சண்டை போட்டாலும், மறக்காமல் அவனுக்கு மதிய உணவை டிபன் பாக்சில் எடுத்துவைத்துவிட்டாள் லெட்சுமி.... “அவ நல்லவதான்.... ஆனா கொஞ்சம் பிடிவாதக்காரி” அவ்வப்போது தன் மனைவியை பற்றி மனதிற்குள் பழனிச்சாமி நினைத்துக்கொள்ளும் வார்த்தைகள் இவை....
வெளியே செல்லும் முன் தன் பிள்ளையை பார்த்த பழனிச்சாமி, “அப்பு.... அப்பா வேலக்கி போறேன்.... வர்றப்ப என்ன வாங்கிட்டு வரட்டும்?” என்று கன்னங்களை பிடித்து உருவியவாறே கேட்டான்....
“முத்தாயி, ரொட்டி, பொம்ம” மழலைக்குரலில் தன் விருப்பப்பட்டியலை அடுக்கிக்கொண்டே போனது குழந்தை.....
சாப்பாட்டை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறி புதுகையை அடைந்தான் பழனிச்சாமி.

தொடரும்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.