July 19, 2016
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் தான் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் வழக்கை சந்திக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள சோனாலி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் ‘மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான்’ என்று பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தானே மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ராஜேஷ் குண்டே சார்பில் பிவாண்டி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இம்மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ராகுல் காந்தி மன்னிப்பு கோரினால் வழக்கை முடித்துக் கொள்ளலாம் என்ற யோசனையை முன்வைத்தனர். ஆனால், ராகுல் காந்தி தரப்பு இந்த யோசனையை நிராகரித்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.
அப்போதும் நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடர்பான பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதேநேரத்தில் ராகுல் காந்தி தரப்பில், அவர் பேசியது வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில்தான் என வாதிடப்பட்டது.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர்நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டிருந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் ராகுல் காந்தி அவ்வாறு பேசினார் என்றும் வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர்.
மேற்படி தீர்ப்பையும் ஆய்வுசெய்த நீதிபதிகள் ‘காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் என்றுதான் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கோட்சே காந்தியை கொன்றார் என்பதற்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் காந்தியை கொன்றது என்பதும் வெவ்வேறு விதமானவையாகும். நீங்கள் மனம்போன போக்கில் மிக ஆழமாக சென்று பொத்தாம்பொதுவாக காந்தியை ஆர்.எஸ்.எஸ்.தான் கொன்றது என்று ஒட்டுமொத்தமாக முடிவு செய்துள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டனர்.
தவறான வரலாற்று ஆதாரத்தை மையப்படுத்தி ராகுல் காந்தி பேசியது தொடர்பாக வியப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் வரும் 27-ந் தேதிக்குள் ராகுல் தரப்பு தமது வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 19, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 19, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.