Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 28, 2016

'ரிலையன்ஸை வளர்த்துவிடுவதே ரிசர்வ் வங்கிதான்'! -ஆன்லைன் பிரசாரத்தில் வங்கி ஊழியர்கள்


கல்விக் கடனை ரிலையன்ஸ் நிறுவனம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. 'வாராக்கடனை வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் வன்முறையைப் பிரயோகிக்கின்றன. பொதுத்துறை வங்கிகளின் சீர்கெட்ட தன்மையையே இது காட்டுகிறது' என நாடாளுமன்றத்தில் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் சி.பி.எம் கட்சியின் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் பேசிய டி.கே.ரங்கராஜன், " மாணவர்கள் பெறக் கூடிய கல்விக்கடன் என்பது நமது பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேறிட கல்விக்கடன் மிக அவசியமானதாகும். கல்விக் கடன் வசூலிப்பதில் வெட்கக்கேடான நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தற்போது ஸ்டேட் வங்கி நிர்வாகம், கல்விக்கடனை வாராக்கடனாக அறிவித்து, தனியார் வசூலிக்க அனுமதி அளித்துவிட்டது. இந்தக் கம்பெனிகள் கடனை வசூலிப்பதில் வன்முறையைப் பயன்படுத்துகின்றன. ஷேக்ஸ்பியர் எழுதிய, 'வெனிஸ் நகர வியாபாரி' நாடகத்தில் வரும் கடன் வசூலிக்கும் ஷைலக் என்பவனைப் போல, பணம் அல்லது உயிர் என்ற என்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்குகின்றன. தமிழகத்தில் இவ்வாறு அவதிக்குள்ளான மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.

எனவே, வங்கிக் கடன்களை தனியார் கம்பெனிகளிடம் விற்பதைத் தடுத்து நிறுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும். வங்கிகள் கொடுத்த கடன் மீது, அரசு உறுதியளித்த நூறு சதவீத மானியத்தை எந்தக் குறையுமில்லாமல் வங்கிளுக்கு அளிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கல்விக் கடனை மற்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடனுடன் ஒப்பிட முடியாது. இது நமது இளைஞர்கள் முன்னேறுவதற்கான முதலீடாக எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்றவற்றை விளக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் போல, கல்விக் கடன் பற்றிய விழிப்பு உணர்வுக்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படுவதில்லை. வங்கிகளை அணுகி கடன் பெற விரும்பும் மாணவர்களிடம், நிர்வாகங்கள் வாஞ்சையுடன் செயல்படுவதில்லை. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்ககம், கல்விக்கடன் மீது 20 சதவீத மானியம் மட்டுமே தருகிறது. மீதி 80 சதவீத தொகையும் வட்டியோடு சேர்த்து மாணவர்கள் தலையிலேயே விடிகிறது" எனக் கொந்தளித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி. கிருஷ்ணனிடம் பேசினோம்.

" இன்னமும் ரிலையன்ஸ் நிறுவனம் வசூல் வேட்டையை நிறுத்தவில்லை. இத்தனை ஆண்டுகாலம் வாராக்கடன்களை வசூலித்து ருசி கண்டுவிட்டது அந்த நிறுவனம். ரிசர்வ் வங்கியின் துணையோடுதான் செயல்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 42 ஆயிரம் கணக்குகளை வசூலிப்பதற்காக, மாணவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். மத்திய அரசு தடை உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே, கடன் வசூலிப்பதில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தை ஒதுக்கி வைக்க முடியும். இதற்காக, ஆன்லைன் மூலம் பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட முடிவு செய்திருக்கிறோம்" என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.