Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2016

ஆட்டோக்களுக்கு 15 மடங்கு அபராதம்..! பிடியை இறுக்கியது ஹைகோர்ட்


ஆட்டோ கட்டண விதி மீறலுக்கான அபராதத்தை நூறு ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஆட்டோ கட்டண புகார் குறித்த பதிவு எண்ணை புகார்தாரர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கோவையில் மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த கோரி நுகர்வோர் குரல் அமைப்பின் செயலாளர் என்.லோகு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, குறைந்தபட்ச ஆட்டோ மீட்டர் கட்டணம் ரூ.25ம், கி.மீட்டருக்கு ரூ.12ம் வசூலிக்க ஆட்டோக்களுக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், மாநகர போக்குவரத்து போலீஸார், போக்குவரத்துத் துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், கோவை நகரில் ஆட்டோ மீட்டர் கட்டண நடைமுறை சரியாக இல்லை. மீட்டர் கட்டணத்தைக் கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் நுகர்வோர் குரல் அமைப்பு மீண்டும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை சீராக அமல்படுத்துவது தொடர்பாக கடந்த ஓராண்டாக போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் இணைந்து எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க போக்குவரத்துத் துறை சார்பில் 1800-425-5430 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட இடத்தின் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், போலீஸாருக்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், புகார் எண்ணுக்கு தொடர்பு கொண்டு நுகர்வோர் புகார் தெரிவித்தால், புகார் தெரிவித்ததற்கான அத்தாட்சியாக பதிவு எண் எதுவும் வழங்கப்படுவது இல்லை. எனவே, புகார் பதிவு எண் அளிக்க வேண்டும் என நுகர்வோர் குரல் அமைப்பு புகார் கூறியிருந்தது.

இந்த நிலையில், அந்த அமைப்பின் செயலாளர் என்.லோகு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "தமிழக அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் சேவையில் நுகர்வோர் புகார் தெரிவிக்கும்போது, புகார் பதிவு எண் அவருக்கு வழங்கப்படுவது இல்லை. பெயர், முகவரி மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள். இதை வைத்துக் கொண்டு காவல்துறை அல்லது போக்கு வரத்துத் துறை அணுகினால் சரியான தீர்வு கிடைக்காது. எனவே, புகார் பதிவு எண்ணை உடனடியாக வழங்க வேண்டும். நுகர்வோர் தெரிவிக்கும் புகார் குறித்து போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் இணைந்து உடனடியாக சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அபராதத் தொகையும் உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்டோ கட்டண விதி மீறலுக்கான அபராதத்தை நூறு ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரை செய்ததோடு, ஆட்டோ கட்டண புகார் குறித்த பதிவு எண்ணை புகார்தாரர்களுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.