Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 19, 2016

'நான் கூறியது சட்டவிரோதம் என்றால், கைது செய்யட்டும்!' -திருமாவளவன்


சுவாதி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராம்குமாரின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கு தொடர்பாக எழும் சந்தேகங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. இந்நிலையில் சுவாதி படுகொலை தொடர்பாக, கருத்துக்களைத் தெரிவித்த திருமாவளவன் மீது விமர்சனம் பாய்ச்சுகின்றன இந்து அமைப்புகள். அதிலும், 'திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும்" எனக் கொதிக்கிறார் பா.ஜ.கவின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலையில் படுகொலை செய்யப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.தொடக்கத்தில் இருந்தே, ' ராம்குமார் இந்தக் கொலையைச் செய்யவில்லை' என அவரின் வழக்கறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பேசி வருகின்றனர்.

இதுதொடர்பாக, பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "இந்த வழக்கின் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. யாரையோ காப்பாற்றும் நோக்கில் போலீஸாரின் விசாரணை நடந்து வருகிறது. இந்தப் படுகொலைக்கு ஒரு தலைக் காதல் காரணம் அல்ல. ராம்குமார் தன்னுடைய முகநூல் பக்கத்தில் சுவாதியைக் காதலித்ததாக, எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மதம்விட்டு மதம் மாறியதால்தான் இந்தக் கொலை நடந்துள்ளது. போலீஸ் விசாரணையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எனக்குக் கிடைத்த தகவல்படி, முஸ்லிம் இளைஞர் ஒருவரைக் காதலித்திருக்கிறார் சுவாதி. ரம்ஜான் மாதத்தில் நோன்பும் கடைபிடித்தார்" என்று கூறியிருந்தார்.

திருமாவின் இந்தப் பேட்டிக்கு எதிராக, தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கலைச்செல்வி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், 'ரம்ஜான் மாதத்தில் சுவாதி நோன்பு இருந்ததாக ஆதாரமில்லாத, அவதூறான தகவல்களைக் கூறி வருகிறார் திருமாவளவன். அவரது பேச்சுக்கள் அனைத்தும் கொலையில் கைதான ராம்குமாருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரது கருத்துக்கள் அனைத்தும் சட்டத்திற்கு விரோதமாக இருக்கின்றன' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதைப் பற்றிப் பேசும் பா.ஜ.க தேசியச் செயலர் ஹெச்.ராஜா, "எங்களுக்குக் கிடைத்த தகவலோ வேறு விதமாக இருக்கிறது. ஆனால், திருமாவளவன் எந்த ஆதாரமும் இல்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கொலை வழக்கின் மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவருக்குத் தெரிந்திருக்கின்றன. எனவே திருமாவளவனிடம் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் அவரைக் கைது செய்ய வேண்டும்" என்கிறார் அதிரடியாக.

ஹெச்.ராஜாவின் இந்த ஆவேசம் குறித்து திருமாவளவனிடம் பேசினோம். "சட்டத்திற்கு விரோதமாகவோ, சமூகத்திற்கு விரோதமாகவோ நான் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. குறிப்பிட்ட சமூகத்தைக் காயப்படுத்தும் விதமாகவும் சொல்லவில்லை. ஹெச்.ராஜா போன்றவர்கள் எழுப்பிய கேள்விகளையே நானும் முன்வைக்கிறேன். ' ராம்குமார் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை' என்று ஹெச்.ராஜாவே ஒரு இடத்தில் சொல்கிறார். தொடக்கத்தில் ராம்குமாருக்கு ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, 'கைது செய்தபோது கழுத்தை ராம்குமார் அறுத்துக் கொள்ளவில்லை. போலீஸார்தான் கழுத்தை அறுத்தனர். கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை' என தமிழகக் காவல்துறை மீது சந்தேகம் எழுப்பினார்.

பட்டப்பகலில் ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இதைக் கண்டித்து முதன்முதலில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். வேறு யாரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை. இந்த வழக்கில் முதலில் கேள்வி எழுப்பியது ஒய்.ஜி.மகேந்திரன். அதன்பிறகு ஹெச்.ராஜா, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள்தான் பேசி வந்தனர். ' என்னைக் கைது செய்ய வேண்டும்' என அவர்கள் சொல்வதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில், எந்தச் சமூகத்தையும் பழி சொல்லவில்லை. சுவாதி குடும்பத்தைக் காயப்படுத்தும்விதமாகவும் எதையும் சொல்லவில்லை. நான் சொல்வது சட்டத்திற்கு விரோதமாக இருந்தால், கைது நடவடிக்கை எடுக்கட்டும்!" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.