Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 6, 2016

கொள்ளையனை விரட்டிச் சென்ற ஆசிரியை பலியான கண்ணீர் கதை


சென்னை பட்டினப்பாக்கத்தில் நள்ளிரவில் கொள்ளையனை விரட்டிச் சென்ற ஆசிரியை பலியான சோக சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியை நந்தினி

சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி என்ற பெண் என்ஜினீயர் வெட்டி வீழ்த்தப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்கு முன்பு, பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி கொள்ளையனை பிடிக்க நடந்த போராட்டத்தில் ஆசிரியை ஒருவர் பலியான நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துவிட்டது.

உயிர்ப்பலியான ஆசிரியை பெயர் நந்தினி (வயது 24). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைப்பகுதி தான் இவர் பிறந்து வசித்த இடம்.

இவரது தந்தை வடிவேல், வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் கூலித்தொழிலாளி. தாயார் செல்வி. வீட்டு வேலை பார்ப்பவர். ஒரே தம்பி விக்கி. பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலைக்காக காத்திருப்பவர்.

சம்பள பணத்தை எடுக்க...

நந்தினிக்கு நேற்றுமுன்தினம் சம்பள நாள் ஆகும். சம்பள பணத்தை ஏ.டி.எம்.–ல் எடுப்பதற்காக தனது அத்தை மகள் நஜ்ஜூ (19) உடன், நேற்றுமுன்தினம் இரவு 10.30 மணியளவில் மந்தைவெளிக்கு சென்றார். நஜ்ஜூவும் அதே பகுதியை சேர்ந்தவர் தான். இவர், அடையாறில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் பி.காம் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.

நந்தினியின் மொபட்டில் இருவரும் சென்றனர். மந்தைவெளி ஆர்.கே.மடம் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ.25 ஆயிரம் பணத்தை எடுத்தனர். அந்த பணத்தை ஒரு பையில் போட்டு நஜ்ஜூ தனது கையில் வைத்துக்கொண்டார். நந்தினி மொபட்டை ஓட்ட, நஜ்ஜூ பின்னால் பணப்பையுடன் உட்கார்ந்திருந்தார்.

எமனாக வந்த வழிப்பறி கொள்ளையன்

இவர்கள் ஏ.டி.எம்.மில் பணத்தை எடுத்துக்கொண்டு வருவதை நோட்டமிட்டபடி வழிப்பறி கொள்ளையன் ஒருவன் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்தான். அவன் ஹெல்மெட் அணிந்திருந்தான்.

நந்தினி பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் அருகே வரும்போது, பின்தொடர்ந்து வந்த வழிப்பறி கொள்ளையன் நஜ்ஜூ வைத்திருந்த பணப்பையை மின்னல் வேகத்தில் பறித்தான். பின்னர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்செல்ல முயன்றான்.

விதி விளையாடியது

இதைப்பார்த்ததும் மற்ற பெண்களை போல போனால் போகிறான் என்று நந்தினி விட்டுவிடவில்லை. கொள்ளையனை மடக்குவதற்காக தனது மொபட்டில் நந்தினி விரட்டிச் சென்றார்.

 ‘திருடன்... திருடன்... யாராவது பிடியுங்கள்...’ என்று கூச்சலிட்டபடியே சென்றார். சற்றுதூரம் சென்றவுடன் எதிர்பாராதவிதமாக கொள்ளையன் பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள சாலையில் வலதுபக்கமாக திரும்பி சீனிவாசபுரம் குடிசை பகுதிக்குள் புகுந்துவிட்டான்.

வேகமாக வந்த நந்தினியால் சட்டென்று திரும்ப முடியவில்லை. அவர் வந்த மொபட் நேராக சாலையை விட்டு இறங்கி, கடற்கரை மணலில் ஓடியது. அங்கே போலீசார் வைத்திருந்த இரும்பு தடுப்பின் மீது ஏறி, அருகில் பொதுப்பணித்துறையினர் நட்டு வைத்திருந்த கான்கிரீட் கல் மீது மோதி நின்றது.

மோதிய வேகத்தில் நந்தினியும், நஜ்ஜூவும் தூக்கி வீசப்பட்டனர். இருவரும் அலறியபடியே கீழே விழுந்தனர்.

நந்தினி பரிதாப சாவு

தலையின் பின்பக்கம் அடிபட்டு நந்தினி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அவரை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்த்தனர். டாக்டர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல், நந்தினி நள்ளிரவு 12.10 மணியளவில் பரிதாபமாக இறந்துபோனார்.

நஜ்ஜூ ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்துக்கொண்டார்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி

 நந்தினியின் மொபட் மோதிய கல்லில் சாகர் (வயது 65) என்ற முதியவர் உட்காந்து காற்று வாங்கிக்கொண்டு இருந்தார்

நந்தினியின் மொபட் மோதியதில் சாகர் படுகாயம் அடைந்து அங்கேயே இறந்துபோனார்.

சாகரும் அதே பகுதியில் தான் வசித்தார். பொதுப்பணித்துறையில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி பெயர் உமா மகேசுவரி.

கணவரின் உடலை பார்த்து உமா மகேசுவரி கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

போலீஸ் நிலையம் முற்றுகை

கொள்ளையனை விரட்டிச் சென்ற போராட்டத்தில் உயிரிழந்த நந்தினியை, அப்பகுதி மக்கள் அனைவரும் ஒரு வீரப்பெண்மணியாக கருதினார்கள். அவரது உயிரிழப்பு, தங்களுக்கு ஏற்பட்ட பெரிய இழப்பாக எண்ணி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் உள்ள பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தை நள்ளிரவு நேரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள். அந்த பகுதி முழுவதும் நேற்று சோகத்தில் மூழ்கியிருந்தாலும், இன்னொரு பக்கம் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

கடுமையான நடவடிக்கை

போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன் ஆகியோர் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதிக்கு நேரடியாக சென்றனர். அங்கே கூடியிருந்த பொதுமக்களிடம் நந்தினி சாவுக்கு காரணமாக இருந்து வழிப்பறி கொள்ளையன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

நள்ளிரவில் கொள்ளையனை விரட்டிச் சென்று ஆசிரியை நந்தினி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியையே சோகத்தில் மூழ்கடித்து உள்ளது.

வழிப்பறி கொள்ளையனை தாக்கிப் பிடித்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு

ஆசிரியை நந்தினியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த வழிப்பறி கொள்ளையன் தனது மோட்டார் சைக்கிளில் சீனிவாசபுரம் குடிசைப்பகுதிக்குள் நுழைந்தான். ஆனால் அவன் சென்ற சாலை முட்டுச்சந்து ஆகும். இதனால் அவன் மீண்டும் பட்டினப்பாக்கம் லூப் சாலைக்கு வேகமாக வந்தான்.

அப்போது அங்கே திரண்டிருந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழிப்பறி கொள்ளையனை பார்த்ததும் ஆவேசமடைந்து உருட்டுக்கட்டையால் அவனை தாக்கி, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளினார்கள்.

அவனது ஹெல்மெட்டை பறித்து, அடித்து நொறுக்கினார்கள். அப்போது அங்கே வந்த போலீசார் பொதுமக்களின் தர்ம அடிக்கு இடையில் வழிப்பறி கொள்ளையனை காப்பாற்றி அழைத்து சென்றனர்.

ஆனால் ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் வழிப்பறி கொள்ளையனின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தனர்.

பிடிபட்ட வழிப்பறி கொள்ளையனின் பெயர் கருணா என்ற கருணாகரன் (வயது 29). அவன் மயக்கத்தில் இருந்ததால் அதற்கு மேல் விசாரிக்க முடியவில்லை. அவன் வைத்திருந்த நந்தினியின் பணப்பை மீட்கப்பட்டது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் அவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

‘‘மகளின் திருமணத்தை பார்க்க முடியவில்லையே...’’ நந்தினியின் தந்தை கண்ணீர் பேட்டி

வழிப்பறி கொள்ளையனை விரட்டி பிடிப்பதில் உயிரிழந்த ஆசிரியை நந்தினியின் பிரேத பரிசோதனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று காலை நடந்தது. பிரேத பரிசோதனை கூடத்தின் முன்பு, நந்தினியின் பெற்றோர் வடிவேல் மற்றும் இவருடைய மனைவி செல்வி சோகமே உருவாக வடிவில் அமர்ந்திருந்தனர்.

அப்போது நந்தினியின் தந்தை வடிவேல் கண்ணீருடன் நிருபர்களிடம் கூறியதாவது:–

எனது மகள் நந்தினிக்கு அடுத்த மாதத்தில் திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். இன்னும் ஓரிரு நாட்களில் நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்கள் குடும்பத்தையே நந்தினி தான் கவனித்து வந்தாள். அவளது சம்பள பணத்தில் தான் வீட்டுச்செலவு அனைத்தும் நடந்தது. அவள் உயிரிழந்ததை எங்களால் தாங்க முடியவில்லை. எனது மகளின் திருமணத்தை பார்க்ககூட முடியவில்லையே...

நந்தினி உயிரோடு இருந்திருந்தால் அவளது தம்பிக்கு நிச்சயம் வேலை வாங்கி தந்திருப்பாள். இன்று எங்களை எல்லாம் தவிக்கவிட்டு அவள் போய்விட்டாள். நிச்சயம் இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

உயிரிழந்த நந்தினியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பட்டினப்பாக்கத்தில் நடந்த சம்பவம்: சாகர் சாவில் முரண்பட்ட தகவல்

சென்னை பட்டினப்பாக்கத்தில் நடந்த சம்பவத்தில் முன்னாள் பொதுப்பணித்துறை ஊழியர் சாகர், கொள்ளையன் கருணாகரனின் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தார் என்று முதலில் தகவல் வெளியானது. போலீஸ் நிலையத்தில் அவ்வாறு தான் புகார் கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கருணாகரனின் மோட்டார் சைக்கிள் மோதி சாகர் இறந்தார் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் நந்தினியின் வாகனம் மோதியதில் தான் சாகர் இறந்துள்ளார் என்று தெரியவந்தது. அது தான் உண்மையான தகவல் என்று மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணனும் உறுதிப்படுத்தினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.