Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2016

சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயம் தேடும் பணி தீவிரம்


சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது.

29 பேருடன் சென்ற ராணுவ விமானம்

இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படை சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்படும். ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

அதேபோல், விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டு சென்றது. அதில் 2 விமானிகள் உள்பட 6 சிப்பந்திகளும், 23 ராணுவ வீரர்களும் பயணம் செய்தனர்.

திடீரென்று மாயம்

அந்தமான் தீவுக்கும் சென்னைக்கும் இடையேயான தூரம் 1,360 கிலோ மீட்டர் ஆகும். அந்த விமானம் காலை 11.30 மணிக்கு போர்ட்பிளேர் போய்ச் சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆனால் கிளம்பிச் சென்ற 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ரேடாரின் பார்வையில் இருந்து விமானம் மாயமானது. அதாவது, சென்னையில் இருந்து கிழக்கே சுமார் 370 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே நடுவானில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, விமானம் திடீரென்று காணாமல் போய்விட்டது.

கடலில் விழுந்து மூழ்கியதா?

மாயமான அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

விமானம் மாயமானதை அறிந்ததும், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கினார்கள்.

விமானங்கள், கப்பல்கள் தேடுகின்றன

போர்ட்பிளேர் நகரில் இருந்து 2 டோர்னியர் ரக விமானங்களும், அரக்கோணத் தில் இருந்து ஒரு டோர்னியர் விமானமும், அந்தமானில் இருந்து 3 விமானங்களும் ஏ.என்.-32 சரக்கு விமானம் மாயமான பகுதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் சென்னையில் இருந்து இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சாகர், சமுத்திர பெரேதார் என்ற இரு கப்பல்களும், போர்ட்பிளேர் நகரில் இருந்து ராஜஸ்ரீ, ராஜ்வீர் என்ற இரு கப்பல்களும் தேடுதல் பணிக் காக அங்கு விரைந்தன. மேலும் கடற்படை கப்பல்களும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
சரக்கு விமானத்துடன் கடைசியாக தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்துக்கு டோர்னியர் விமானம் சென்று வானில் பறந்தபடி, கடலில் ஏதாவது தடயங்கள் தெரிகிறதா? என தேடி வருவதாக கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மந்திரி தகவல்

காணாமல் போன விமானத்தையும், அதில் பயணம் செய்தவர்களையும் தேடி கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

வங்காள விரிகுடா கடலில் தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் கடற்படை முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக கடற்படையின் செய்தித் தொடர்பாளர் டி.கே.சர்மா கூறினார்.

ஆலோசனை கூட்டம்

சென்னையில் நேற்று மாலை இந்திய கடலோர காவல்படையின் தென் பிராந்திய ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா தலைமையில் கடலோர காவல்படை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாயமான விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல் படையின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர் அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் பேசுகையில், காணாமல் போன விமானத்தில் பயணம் செய்தவர்களில் ஒருவர் கடலோர காவல்படையைச் சேர்ந்தவர் என்றும், அவர் அந்தமான் நிக்கோபார் பகுதியில் பணியாற்றிவர் என்றும் கூறினார். தேடும் பணிக்கு உகந்த வானிலை இல்லை என்ற போதிலும், அதை பொருட்படுத்தாமல் மாயமான விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷியாவில் தயாரானது

மாயமான ஏ.என்.-32 சரக்கு விமானம் ரஷியாவில் தயாரானது. இந்திய விமானப்படையில் சுமார் 100 ஏ.என்.-32 ரக விமானங்கள் உள்ளன. மிகவும் நம்பகமான விமானம் என்று கருதப்படும் இந்த விமானம் எத்தகைய பருவநிலையிலும் பறக்கக்கூடியது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் தொடர்ந்து 4 மணி நேரம் பறக்கக்கூடியது. இந்த விமானம மேலெழும்புவதற்கும், தரை இறங்குவதற்கும் குறைந்த தூர ஓடுதளமே போதுமானது. மலைப்பாங்கான இடங்களில் 4,500 மீட்டர் உயரம் உள்ள விமானப்படை ஓடுதளங்களிலும் இந்த விமானத்தை எளிதாக தரை இறக்க முடியும்.

ராணுவ வீரர்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்லவும், ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும் இந்த விமானம் பயன்படுத்தப்படுகிறது. சரக்குகளை ஏற்றி, இறக்குவதற்கான நவீன வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன.

கடந்த ஆண்டில் நடந்த விபத்து

கடந்த ஆண்டும் இதேபோன்ற ஒரு விபத்து நடந்தது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி டோர்னியர் ரக விமானம் ஒன்று பயிற்சிக்காக புதுச்சேரி வரை சென்று விட்டு சென்னை திரும்பி வந்த போது திடீரென்று மாயமாகி விட்டது. அந்த விமானத்தில் விமானி எஸ்.வித்யாசாகர், துணை விமானிகள் சுபாஷ் சுரேஷ், எம்.கே.சோனி ஆகிய 3 பேர் பயணம் செய்தனர்.

ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு கிழக்கே அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியதும் அதில் இருந்த 3 பேரும் பலியானதும் உறுதி செய்யப்பட்டது. ஜூலை 15-ந் தேதி கடலுக்கு அடியில் 950 மீட்டர் ஆழத்தில் இருந்து கருப்புப்பெட்டி உள்ளிட்ட விமானத்தின் பல பாகங்கள், விமானிகளின் கைக்கெடிகாரங்கள், எலும்புகள் ஆகியவை மீட்கப்பட்டன.

சென்னையில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்கு சென்ற ராணுவ விமானம் திடீரென்று மாயமானது. அது கடலில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மாயமான அந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.