Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2016

புழல் ஜெயிலில் 2 மணி நேரம் நடந்தது; சுவாதி கொலையில் குற்றவாளியை உறுதிசெய்ய அடையாள அணிவகுப்பு; ராம்குமாரை, சுவாதியின் தந்தை அடையாளம் காட்டினார்


சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை உறுதி செய்ய நீதிபதி முன்னிலையில் 2 மணி நேரம் புழல் ஜெயிலில் அணிவகுப்பு நடந்தது. அப்போது ராம்குமாரை சுவாதியின் தந்தை அடையாளம் காட்டினார்.

சுவாதி கொலை வழக்கு

சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் சந்தானகோபாலகிருஷ்ணன். இவருடைய மகள் சுவாதி. மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 24-ந்தேதி காலை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், கொலையை பார்த்த சாட்சிகளையும் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரை (வயது 24) போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

அணிவகுப்பு

போலீசார், ராம்குமாரை கைது செய்ய முயன்ற போது அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். இதனால் அவர் சிகிச்சைக்காக புழல் ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராம் குமார் அடைக்கப்பட்டிருந்த அறையை 24 மணி நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளை கொண்டு கொலையாளியை அடையாளம் காட்ட புழல் ஜெயிலில் அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இந்த அணிவகுப்பை பார்வையிட நீதிபதியை நியமிக்குமாறு எழும்பூர் தலைமை நீதிபதியிடம் நுங்கம்பாக்கம் போலீசார் மனு செய்தனர். இதையடுத்து அணிவகுப்பு நடத்துவதை பார்வையிடுவதற்காக சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிபதி ஆர்.சங்கர் நியமிக்கப்பட்டார்.

அடையாளம் காட்டினார்

அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆர்.சங்கர் ஒரு காரிலும், சாட்சிகளான சுவாதியின் தந்தை சந்தானகோபாலகிருஷ்ணன், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சிவகுமார், நுங்கம்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் தேவராஜ், சைதாப்பேட்டை கோர்ட்டு அலுவலக உதவியாளர் தனவேல் ஆகியோர் ஒரு போலீஸ் ஷீப்பிலும் புழல் ஜெயிலுக்குள் சென்றனர்.

அங்கு ஜெயில் சூப்பிரண்டு அன்பழகன், 40 கைதிகளை ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த அறை அருகே நிறுத்திவைத்தார். ராம்குமாரின் ஒத்த வயதுடைய 9 கைதிகளை தேர்வு செய்து அவருடன் வரிசையாக நிறுத்தி சுவாதியின் தந்தையை அழைத்து அடையாளம் காட்டுமாறு நீதிபதி சங்கர் கூறினார். தன் மகளை 10 நாட்களாக பின் தொடர்ந்து வந்தது இவர் தான் என ராம்குமாரை சுவாதியின் தந்தை அடையாளம் காட்டினார்.

முழு ஒத்துழைப்பு

இதையடுத்து பெட்டி கடைக்காரர் சிவகுமாரை அழைத்து அடையாளம் காட்டுமாறு கூறினர்.

அதற்கு அவர் ராம்குமாரை காட்டி நான் பார்த்த நபர் இவர் போல் தான் இருந்தார் என கூறியதாக தெரிகிறது. 2 மணி நேரம் நடைபெற்ற அணிவகுப்பை முடித்துக்கொண்டு 12.30 மணிக்கு நீதிபதி சங்கர் வெளியே வந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நீதிபதி சந்திரன் உத்தரவின் பேரில் நான் புழல் ஜெயிலில் அணிவகுப்பு நடந்ததை பார்வையிட்டேன். சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு கொடுத்த வரைமுறைக்குள் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அங்கு நடந்த விவரங்களை அறிக்கை மூலம் ‘சீல்’ வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். வழக்கு தொடர்ந்து நடை பெறுவதால் மேற்கொண்டு தகவல்களை சொல்ல இயலாது. அணிவகுப்புக்கு ராம்குமார் முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.